அவர் நாமம் அதிசயம்

Written by Pr Thomas Walker

December 21, 2007

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
என் நாமம் அதிசயம் என்றார். அவர் எங்கும் செய்யாத பெரிய அதிசயங்களைச் செய்கிறவர். எண்ணி முடியாத பெரிய அதிசயங்களை நம் வாழ்வில் செய்கிறவர். அவர் அற்புதங்கள் செய்வதில் சலித்துப் போவதில்லை. அவர் செய்கிற அதிசயங்களின் நிமித்தம் அவரைத் துதிக்க வேண்டும். ஜனங்களுக்குள் அவருடைய அதிசயங்களை விவரிக்க வேண்டும். பின்வரும் சந்ததிக்கு அவருடைய அதிசயங்களை விவரித்துச் சொல்ல வேண்டும். தன்னுடன் உடன்படிக்கை செய்தவர்களுக்கு மட்டும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்கிறார். “இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்” (யாத்.34:10) என்று மோசேயோடு சொன்னார். இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் 40 வருடங்கள் பிரயாணமாய் வரும்போது அவர்கள் வாழ்வில் ஒரு குறைவும் ஏற்படாத வண்ணம் அதிசயங்களைச் செய்து வழிநடத்தினார். அவரைச் சார்ந்து வாழும் ஜனங்களுக்கு அவர் அற்புதங்களைச் செய்ய வல்லவர்.
அவர் செய்த அதிசயங்களை நினைவு கூருங்கள் (1நாளா.16:13) என்றும் உமது வேதத்தில் உள்ள அதிசயங்களைப் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும் என்கிறார். எரே.32:17ல் உம்மால் செய்யக்கூடாத அதிசயம் இல்லை என்று தீர்க்கதரிசி கூறுகிறார். இன்று கர்த்தரின் அதிசயங்கள் எப்படிப்பட்டவை? எப்படியெல்லாம் அதிசயம் செய்கிறார் என்று சிந்திப்போம்.

முதலாவதாக சிருஷ்டிப்பில் அதிசயம்
சங்.139:14ஆம் வசனத்தில் “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” என்று தாவீது கூறுகிறார்.
தேவன் மனிதனை மற்ற சிருஷ்டிகளைப் போல தன்னுடைய வார்த்தையினால் உண்டாக்க வில்லை. களிமண்ணினால் தன் கையாலேயே செய்து ஜீவ சுவாசத்தை ஊதி ஜீவனுள்ள ஒரு ஆத்துமாவாகப் படைத்தார். சிருஷ்டிப்புகளுக்கு எல்லாம் கிரீடமாகப் படைத்தார். சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்திலும் பூமியிலும் வாழுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் மனிதனை ஆசீர்வதித்தார். மனிதனுக்கு ஞானத்தையும், திறமைகளையும் கொடுத்தார். Computer, Aeroplane போன்றவற்றை உண்டாக்கின மனிதனின் சக்தி மிகவும் ஆச்சரியப்படத் தக்கது. மனித உடலில் உள்ள நரம்புகள் அனைத்தையும் சேர்த்தால் ஒரு மனித நரம்பினால் முழு உலகையும் ஒருமுறை சுற்றலாம். இது தேவனின் அற்புதமல்லவா? மனித ஆன்மாவின் திறனும் மிகவும் அதிகம். ஒரு மனிதனில் காணப்பட்ட 6000 பிசாசுகள் 2000 பன்றிகளுக்கு சென்றது என்று வேதத்தில் பார்க்கிறோம். அப்படியானால் 1 பன்றிக்குள் போனது 3 பிசாசுகள் தான். ஆனால் அதையே பன்றியால் தாங்க முடியாமல் சமுத்திரத்தில் போய் மாண்டது. The capacity of the human soul is more.
ஒரு மிஷனெரி, நாய் ஒன்றை வளர்த்தார். திடீரென்று மிஷனெரி மரித்தார். துயரத்தை தாங்க முடியாமல் நாயும் உடனே செத்துவிட்டது. ஆனால் மனிதன் எத்தனையோ மரணங்களையும் தாங்குகிறான்.
தேவன் வான மண்டலத்தில் உள்ள அனைத்தையும் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கினார். எபி.1:3ஆம் வசனத்தில் ‘தேவன் சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் இருக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறார். நட்சத்திரங்களையெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். வானத்திலும் பூமியிலும் அவரைப் போல அதிசயங்களைச் செய்யத்தக்க தேவன் இல்லை.

இரண்டாவதாக தமது ஜனங்களுக்காக செங்கடலை இரண்டாகப் பிளந்தார்
சங்.78:12,13 “அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்”
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப் பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.
இன்றும் தேவன் தம்மை நேசிக்கிற தம்முடைய பிள்ளைகளுக்காக புதிய பாதைகளைத் திறக்கிறார். நம்பினால் உனக்கும் செய்வார். நாம் தவறுகள் செய்து அவரைவிட்டு வழிவிலகிப் போனால் நாம் செய்த தவறுகளிலேயே நாம் தப்பிக்க முடியாமல் மாட்டுவோம். அதிசயம் நடக்காது.


ஆனால் இஸ்ரவேலரின் வாழ்க்கையில் தேவனே அவர்களை வனாந்திர வழியாக செங்கடலைக் கடக்கும்படி நடத்தியதால் அவர் ஒரு அற்புதத்தை செய்தார். அவர் நடத்தும் பாதையில் நீ நடந்து வந்தால், நீங்கள் சும்மாயிருப்பீர்கள். தேவன் அற்புதங்களைச் செய்து பாதைகள் இல்லாவிட்டாலும் புதிய பாதைகளைத் திறக்கிறார். ஒரு கீழ்க்காற்றை அனுப்பினார். யாத்.14:21 வசனத்தில் கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி, அதை வறண்டுபோகப் பண்ணினார். ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. மேலும் யாத்.15:10 வசனத்தில் “உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்”. ஆம், பிரியமானவர்களே! அற்புதங்களைச் செய்கிறவருமாகிய தேவனுக்கு ஒப்பானவர் யார்?
ஒரு மிஷனெரியின் குழந்தை உயரமான இடத்தில் இருந்து எதிர்பாராத விதத்தில் விழுந்தான். அந்த சமயம் அந்த இடத்தில் ஆடுகள் நின்றுகொண்டிருந்தது. அவன் ஆடு மேல் விழுந்தான். குழந்தைக்கு ஒரு அடியும் படாமல் தேவன் பாதுகாத்தார். ஆனால் ஆடு செத்துப் போனது. தமது தாசர்களுக்காக எப்படி அற்புதங்களைச் செய்கிறார் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!

மூன்றாவதாக வழிநடத்துதலில் அதிசயம்
சங்.78:14-16 வசனங்களில் தேவன் தாம் வழிநடத்தி வந்த இஸ்ரவேலரை கரம்பிடித்து நடத்தி வந்தார். மேலும் சங்.105:39,40,41 வசனங்களில் அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார். கேட்டார்கள், அவர் காடைகளை வரப் பண்ணினார். வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். கன்மலையைத் திறந்தார். தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று. தேவன் தமது பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து இஸ்ரவேலரை அற்புதமாக வழிநடத்தினார்.
இன்றைக்கும் தேவன் தம்முடைய ஊழியர்களுக்கு அதிசயங்களைச் செய்கிறார். ஆப்பிரிக்காவில் தேவ ஊழியர்கள் ஒரு ஆற்றைக் கடக்க விரும்பியபோது, ஆற்றில் முதலைகள் மிகுதியாக இருந்தன. தேவனை நோக்கி ஜெபித்தபோது கரையில் இருந்த மரம் ஆற்றின் குறுக்கே விழுந்தது. அந்தப் பெரிய மரம் பாலமாக மறுகரையைத் தொட்டதால் ஊழியர்கள் மரத்தின் வழியாக கடந்து மறுகரை சேர்ந்தனர். தேவன் தமது தாசர்களுக்காக பெரிய அதிசயத்தை செய்தார்.

நான்காவதாக போஷிப்பதில் அதிசயம்
சங்.78:15ஆம் வசனத்தில் “வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தார்”. தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் கூட தண்ணீர் கிடைத்தது. வசனம் சங்.78:23,24ல் “அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்”. தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான். அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.
மன்னாவை எல்லா மக்களுக்கும் ஒன்றுபோல உணவாகக் கொடுத்தார். ஒன்றுபோல எல்லாரும் உணவு உட்கொள்ள வேண்டும் என்பது தேவதிட்டம். கையில் பணமோ, கடைகளோ இருந்திருந்தால் ஒவ்வொருவரும் தகுதிக்கு ஏற்ப உணவையும், உடைகளையும் வாங்கியிருப்பார்கள். ஒற்றுமை, ஒருமனம், கானான் பிரயாணத்தில் பாதிக்கப்படும். எனவே எல்லாருக்கும் 40 வருடங்களாக ஒரேவித உணவாக மன்னாவையே ஆகாரமாகக் கொடுத்தார்.


வசனங்கள் சங்.78:25-29ஐப் பார்க்கும்போது மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாகவும் புசிக்க கொடுத்தார். அவர்கள் புசித்து திருப்தியடைந்தார்கள் என்று பார்க்கிறோம். 40 வருடமாக 30 லட்சத்துக்கும் அதிகமான இஸ்ரவேலரை அற்புதமாக போஷித்தார்.

ஐந்தாவதாக பஞ்சத்தில் உயிரோடே காத்த அதிசயம்
ஆதி.45:5,7,8 வசனங்களில் பார்க்கும்போது யாக்கோபின் வம்சம் கானானில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தில் சிக்கி அழிந்துபோகக் கூடாது என்பதற்காக தேவன் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுகிறார். பிசாசு தேவ ஜனங்களை அழிக்க தீர்மானங்களை தீட்டினாலும் தேவன் யோசேப்பை முன்னமே எகிப்துக்கு அனுப்பினார். யோசேப்பை சாதாரண அடிமையாக அல்ல, பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவன் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து யாக்கோபின் வம்சத்தை ஆதரித்து காப்பாற்றினார். யோபுவுக்கு வந்த சோதனையிலும் கூடவே இருந்து அவனை காப்பாற்றி, இரண்டத்தனையாக ஆசீர்வாதத்தையும், நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும், தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் காண கிருபை செய்தார் (யோபு 42:10,16).

ஆறாவதாக குணமாக்குவதில் அதிசயம்
38 வருடங்களாக பெதஸ்தா குளத்தில் காத்துக் கிடந்தவனை சுகப்படுத்தி அதிசயத்தை விளங்கப் பண்ணினார். மேலும் லூக்.5:24 வசனத்தில் திமிர்வாதக்காரனை நோக்கி, நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றதும் அவன் படுக்கையை எடுத்துக்கொண்டு தேவனை மகிமைப்படுத்தி, தன் வீடு சென்றான். பார்த்த எல்லாரும் (வசனம் 26ல்) ஆச்சரியப்பட்டு தேவனை மகிமைப்படுத்தினார்கள். அல்லாமலும் அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள். பாஸ்டர் P.D. ஜான்சன் ஒரு விசுவாசிக்கு ஞானஸ்நானம் கொடுத்து தூக்கும்போதே ஊனமாயிருந்த கை சுகமானது. தேவன் இன்றும் அநேக வியாதியஸ்தர்களை அதிசயமாக குணமாக்கி, தன் வல்லமையை வெளிப்படுத்துகிறார்.

ஏழாவதாக கசப்பை மதுரமாக மாற்றுவதில் அதிசயம்
யாத்திராகமம் 15:25ல் இஸ்ரவேல் மாரா வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்தது. அந்த தண்ணீரைக் குடிக்க அவர்களுக்கு கூடாதிருந்தது. ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து என்னத்தைக் குடிப்போம்? என்றார்கள். மோசே தேவனை நோக்கி கூப்பிட்டான். தேவன் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார். அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே அது மதுரமான தண்ணீராயிற்று. முதலில் இஸ்ரவேலர் ஏமாற்றமடைந்தாலும் தேவன் அற்புதம் செய்து கசப்பை மதுரமாக மாற்றினார். உன் வாழ்வின் கசப்புகள், வேதனைகள் மாற வேண்டுமானால் நீ சிலுவையை நோக்கிப் பார். சிலுவை மரத்தில் தொங்கின அவர் உன் வாழ்க்கையின் சாபத்தை மாற்றுவார். பிலேயாம், பாலாக் ராஜாவின் வெகுமதியால் கவரப்பட்டு இஸ்ரவேலரை சபிக்கச் சென்றாலும் தேவன் இடம் கொடுக்கவில்லை. இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம். நமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை நமது பட்சமாக திருப்புவதில் அவர் பெரியவர். நம் விரோதிகளை நமக்கு அனுகூலமாக திருப்பி அற்புதம் செய்வார்.


தேவன் இஸ்ரவேலருடைய வாழ்க்கையில் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து மகிமைப்பட்டார். நீ அவரை விசுவாசித்தால் உடன்படிக்கை பண்ணிய விசுவாசியாகிய உன் வாழ்விலும் பெரிய அதிசயங்களைச் செய்து உன்னை உயர்த்துவார். இயற்கைக்கு மேற்பட்ட அதிசயங்களை காண தேவனை விசுவாசித்து முன்னேறுங்கள்! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This