கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படேன்

February 1, 2013

1991ஆம் ஆண்டில் நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னுடைய வீட்டிற்கு ஒருமுறை சாது ஸ்டீபன் அவர்கள் வந்தார்கள். நான் அச்சமயம் கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தனியாக வசித்து வந்தேன். அவர்கள் என்னை அருகிலிருந்த ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த உறவினர் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் தீவிரமாக பணம் சேகரித்து அனுப்புவதிலும் சிறு ஜெபக் குழுக்களைக் கூட்டி பத்திரிக்கையில் வரும் ஜெபக் குறிப்புகளுக்காக ஜெபிப்பதிலும் மிகவும் உற்சாகமாய் காணப்பட்டார். மேலும் அவர் அருகிலிருந்த வங்கியில் பணியாற்றியும் வந்தார். அவருடைய தகப்பனார் ஒரு “பெரிய வக்கீல்” மேலும் பல பெரும்புள்ளிகள் அவருடைய குடும்பத்தில் இருந்தார்கள்.


அந்நாட்களில் எனக்கு நான் அங்கம் வகித்த சபையில் எலக்ட்ரானிக் பியானோ வாசிப்பதும், மேலும் அருகிலிருந்த மற்றொரு சபையில் கிட்டார் வாசிப்பதும் வழக்கமாக இருந்தது. சிறு வயதிலிருந்தே என்னுடையத் தகப்பனாரின் சபையில் “கொட்டு” அடித்த அனுபவத்தில் பாடல் வேளைகளில் சபையாரை உற்சாகமடையச் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி, அதுவே எனது பிரதானமான ஊழியமாக நினைத்து வந்த நேரம் அது.
நான் சென்றிருந்த அந்த வீட்டிலிருந்த எங்கள் உறவினர், என்னிடம் “தம்பி, ஞாயிற்றுக் கிழமை மதியம் வேளைகளில் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். நான் அவரிடம், “ஒன்றும் செய்வதில்லை”, என்று கூறினேன். பின்பு அவர் என்னுடைய வீட்டு விலாசத்தை வாங்கிக் கொண்டார். எனக்கு அவர் எதற்கு அவர் என் வீட்டு விலாசத்தைக் கேட்டார் என்று புரியவில்லை. பின்பு நான் இந்த உரையாடலை மறந்தும் போய்விட்டேன்.
மறுவாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தது. என்னுடைய வழக்கமான ஊழியமாகிய இரண்டு ஆராதனைகள், இரண்டு வாத்திய வாசிப்பு எல்லாம் முடிந்தது. முனியாண்டி விலாசில் சாப்பிட்டு விட்டு, வீட்டிற்கு வந்து, பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது, அந்த உறவினர் வந்துவிட்டார். நான் அவரிடம், “எதற்காக வந்தீர்கள்?” என்றுக் கேட்டேன் அவர் “என்னுடன் வாருங்கள்” எனக் கூறி என்னை அழைத்துச் சென்றார். சிறிது தூர பைக் பயணம். பின்பு ஒரு வீட்டை அடைந்தார். அங்கே சில பெரியவர்கள் ஒன்றுகூடி சில நற்செய்திப் பாடல்களைப் பாடி சிறிது நேரம் கூடி ஜெபித்துப் பின்பு “ஒலி பெருக்கியின்” உதவியுடன், சென்னையில் பிரதான வீதிகளில் எல்லாம் தெரு பிரசங்க ஊழியம் செய்து வந்தார்கள்.


நான் இளைஞனாக இருந்தபடியால் எனக்கு ஒலிபெருக்கியை தூக்கிப்பிடிக்கும் ஊழியம் கொடுக்கப்பட்டது. சில வாரங்கள் கழிந்த நிலையில், அந்த குழுவில் இருந்த பிரபல வக்கீல் “கால்வின் ஜேக்கப்” அவர்கள் என்னிடம் வந்து “தம்பி, இந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது, எனவே நீ தான் தெருப் பிரசங்கம் செய்யவேண்டும் என்று கூறினார்கள்.” நான் உடனடியாக, அங்கிள் இந்தப் பகுதியில் என்னுடைய கம்பெனியில் பணிபுரியும் அநேக பணியாளர்கள் வசிக்கிறார்கள். எனவே என்னால் இங்கு தெருவில் நின்று பிரசங்கம் பண்ண பயமாக இருக்கிறது என்று கூறினேன். உடனே அவர்கள் என்னிடம் “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படக் கூடாது” என்றார்கள். மேலும் சிலர் என்னிடம் நான் பிரசங்கிக்கும்போது என்னுடைய நண்பர்கள், உடன் பணிபுரிவோர், வாடிக்கையாளர்கள் என பலர் பார்த்திருக்கிறார்கள். நான் ஒருக்காலும் வெட்கப்பட்டதில்லை” என்று கூறி உற்சாகப் படுத்தினார். இவ்வாறாக, நானும் என்னுடைய தெருப்பிரசங்க ஊழியத்தைத் தொடங்கி, 5 வருடங்களாக வாரந் தவறாமல் சென்னையிலும்; பின்பு மதுரையிலுள்ள பல கிராமங்களிலும் தொடர தேவன் கிருபை செய்தார். எதிர்ப்புகளை சந்தித்ததே இல்லை. அநேக மக்கள் எங்களை அன்புடன் ஏற்றுக்கொண்டு, ஜெபிக்கக் கேட்டுக்கொண்ட சம்பவங்கள் பற்பல. சுவிசேஷ ஊழியம் செய்வோம். ஆண்டவர் உலகத்தின் முடிவுவரை நம்மோடு இருப்பார்.


“கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” ரோமர் 1:16



Author

You May Also Like…

Share This