அழைத்தவர் உண்மையுள்ளவர் அவர் நடத்துவார்

நாம் ஏலீம் மிஷனெரி இயக்கத்தை ஆரம்பித்தபோது, நான் என்னுடைய தகப்பனாரின் சபையில் வாலிபர் ஐக்கியத் தலைவராக இருந்து வந்தேன். அந்நாட்களில், வாலிபர் அனைவரும் மிஷனெரி இயக்கப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வந்தனர்.
பின்பு புதிய தலைவர் வந்தபொழுது, அனைவரும், புதிய தலைவர் வழிகாட்டுதலில் புதிய ஊழியங்களில் ஈடுபட ஆரம்பிக்கவே, மிஷனெரி பணிகளைச் செய்ய “தன்னார்வ ஊழியர்கள்” எவரும் அகப்படவில்லை. 1999ஆம் ஆண்டு மிஷனெரி இயக்கம் ஆரம்பித்து, முதல் “3 ஆண்டுகளில்” நிர்வாக செலவுகளே இல்லாமல் இயங்கும் இயக்கம் என்ற பெயருடன் வலம் வந்த “ஏலீம் மிஷனெரி இயக்கம்” 2002ஆம் ஆண்டு சகோ.ஜெபக்குமார் மற்றும் சகோதரி சுந்தரி போன்ற “பகுதி நேர ஊழியர்களைக்” கொண்டு நிர்வாகம் மற்றும் “பணம் சேகரித்தல்” ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்பு அவர்களும் பணியினிமித்தம் கடந்துசெல்லும் சூழ்நிலை வந்தபோது, சோழவந்தான் AG.சபை போதகரின் மகன், தம்பி ஜிம் ஆலனை ஆண்டவர் அற்புதமாக, தம்பி சாமுவேல் மூலம் கொண்டுவந்தார். தம்பி ஜிம் ஆலன் மிக நேர்த்தியாக, ஒரு வருடம் நிர்வாகப் பணிகளைச் செய்துவந்தார்.


இதற்கிடையில் அவர் தன்னுடைய வேதாகமக் கல்லூரி படிப்பிற்காக, கடந்துசெல்லவே, அவருக்குப் பதிலாக “3 அனுபவமற்ற ஊழியர்கள்” நிர்வாக வேலையைக் கவனிக்க 2004ஆம் ஆண்டு அமர்த்தப்பட்டனர். அவர்கள் என்னுடைய மனைவியுடன் நிர்வாகத்தில் உதவி செய்து வந்தனர். அவர்கள் சில மாதங்கள் பணியாற்றிய நிலையில், இயக்கம் ஆரம்பித்த நாள் முதல் 5 ஆண்டுகளாக, அனைத்து நிர்வாக பொறுப்புகளையும் நேர்த்தியாக செய்துவந்த என்னுடைய மனைவி, தன்னுடைய இரண்டாவது பிரசவத்திற்காக, 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம், திருநெல்வேலி செல்லவேண்டிய சூழ்நிலை வந்தது.மதியம் திருநெல்வேலிக்கு நான் என்னுடைய மனைவியையும், மகள் மரியாவையும் அழைத்துச் செல்ல தீர்மானித்திருந்தேன். என்னுடைய மனைவியும் “3 ஊழியர்களுக்கும்” எவ்வாறாக நிர்வாகப் பணிகளைச் செய்யவேண்டும் என்ற பயிற்சிகளை முழுமையாகக் கொடுத்து முடித்திருந்தாள்.


புறப்பட வேண்டிய நாள் காலையில், “முதல் ஊழியர்” வந்தார். அவர் என்னிடம் “அண்ணன் இன்றுடன் நான் வேலையிலிருந்து நின்றுகொள்கிறேன்” நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். அவர் அதுவரை “ஒரு வருட காலமாக” “பணம் சேகரிக்கும் பணியினை” செய்துவந்தவர். மேலும் அவருக்கு மட்டுமே “300 வீடுகளின் விலாசம்” தெரியும் என்ற சூழ்நிலை…
சிறிது நேரம் கழித்து “இரண்டாவது ஊழியர்” வந்தார். அவர் என்னிடம் “அண்ணன், நானும்கூட இன்றுடன் வேலையிலிருந்து நின்றுகொள்கிறேன்” நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவரும்கூட, “ஒரு வருட காலமாக” பத்திரிக்கை ஊழியத்தில் ஈடுபட்டு வந்தவர். அவருக்கு மட்டுமே அச்சகம், ஆசிரியர்கள் குழு, பத்திரிக்கைகளை விநியோகித்தல் போன்ற பணிகள் தெரியும் என்ற சூழ்நிலை…
மதிய நேரம் வந்தது, நானும் என்னுடைய மனைவி மற்றும் மகள் மரியா திருநெல்வேலி புறப்பட வேண்டிய சமயம் வந்தது. இதற்கிடையில், “மூன்றாவது ஊழியர்” ஒரு சகோதரி, அவர் மெல்ல வந்து, “அண்ணன் நானும் இன்றுடன் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொள்கிறேன்” நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு… என்ன அண்ணன் செய்வீர்கள்? அக்காவும் போகிறார்கள்… நீங்களும் அடிக்கடி வெளியூருக்கோ, வெளிநாட்டிற்கோ, கம்பெனி அல்லது மிஷனெரி இயக்க விஷயமாகவோ சென்று விடுவீர்கள்; வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். பணம் சேகரிக்கவோ, அச்சகம் செல்லவோ, கணக்கு எழுதவோ, வங்கிக்குச் செல்லவோ உதவிக்கு எவரும் இல்லை. மிஷனெரி இயக்கத்தை மூடி விடுவீர்களா? என்று நக்கலாகக் கேட்டார்கள்.


என் இதயம் சுக்கு நூறாக உடைந்தது. 5 ஆண்டுகள் கடந்த நிலையில் பல்வேறு போராட்டங்களைத் தாண்டி, நடத்தி வந்த நிலையில், இந்தப் பிரச்சனையைத் தனியாக சமாளிக்க என்ன செய்யப் போகிறோம்? யார் நமக்கு உதவி செய்வார்? என்று கலங்கித் திகைத்து நின்ற வேளையில்…
நான் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “சிஸ்டர்… அழைத்தவர் உண்மையுள்ளவர்… அவர் நடத்துவார்” என்று சொல்லிவிட்டு, திருநெல்வேலிக்குச் சென்று விட்டேன். மீண்டும் அன்று இரவே நான் புறப்பட்டு, மதுரை வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. மறுநாள் காலை, காலியான வீடு, மற்றும் காலியான அலுவலகம் போன்ற சவால்களை சந்திக்க வேண்டும். மற்றொரு புறம் “68 மிஷனெரிகளுக்கு” மாத உதவி அனுப்ப வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. வழி எதுவும் தெரியவில்லை. உலக அறிவு, ஞானம், திறமை, அனுபவம் எவையும் கை கொடுக்கவுமில்லை. நம்பிய நண்பர்களால் உதவவும் முடியவில்லை.
திருநெல்வேலியில் நான் ஏறிய பேருந்து, மதுரையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. திருமங்கலம் அருகே வந்தபோது, திடீரென “கைபேசி” ஒலித்தது… அதில் சகோதரி ஜுலி பேசினாள். அவள், ஏலீம் வாலிபர் ஐக்கியம் மூலம் மிஷனெரி இயக்கத்தை நடத்திவந்த ஆரம்ப நாட்களில் “நிர்வாகப் பணியினை” தன்னார்வமாக செய்து பழக்கமானவள். அவளுடைய கணவர், பாஸ்டர்.சகாயராஜ், YWAM என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து நல்ல அனுபவம் பெற்றவர். இருவரும் வேறொரு ஸ்தாபனத்தில் இணைந்து பாண்டிச்சேரியில் ஊழியம் செய்து வந்த சமயம், திடீரென அவர்கள் மதுரைக்கு வர விரும்பி, என்னைத் தொடர்புகொண்டனர். நானும் உடனடியாக அவர்களை வரும்படி அழைத்தேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இருந்த “மூன்று பணியாளர்களும்” வேலையை விட்டுச் சென்று 24 மணி நேரம் முடிவதற்கு முன்பதாக, ஆண்டவர் அவர்களைப் பார்க்கிலும் மேன்மையான பிள்ளைகளையும் கொண்டு வந்து தன்னுடைய ஊழியத்தைக் காக்க அவர் வல்லவராக இருந்தார். மேலும் ஊழியம் தொடர்ந்து வளர கிருபையும் செய்தார்.
அழைத்தவர் உண்மையுள்ளவர்…. அவர் தொடர்ந்து நடத்துவார். 2தெச.3:3



Author

You May Also Like…

Share This