“அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்” (லூக்.1:33)
இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு முடிவிராது. இயேசு கிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க வந்தார். முதலாவது தேவனுடைய ராஜ்யம் மனிதனின் உள்ளத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இயேசுவை ஏற்றுக்கொண்ட மனிதனின் உள்ளத்தில் தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. இயேசுவை ஏற்றுக்கொண்ட மனிதனின் இருதயம் நீதியுள்ள இருதயமாய், சமாதானம் தங்கும் இருதயமாய், பரிசுத்த ஆவியால் உண்டான தேவ சந்தோஷம் நிரம்பி வழியும் இருதயமாய் இருக்கும். இதுதான், இயேசுவை ஏற்றுக்கொண்ட மனிதனின் உள்ளத்தில் தேவனுடைய ராஜ்யம் இருப்பதற்கு அறிகுறி. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மனிதன் தேவனுடைய பிள்ளையாக மாறுகிறான். தேவனுடைய பிள்ளைகள் யாவரும் சகல பரிசுத்தவான்களோடும்கூட அன்பின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திற்குட்பட்டவர்களாயிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிள்ளைகள் யாவரும் தேவனுடைய ராஜ்யத்திற்குரியவர்கள். இயேசு கிறிஸ்து தமது முதலாவது வருகையின்போது, தன்னுடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்றார். ஆம், முதலாம் வருகையின்போது பூமியிலே ராஜ்யத்தை ஸ்தாபிக்க வரவில்லை; மாறாக மனிதனின் உள்ளத்தில் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க வந்தார். ஆனால், காலங்கள் நிறைவேறும்போது, பூமியிலே தமது ராஜ்யத்தை ஸ்தாபிக்க வருவார். இயேசு கிறிஸ்துவின் சீடர்கள், அவர் பரமேறிப் போகுமுன், இந்தக் காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குக் கொடுப்பீர் என்றார்கள். அதற்கு இயேசு பிதாவின் திட்டத்தில் உள்ள காலங்களை அறிவது உங்களுக்குரியது அல்ல என்றார். அப்படியென்றால், பிதாவின் சமூகத்தில் அதற்குரிய காலம் இருக்கிறது. காலம் நிறைவேறும்போது, இயேசு கிறிஸ்து இஸ்ரவேலின் ராஜாவாக, சமாதானத்தின் ராஜாவாக நீதியின் ராஜாவாக, பூமியனைத்துக்கும் ராஜாவாக வருவார். ஆம்! இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவாக வருவார்.
இயேசு கிறிஸ்து பூமியனைத்துக்கும் ராஜா
இயேசு கிறிஸ்து பூமியனைத்துக்கும் ராஜாவாக இருப்பார் என்று சங்கீதங்களிலும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களிலும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேல் ஜனங்கள், மேசியா தங்களை ஆளுகை செய்யும் ராஜாவாக வருவார் என்று எண்ணினார்கள். இயேசு கிறிஸ்து இரட்சிக்கிறவராய், பாவிகளுக்காக ஜீவனை கொடுக்கிறவராய் வந்தார். இஸ்ரவேல் ஜனங்களால், மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவைப் புரிந்துகொள்ள முடியவில்லை; அவரை ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஆனால், இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்குப் பண்ணியபடி இயேசு கிறிஸ்து ராஜாவாக வருவார். அவர் இஸ்ரவேலுக்கு மாத்திரம் அல்ல, பூமியனைத்துக்கும் ராஜாவாக இருப்பார்.
“நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்” (சங்.2:6,8)
“தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்” (சங்.47:7)
மேற்சொல்லப்பட்ட வசனங்கள் இயேசு கிறிஸ்து பூமியனைத்திற்கும் ராஜா என்று உணர்த்துகின்றன. இவைகள் மட்டுமல்ல சங்கீதங்களிலும், தீர்க்கதரிசன புஸ்தகங்களிலும் பல இடங்களில் இயேசு கிறிஸ்து பூமியை ஆளுகை செய்யும் ராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேத வாக்கியங்களின்படி இயேசு கிறிஸ்து பூமியை ஆளுகை செய்வார். இஸ்ரவேல் ஜனங்களுக்கும், மேசியாவின் ஆளுகையைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளாகிய நாமும், அவர் ராஜாதி ராஜாவாக வெளிப்படுவதற்காகக் காத்திருக்கிறோம். இயேசு கிறிஸ்து ஆயிரம் வருடம் பூமியிலே ஆளுகை செய்வார்.