உங்களைக்  காக்கும் நிழல் எப்படிப்பட்டது?

Written by Pr Thomas Walker

December 5, 2022

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவப்பிள்ளைகளே!

நம் தேவனுக்கு ஒரு நாமம் உண்டு. அதென்னவென்றால் அவர் வெயிலுக்கு ஒதுங்கும் நிழல் என்பதே (ஏசாயா 25:4). உன்னதமானவரின் மறைவு சர்வ வல்லவரின் நிழலுக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்க்கும். நிழல் நமக்கு வெயிலிலிருந்து பாதுகாப்பு தருகிறது. ஆனால் சர்வ வல்லவரின் நிழலோ நமக்கு வியாதியிலிருந்து, ஆபத்துகளிலிருந்து, திடீர் நிகழ்வுகளிலிருந்து, கொடியவர்களிடமிருந்து பாதுகாப்பு தருகிறது.

வேதாகமத்தில் பலவகையான நிழல்களைப் பார்க்கிறோம். அவற்றுள் சிலவற்றைப் பற்றி நாம் ஆராயலாம்.

1. விலகும் நிழல்கள் (எண்.14:9)

கானான் தேசத்தில் ஏழு விதமான ஜாதிகள் வசித்து வந்தனர். கானானியர் தங்களுக்கு பாதுகாப்பு தரும் என நம்பி பல தேவர்களை, தேவதைகளை வழிபட்டு வந்தனர். அவைகளே தங்களைக் காக்கும் நிழல் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ஆனால் அவைகளால் தங்களுக்கு மாயையான பாதுகாப்பை மட்டுமே தரமுடியும் என்பதை உணரவில்லை. சிலர் மந்திரித்து கயிறுகளைக் கட்டுவதும், தாயத்துகளைக் கட்டுவதும் தங்களுக்கு பாதுகாப்பு தரும் என்று கருதுகின்றனர். சர்வ வல்லவரின் நிழலையன்றி, எதுவும் நம்மைக் காப்பாற்ற முடியாது. தேவன் கடந்து சென்றபோது அந்நிய நிழல்கள் விலகிப் போயிற்று. தேவப் பிரசன்னத்துக்கு முன்பாக அவைகளால் நிற்க முடியவில்லை. இஸ்ரவேலைக் காக்கும் தேவன் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை. அவர் நம்மைத் தமது உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். அவர் கண்ணின் மணியைப்போல நம்மைக் காப்பாற்றுகிறார். அவரது நிழலே நமக்கு நிரந்தர பாதுகாப்பைத் தரமுடியும்.

2.  முட்செடியின் நிழல் (நியா.9:15)

முட்செடிகளின் நோக்கம் கேதுரு மரங்களை அழிப்பதாகும். பத்து அடி உயரம் வரை வளரக்கூடிய முட்செடிகள் உள்ளது. சில முட்செடிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து காணப்படும். முட்செடிகள் குத்தும் தன்மையுடையவை. முட்செடியிலிருந்து அக்கினி பற்றுமே ஒழிய வேறு எந்த பயனும் கிடைப்பதில்லை. முட்செடி பெருமையாகப் பேசுவதையும் அதன் முடிவையும் 2இராஜா.14:9ல் பார்க்கிறோம். முள்செடிகளையும், முட்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது. சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு (எபி.6:8). அப்சலோம் அபிஷேகிக்கப்பட்ட தனது தகப்பனுக்கு விரோதமாக எழும்பினதினால் சன்னல் பின்னலான முட்செடியில் சிக்கி மரணமடைந்தான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தாலும் உலகக் கவலையும், ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனால் பலன் கொடுக்க முடியவில்லை (மத்.13:22). முட்செடிகள் ஒருபோதும் தேவன் விரும்பும் கனிகளைக் கொடுக்க முடியாது. அது மாயையான நிழலையே தோற்றுவிக்கிறது.

3. எகிப்தின் நிழல் (ஏசாயா 30:2)

எகிப்து என்பது பின்மாற்றத்தைக் குறிக்கிறது. நாய்கள் தாங்கள் கக்கினதை திரும்ப தின்பதுபோல பின்மாற்றக்காரரும், தாங்கள் விட்டு வந்த பாவ வாழ்க்கைக்கே திரும்பிப் போய்விடுகிறார்கள். தேவன் வாக்குத்தத்தம் பண்ணின கானானின் ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கப் பிரயாணப்பட்ட இஸ்ரவேலர் தங்களை கொத்தடிமைகளாக நடத்திய எகிப்து நாட்டிற்கு தங்கள் மனதிலே திரும்பினார்கள். பாலும் தேனும் ஓடுகிற செழிப்பான கானானை சுதந்தரிப்பதை விடுத்து எகிப்திலே வெள்ளரிக்காய்களையும், கொம்மடிக்காய்களையும், வெங்காயங்களையும் சாப்பிட்டதையே நினைத்துக் கொண்டிருந்தார்கள். விட்டு வந்த காரியங்களை நினைத்து ஏங்குவது எகிப்தின் நிழல்.

எகிப்தியரின் நிழல் நமக்கு இலச்சையை உண்டுபண்ணும் (ஏசாயா 30:3-7). அந்த நிழல் சகாயத்திற்கும் பிரயோஜனத்திற்கும் உதவாமல் வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும். எகிப்தியர் நமக்கு சகாயம் பண்ணுவது வீணாயிருக்கும் என்று வேதம் நமக்குப் போதிக்கிறது. எகிப்து அடிமைத்தனத்தின் நிழலைக் குறிக்கிறது. எகிப்திற்குத் திரும்பிப் போக நினைப்பவர்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளாதவர்கள், எகிப்தியரின் முரட்டாட்டக்காரர் (ஏசாயா 30:2) முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரி என்று 1சாமு.15:22ல் வாசிக்கிறோம். எகிப்தின் நிழல் நிழல்போல் தோன்றினாலும் அது பின்மாற்றத்தையும், அடிமைத்தனத்தையும், முரட்டாட்டத்தையுமே கொண்டுவரும்.

4. மனித ஆராதனையாகிய நிழல் (தானி.4:12)

பாபிலோனிய ராஜ்யம் சர்வ வல்லமையுள்ள ராஜ்யமாக இருந்தது. பொன்னும் வெள்ளியும் பல நாடுகளிலிருந்து ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு கொண்டுவரப்பட்டது. பாபிலோனின் நிழலிலே மிருகங்கள் ஒருங்கின என்று தானி.4:12ல் பார்க்கிறோம். சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பாபிலோன் 360 அடி உயரமுள்ள கோட்டையை உடையதாய் இருந்தது. 220 குதிரைகள் ஓடக்கூடிய ஓடுதளத்தைக் கொண்டிருந்தது. யூப்ரடிஸ் நதி நகருக்குள் ஓடியது. பாபிலோனியர் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் நிழலிலே நிம்மதியாக இருப்பதுபோல் தோன்றியது.

ஆனால் ஒருநாள் பாபிலோன் ராஜ்ஜியம் மேதியரால் பிடிக்கப்பட்டது. ஒரு தனி மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவனது நிழலில் தங்க நினைப்பது அடிமைத்தனத்தைக் கொண்டுவரும்.

5. சூரைச் செடியின் நிழல் (1இராஜா.19:4)

எலியா தீர்க்கதரிசி பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக வைராக்கியமாய் நின்று கர்த்தரே தெய்வம் என்பதை நிரூபித்தான். அவன் கருத்தாய் ஜெபம் பண்ணினபோது தேவன் அவன் சத்தத்தைக் கேட்டு வானத்தைத் திறக்கவும், வானத்தை அடைக்கவும் அதிகாரம் கொடுத்தார் (யாக்.5:17). ஆனால் யேசபேல் தன் பிராணனை வாங்கத் தேடுகிறாள் என்று அறிந்தபோது வனாந்தரத்திற்கு ஓடிப்போய் ஒரு சூரைச் செடியின் நிழலில் படுத்துக்கொண்டு போதும் கர்த்தாவே என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் என்று சொல்லி, விண்ணப்பம் பண்ணினான். அங்கு தேவன் தமது தூதன் மூலமாக அவனை போஷித்தார். சூரைச் செடியின் நிழல் நிரந்தரமானதல்ல. எலியா தேவ சத்தத்திற்கு கீழ்படிந்து சூரைச் செடியை விட்டு எழுந்து ஓரேப் மட்டும் நாற்பது நாள் இரவும், பகலும் நடந்து போனான். சூரைச் செடியின் நிழலை விட்டு எழும்பினபடியால் அவனால் ஆசகேல் என்னும் ராஜாவை அபிஷேகம் பண்ணவும், எலிசா என்னும் ஒரு மாபெரும் தீர்க்கதரிசியை உருவாக்கவும் முடிந்தது.

சூரைச் செடியின் நிழல் தோல்வியின் நிழலைக் குறிக்கிறது. அதைவிட்டு எழும்புவோமானால் உன்னதமான இடத்திற்கு தேவன் நம்மைக் கொண்டுபோவார்.

6. ஆமணக்கின் நிழல் (யோனா 4:6)

இது அற்ப சந்தோஷமாகிய நிழல். நினிவே ஜனங்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பியபோது தேவன் அவர்களுக்காக மனஸ்தாபப்பட்டார். அவர்களுக்கு செய்ய நினைத்த தீங்கை செய்யாதிருந்தார். தான் கூறிய தேவ வார்த்தைகளின்படி நினிவே நாற்பது நாட்களில் கவிழ்க்கப்பட்டு போகாததைக் கண்ட யோனா கடுங்கோபங் கொண்டான் (யோனா 4:1). அவனது மனமடிவை நீக்கவும், அவனுக்கு நிழலுண்டாக்கவும் தேவன், ஒரு ஆமணக்குச் செடியை வளரப் பண்ணினார். யோனா ஆமணக்குச் செடியின் நிழலிலே சந்தோஷமாக இருந்தான். மறுநாள் செடி தேவனால் அனுப்பப்பட்ட ஒரு பூச்சியினால் அரிக்கப்பட்டு போனது. யோனா சோர்ந்துபோய் எரிச்சலுள்ளவனானான்.

வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதிருந்த, ஆயிரக்கணக்கான மக்கள் மனந்திரும்பியதைக் கண்டு கோபங்கொண்ட யோனா, அற்ப சந்தோஷமாகிய ஆமணக்கின் நிழலிலே களிகூர்ந்தான். அற்ப சந்தோஷமாகிய நிழல் சிலகாலம் மட்டுமே நிலைநிற்கும். அவை நிரந்தரமானவையல்ல.

7. கிச்சிலிமர நிழல் (உன்.2:3)

நம் தேவனே கிச்சிலி மர நிழல். கிச்சிலி மரத்தின் நிழலிலே நாம் ஆறுதலடைய முடியும். உன்னதமானவரின் செட்டைகளின் நிழல் துன்மார்க்கரிடமிருந்தும், பகைஞரிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றும் (சங்.17:9). தேவனுடைய நிழலின் மறைவிலே காக்கப்பட்ட சங்கீதக்காரன் விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் என்றும் (சங்.57:1). உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் (சங்.63:7) என்றும் கர்த்தர் உன் வலது பக்கத்திலே உன் நிழலாயிருக்கிறார் (சங்.121:5) என்றும் பாடுகிறார். அவர் ஒரு பெருங் கன்மலையின் நிழல் (ஏசாயா 32:2). தீங்கு நம்மை அணுகும்போது அவர் தமது கரத்தின் நிழலினால் நம்மை மூடிக்கொள்வார்.

Author

You May Also Like…

Share This