“அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலிப்.3:21)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தவான்களைச் சேர்த்துக்கொள்ள வரும் போது, எல்லாவற்றையும் அவருக்கு கீழ்படுத்துவார். எதிர்த்து நிற்கும் சத்துருவின் சேனைகள் பயந்து நடுங்கிப் போகும். தேவனுடைய வல்லமை, உயிர்த்தெழுதலின் வல்லமை, பூமியெங்கும் விளங்கும். அதுமட்டுமல்ல, நம்முடைய அற்பமான சரீரம் தேவ வல்லமையால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மறுரூபமாக்கப்பட்ட மகிமையின் சரீரம் போல் மாறும். மறுரூப மலையிலே இயேசு மறுரூபமானார். அவருடைய வஸ்திரம் வெளிச்சம் போல் வெண்மையாயிற்று முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது.
“அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று” (மத்.17:2)
இயேசு கிறிஸ்து தாம் பூமியில் இருக்கும்போதே, மறுரூபமானால் எப்படியிருப் பார் என தனது சீடர்களுக்கு காண்பித்தார். இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கும்போதே மறுரூபமானார். அவரது சரீரம் மகிமையின் சரீரமாய் மாறிற்று. அப்படித்தான், அற்பமான மண்ணான சரீரத்தை உடைய நாம், தேவ வல்லமையால் மகிமையின் சரீரமாக மறுரூபப்படுவோம். விண்ணிலே இயேசுகிறிஸ்துவோடு பறந்துசென்று மகிழ்ச்சியோடு இருப்போம்.
வழுவாதபடி காக்க வல்லவர்
“வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமை யுள்ளவரும்…” (யூதா 24)
தேவன் வல்லமையுள்ளவர் என விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து தமது வல்லமையினாலே நம்மைக் காக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும். நமது ஆத்து மாவைக் காப்பார். அவரது வல்லமை நம்மை காப்பாற்றும். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையைத் தரித்துக்கொள்ள வேண்டும். எனவே தான் வேதம் கூறுகிறது, தேவ பக்திக்கு வேண்டிய யாவற்றையும் அவரது திவ்ய வல்லமை தருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
“தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,…” (2பேதுரு 1:3)
தேவபக்தியாய் வாழ்வது உங்கள் சுய முயற்சி என எண்ணவேண்டாம். அது தேவ வல்லமையினால் ஆகும். அந்த வல்லமை எப்படிக் கிரியை செய்கிறது? இயேசுவை அறிகிற அறிவினால், நமது வாழ்வில் தேவ வல்லமை கிரியை செய்கிறது. தேவ வல்லமை இல்லாமல் நாம் ஒரு நிமிடம் நிற்க முடியாது. தேவ வல்லமைதான் தேவ பக்திக்கு வேண்டிய அனைத்தையும் தருகிறது. தேவ வல்லமை நம்மை இச்சையினால் உலகத்தில் உண்டான கேட்டுக்கு விலக்கி காக்கிறது. இயேசு தேவனுடைய குமாரன். வல்லமையின் பிறப்பிடம் அவர்தான். அவரை விசுவாசித்து ஜெபிப்போம். எலிசா இதை நன்கு அறிந்திருந்தான். எலிசாவுக்கு விரோதமாக சீரிய நாட்டு ராணுவம் வந்தபோது எலிசாவின் வேலைக்காரன் பதறினான். எலிசா அசைய வில்லை. உடனே எலிசா விண்ணப்பம் பண்ணினான். எலிசாவின் வேலைக் காரனின் கண்கள் திறக்கப்பட்டது. சுற்றிலும் அக்கினி மயமான குதிரைகளால் அந்த மலை நிறைந்திருக்கிறதைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.
“அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்” (2இராஜா.6:16)
ஆம்! தேவன் தமது பிள்ளைகளைக் காக்க பரம சேனையை அனுப்புவார். அவர் சேனைகளின் கர்த்தர். அது மட்டுமல்ல; அந்த வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள்ளே இருக்கிறார். நம்மைக் காப்பார். இறுதிவரை காப்பார்.
இயேசு கிறிஸ்துவின் வருகையும் கோபத்தின் வல்லமையும்
“பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப் பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்” (வெளி.19:11)
இயேசு கிறிஸ்து தமது பகிரங்க வருகையிலே வல்லமையோடு வருவார். ஜூவாலித்து எரிகின்ற அக்கினியோடு வருகிறார் என வேதம் கூறுகிறது. அவர் தமது நாசியின் சுவாசத்தினால் அந்திக் கிறிஸ்துவை அழிப்பார் என வேதம் கூறுகிறது. மட்டுமல்ல, தமது வாயின் பட்டயத்தால் எதிர்த்து நிற்கும் சேனைகளை அழிப்பார் எனவும் வேதம் கூறுகிறது. நாம் இரட்சிப்பின் வல்லமையைப் பார்த்திருக்கிறோம். இயேசு கிறிஸ்து நமது மத்தியில் வெளிப்படுத்திய வல்லமையைக் கண்டிருக்கிறோம். ஆனால், அவரது கோபத்தின் வல்லமையைக் கண்டதில்லை. மோசே அவரது கோபத்தின் வல்லமையைக் கண்டவர். அதனால் தான், மோசே தனது சங்கீதத்தில் புலம்புகிறார். (சங்.90:11) மோசேக்குக் கர்த்தரின் கோபத்தைப் பற்றி நன்கு தெரியும் ஆனால், நாம் புரிந்துகொள்வதில்லை.
இயேசு வருகிறார்; பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். தமது கோபத்தின் வல்லமையோடு வருகிறார் என்றால், ஜனங்கள் புரிந்து கொள்வதில்லை. காரணம், அவரது இரட்சிப்பின் வல்லமையை மட்டும் கண்ட நாம், அவரது கோபத்தின் வல்லமையை விசுவாசிப்பதில்லை. நோவா விசுவாசித்தான். இந்த உலகம் அழியும் என கூறப்பட்டபோது விசுவாசித்தான், பயபக்தியுள்ளவன் ஆனான். கர்த்தருக்குப் பயந்து எச்சரிப்படைந்து மனந்திரும்பி, நம்மை சீர்படுத்த வேண்டும். கர்த்தரின் வருகைக்கு ஆயத்தப்பட வேண்டும்.
ஆம்! இயேசு கிறிஸ்து பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.