“அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்” (மாற்கு 13:26)
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி வாசிக்கும்பொழு தெல்லாம், அவரது வல்லமையும் கூறப்பட்டிருக்கும். ஆம் இயேசு கிறிஸ்து வல்லமை யோடு வருகிறார். தமது இரகசிய வருகையிலே உயிர்த்தெழுதலின் வல்லமையோடு வருகிறார். அவரது பகிரங்க வருகையிலே கோபத்தின் வல்லமையோடும் வருகிறார். நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்த இயேசு வருகிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் விவரிக்கிறார். இயேசு கிறிஸ்து முதலாம் வருகையிலே சாந்தகுணமுள்ளவ ராய், பாடு அனுபவித்தவராய் வந்தார். இரண்டாம் வருகையிலே வல்லமையுள்ளவ ராய், ஆளுகை செய்பவராய், நியாயாதிபதியாய் வருவார். தமது பிள்ளைகளை உயிருடன் எழுப்ப, மறுரூபமாக்க வல்லமையோடு உயிர்த்தெழுதலின் முதல் பேரானவராய் இயேசு கிறிஸ்து வல்லமையோடு வருகிறார்.
இயேசு கிறிஸ்து வருகையில் உயிர்த்தெழுதலின் வல்லமை
“இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற் கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோ டெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,…. (பிலி.3:10)
அப்போஸ்தலனாகிய பவுல் உயிர்த்தெழுதலின் வல்லமையை நாடினார். கர்த்தருடைய பாடுகளில் பங்கடைவது போல, உயிர்த்தெழுதலின் வல்லமையிலும் பங்கடைய வேண்டும். இயேசு கிறிஸ்து தமது இரகசிய வருகையிலே வரும்போது தமது உயிர்த்தெழுதலின் வல்லமையோடு வருவார்.
இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்து சொல்லப்பட்ட இடங்களையெல்லாம் வாசித்துப் பாருங்கள்; அங்கே கர்த்தருடைய வல்லமை சொல்லப்பட்டிருக்கும். கர்த்தர் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருகிறார் என வேதம் கூறுகிறது. அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமைக்கும் நாம் பங்காளிகள் தான்.
இயேசு கிறிஸ்து மேகங்களின் மேல், தமது பரிசுத்தவான்களைக் கூட்டிச் சேர்க்க வரும்போது மிகுந்த வல்லமையோடு வருவார். இலட்சக்கணக்கான மக்களை உயிரோடு எழுப்ப, உயிரோடு இருக்கும் இலட்சக்கணக்கான தேவப் பிள்ளைகளை மறுரூபப்படுத்த இயேசு கிறிஸ்து மிகுந்த வல்லமையோடு வருகிறார். இயேசு வல்லமையுள்ளவர். அவரின் வல்லமை நம்மிலே கிரியை செய்யும், எத்தனை பாக்கியம்! கர்த்தரின் உயிர்த்தெழுதலின் வல்லமைக்காக கர்த்தரை மகிமைப் படுத்துவோம்.
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்
“கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்ல மையிலும் பலப்படுங்கள்” (எபே.6:10)
நாம் பூமியிலே வாழும்போது, கர்த்தரில் பலப்பட வேண்டும். அவருடைய வல்லமையில் பலப்பட வேண்டும். முதலாவது கர்த்தரின் மேல் அசையாத விசுவாசத்தை வைக்க வேண்டும். அடுத்தபடியாகக் கர்த்தர் நம்மைக் காக்க வல்லமையுள்ளவர் என விசுவாசிக்க வேண்டும். அவருடைய வல்லமையை விசுவாசிக்க வேண்டும். நம் சரீர சுகத்திற்காக மாத்திரமல்ல, நாம் விசுவாச வாழ்க் கையை வெற்றியாய் முடிக்க தேவ வல்லமை தேவை. தேவ வல்லமையில்லாத வாழ்வு தோல்வியான வாழ்வு. இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பவனே உலகத்தை ஜெயிப்பான் என்று யோவான் ஏன் கூறுகிறார்? இயேசு தேவனுடைய குமாரன் என்றால், தேவனுடைய வல்லமையை உடையவர். மகிமைக்குப் பாத்திரமானவர். எல்லாம் அவருடைய கால்களின் கீழ் அடங்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எல்லாக் கால்களும் முடங்கும் என்று விசுவாசிக்கும் பொழுதுதான் வெற்றி. தேவனுடைய குமாரன் என்றால் சகல அதிகாரத்தையும், வல்லமையையும் உடையவர். நாம் அவரை விசுவாசிக்கும்பொழுது, தேவ வல்லமை நமது வாழ்விலும் கிரியை செய்கிறது. நமக்குத் தேவையான விதத்திலே தேவ வல்லமை கிரியை செய்து நம்மைக் காப்பாற்றுகிறது. ஆகவே கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடு வோம். அப்போஸ்தலனாகிய பவுல், தேவ வல்லமை நம்மிடத்தில் கிரியை செய்கிறது எனக் கூறுகிறார்.
“தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (எபே.1:19)
இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பினபோது, தேவன் தம்முடைய வல்லமையை அனுப்பினார். கல்லறை திறந்தது. காவலர் பயந்தனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். தேவ தூதர்கள் வந்து தேவ வல்லமை வெளிப்படக் கிரியை செய்தார்கள். கல்லறைக்கு வந்த ஸ்திரீகள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டார்கள். ஆம்! தேவ வல்லமை கிரியை செய்தது. இயேசு உயிர்த்தெழுந்தார். அதே வல்லமை இப்பொழுதும், இயேசுவை விசுவாசிக்கிற நமது மத்தியிலே கிரியை செய்கிறது. இதை அறியத்தக்க பிரகாசமான மனக்கண்களை தரும்படி பவுல் வேண்டிக்கொள்ளுகிறார்.
ஆம்! விசுவாசிக்கிற உங்கள் மத்தியிலே தேவ வல்லமை கிரியை செய்கிறது. நம்புங்கள், இயேசுவை விசுவாசியுங்கள்.