கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே
தேவன் திருச்சபை மக்கள் அறிவிலும் செல்வாக்கிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் ஐசுவரியமுள்ளவர்களாக வேண்டும் என்று விரும்புகிறார். நீதி.22:4 வசனத்தில், “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.” மகிமை தேவனால் கொடுக்கப்படும் உயர்வு, ஜீவனுள்ள தேவனுடைய கிருபையால் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஐசுவரியம், மகிமை, ஜீவன் இவை மூன்றும் மிகவும் முக்கியம். இவைகளைப் பெற வழி தாழ்மையோடும், கர்த்தருக்குப் பயப்படுதலோடும் காணப்பட வேண்டும்.
தாழ்மை எல்லாராலும் அறியப்பட வேண்டும். இயேசு கிறிஸ்து தாழ்மையின் சின்னமாக காணப்படுகிறார். இயேசு (மனித உடலில்) மாமிச சரீரத்தில் கன்னியின் வயிற்றில் பிறந்ததே தாழ்மை. ஏழை பெற்றோருக்குப் பிறந்ததே தாழ்மை. ஏழ்மையினால் பலி கொடுக்க காட்டுப் புறாவை கொண்டுவந்து பலி செலுத்தினர். யோசேப்பின் குடும்பத்தில் அவருடன் தச்சு வேலை செய்தார். பெற்றோருக்கு 30 வயது வரை அடங்கி இருந்ததே தாழ்மை. ஞானஸ்நானம் எடுக்க மனிதனுக்கு கீழ்ப்படித்தி யோர்தானில் யோவானால் ஞானஸ்நானம் எடுத்ததே தாழ்மை. அடிமையின் ரூபம் எடுத்து மனித சாயலாக மாறியதே தாழ்மை, நியாயப்பிரமாணத்திற்கு உட்படுத்தியதே தாழ்மை, சீஷர்களின் கால்களை கழுவியதே தாழ்மை. பாடுகளுக்கு உட்படுத்தியது தாழ்மை. வாரினால் அடிக்கப்படவும், முகத்தில் துப்பப்படவும், நிந்திக்கவும், அவமானப்படுத்தப்படவும் ஒப்புக்கொடுத்ததே இயேசுவின் தாழ்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் பிறப்பிலிருந்து இழிவான சிலுவை மரணம் வரை இயேசுவின் தாழ்மையை ஒவ்வொரு காரியத்திலும் நாம் காண முடியும்.
நீதி.29:23 வசனத்தில், “மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்” என்றும் மேலும் யாக்.4:10 வசனத்தில், “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப் படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” என்று கூறப்பட்டுள்ளது. நாம் நம்மை தாழ்த்தும்போது என்ன பலன்கள் கிடைக்கிறது? என்பதை பார்ப்போம்.
நீதிமானாகிறோம்
லூக்.18:13 வசனத்தில், “…தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்” அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான் என்றார் இயேசு. மனிதர்கள் தன்னை பாவ என்று உணர்ந்து தாழ்த்தும்போது மட்டுமே நீதிமானாக மாற்றப்படுகிறார்கள்.
தாழ்மையே கனத்தைக் கொண்டுவரும்
நீதி.29:23, “மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்” என்கிறார் ஞானி. மனத்தாழ்மையே கனத்தைக் கொண்டுவரும். தாழ்மையின் ரூபத்தை எடுத்த இயேசுவோடு இணைந்திருக்கும்போது மட்டுமே தொடர்ந்து கனமடைவோம். மேலும் 2நாளா.7:14 வசனத்தில் தாழ்த்தும்போது மட்டுமே அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன் என்கிறார். இறங்கி வந்தால் மட்டுமே ஆசீர்வாதம். பெருமையோடு காணப்பட்டால் ஆசீர்வதிக்கப்பட முடியாது. தாழ்த்தினால் மட்டுமே ஆசீர்வதிக்கப்படுவோம்.
தாழ்மையே உயர்வைக் கொண்டுவரும்
யாக்.4:10 வசனத்தில், “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப் படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” என்கிறார் யாக்கோபு அப்போஸ்தலன். கர்த்தருக்கு முன் தாழ்த்தும் போது மட்டுமே தேவன் உயர்த்துவார். தேவன் ஒவ்வொரு விசுவாசியையும் உயர்த்தவே விரும்புகிறார். ஆனால் நன்றியோடு கூடிய துதியும், தாழ்மையும் தேவை. ஆபிரகாம் லிங்கன் மிகவும் தாழ்மையானவர். அவர் ஜனாதிபதி பதவிக்கு நிற்கும்போது, “விறகு வெட்டி”யாக தான் இளமையில் வாழ்ந்ததாக கூறி ஓட்டு கேட்டார். வெற்றி பெற்றார்.
வேதப் புத்தகத்திலிருந்து தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்திய நபர்களை பார்ப்போம்:
1சாமு.9:21 “நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.” – சவுலின் தாழ்மையைப் பார்த்து உயர்த்தினர்.
2சாமு.7:18 வசனத்தில் தாவீதின் தாழ்மையைப் பார்க்கலாம் “…தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?” என்றார்.
ஆதி.32:10 “அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்” என்று யாக்கோபு தாழ்மையாக கூறினார். மேலும் 2நாளா.33:12 மனாசேயின் தாழ்மையை காணலாம் “இப்படி அவன் (மனாசே) நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்”
2நாளா.12:6 ரெகோபெயாமின் தாழ்மை “அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்திக் கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.” லூக்.15:18-20 வசனங்களில் இளைய குமாரனின் தாழ்மையைக் காணலாம் “இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்…” என்று கூறி தன்னை மிகவும் தாழ்த்தினான், எனவே தகப்பன் மகனாக ஏற்றுக்கொண்டார். பெருமையினால் உயர உயரப் போகிறவனைப் பார்த்து சாத்தான் சிரிப்பான், எவ்வளவு உயரத்திலிருந்து விழுவோம் அதையே சாத்தான் விரும்புகிறான்.
தாழ்மையே வெற்றியைக் கொண்டுவரும்
கர்த்தர் தாழ்மையைக் கண்டு ஜெயத்தைக் கட்டளையிடுகிறார். சங்.40:17 – “நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்;” சங்.41:11 ல் “என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.”
தேவன் தாழ்மையைப் பார்த்து உயிர்ப்பிக்கிறார்
லூக்.15:18,19,20 வசனங்களில், இளைய குமாரன் தேவனுக்கு முன்பாகவும், தன் தகப்பனுக்கு முன்பாகவும் மிகவும் தாழ்த்தியதால் தேவன் திரும்பவும் உயிர்ப்பித்தார்.
தேவன் தாழ்மையுள்ளவர்களிடம் வாசம் பண்ணுவார்
ஏசா.57:15 வசனத்தில், பணிந்தவர்களின் ஆவியையே தேவன் உயிர்ப்பிக்கிறார். தொடர்ந்து தேவ சமூகத்தில் தாழ்த்திக்கொண்டு இருந்தால் மட்டுமே தொடர்ந்து நம்முடன் தேவன் வாசம் பண்ணுவார்.
தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறார்
லூக்.18:13 வசனத்தில், “ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்” தாழ்மையுள்ளவர்களுக்கு மட்டுமே கிருபை கிடைக்கிறது. மேலும் மத்.18:4 வசனத்தில், “…தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.”
இதை வாசிக்கும் அன்பு நேயரே! நம் தேவன் மனத்தாழ்மையை அல்லாமல் வேறு எதையும் கேட்பது இல்லை. தேவனுக்கு முன்பாக தாழ்மையாக இருக்கும்போது கிடைக்கும் பலன் என்ன என்பதை பார்த்தோம். தாழ்மையாக இருக்கும்போது நீதிமானாக்கப்படுகிறோம், கனமடைகிறோம். தாழ்மையுள்ளவர்களையே தேவன் உயர்த்துகிறார். தாழ்மையுள்ளவர்களையே தேவன் வெற்றியடையச் செய்கிறார். தாழ்மையுள்ளவர்களையே தேவன் உயிர்ப்பிக்கிறார். தேவன் தாழ்மையுள்ளவர்களிடம் வந்து வாசம் பண்ணுவார். மேலும் தாழ்மையுள்ளவர்களைக் கிருபையினால் அலங்கரிப்பார் என்று பார்த்தோம். மேலும் தாழ்மைக்கும், கர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம். தேவன் நாம் ஒவ்வொருவரும் தாழ்மையாய் நடந்து அவர் தரும் ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க கிருபை செய்வாராக! ஆமென்.




