எளியவர்களின் வாழ்விலே ஒளியேற்ற முடியுமா உங்களால்?

Poor

Written by Dr Ajantha Immanuel

August 10, 2021

அவள் ஒரு மூன்று குழந்தைகளின் தாய். பகுதி நேரமாக சமூகவியல் படித்துக்கொண்டிருந்தாள். அவளது கல்லூரி விரிவுரையாளர் கடைசியாக அவளுக்குக் கொடுத்த செயல்முறை பயிற்சி “சிரிப்பு” என்பதாகும். மூன்று நபர்களை சிரிக்க வைத்து அவர்களது முகபாவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று விரிவுரையாளர் பணித்திருந்தார்.

ஒருநாள் காலை அப்பெண்மணியும் அவளது கணவரும் மேக் டொனால்ட்ஸ் (Mac Donalds) என்ற பிரபல உணவகத்திற்கு சாப்பிடுவதற்காகச் சென்றார்கள். உணவு பரிமாறப்படும் இடத்தில் இவர்கள் வரிசையாகக் காத்திருந்த போது வரிசையில் நின்ற அனைவரும் ஏதோவொரு காரணத்தினால் பின்வாங்கினார்கள். அவளது கணவரும் பின்வாங்கினார். அவள் என்ன காரணம் என்பதையறிய சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கே துர்நாற்றம் நிறைந்த உடை அணிந்த இரு பிச்சைக்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒரு பிச்சைக் காரன் குட்டையாக நீலநிறக் கண்களை உடையவனாயிருந்தான். அவன் அப்பெண்மணியைப் பார்த்து சிரித்தான். அது அவளுக்கு “என்னை அருவருப்பாக எண்ணி தள்ளிவிடாதே” என்று கெஞ்சுவதுபோல் இருந்தது. இறைவனின் ஒளி அவன் கண்களில் பிரகாசித்தது. அவன் தன் கையில் வைத்திருந்த சில்லறை நாணயங்களை எண்ணிக்கொண்டே அவளைப் பார்த்து, “காலை வந்தனங்கள்” என்றான். மற்ற பிச்சைக்காரனுடைய செய்கைகள் அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதை பறைசாற்றியது. அப்பெண்மணிக்கு இந்த இரு பிச்சைக்காரர்களின் நிலையைப் பார்த்தபோது கண்ணீர் வந்துவிட்டது.

அந்த உணவகத்தின் பணம் செலுத்துமிடத்தில் இருந்த இளம் பெண் அந்த எளியவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டாள். அந்த பிச்சைக்காரர்கள் அவளைப் பார்த்து, “இரண்டு காபி (Coffee) மட்டும் போதும்” என்றார்கள். கடுங்குளிர் வேளையில் தங்கள் உடலை சூடேற்றிக்கொள்ள அந்த உணவகத்தில் அமர வேண்டுமானால் ஒரு காப்பியாவது வாங்க வேண்டுமென்ற சூழ்நிலை அவர்களுக்கு, அந்த எளியவர்கள் காபியை வாங்கிக்கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அடுத்தபடியாக அந்தப் பெண்ணின் முறை வந்தபோது, “தனக்கு ஒரு சிற்றுண்டியை வாங்கிக்கொண்டு மேலும் இரு சிற்றுண்டிகள் தரும்படி கேட்டாள். அந்த சிற்றுண்டி தட்டுகளை அந்த ஏழை மனிதர்களுக்குக் கொடுத்தாள். உணவகத்தில் அமர்ந்திருந்த அனைவரின் கண்களும் அவள் மேலே படிந்திருந்தது. நீலநிறக் கண்களுடைய குட்டையான பிச்சைக்காரன் கண்ணீர் தழும்பிய கண்களுடன் அவளைப் பார்த்து, “நன்றி” என்றான். அப்பொழுது அப்பெண்மணி அவர்களைத் தட்டிக்கொடுத்து உங்களுக்கு நம்பிக்கைத் தர ஆண்டவர் என்மூலம் இந்த நற்பணியை உங்களுக்கு செய்கிறார்” என்றாள்.

இந்த செய்கைகளைப் பார்த்து, அவளது கணவரும் மற்றவர்களும் பெருமிதம் கொண்டனர். கல்லூரியில் அப்பெண்மணி இந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டபோது அநேகர் இந்த சம்பவத்தால் தொடப்பட்டனர்.

“…மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (மத்.25:40)






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This