ஜனவரி மாத இதழின் தொடர்ச்சி….
திருமணம் மற்றும் ஊழியம்:
ஹன்னா கேத்ரீன் தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் லண்டன் மிஷனரி சொஸைட்டி மிஷனரியான டாக்டர் ஜோசப் முல்லன்ஸ் அவர்களை திருமணம் செய்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து மிகவும் உற்சாகமாக மிஷனரி பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் (ஆலிஸ் மரியா முல்லன்ஸ், இலியட் முல்லன்ஸ், கென்னத் முல்லன்ஸ், லூசி ராம்சே முல்லன்ஸ், கேட் ஹாசெல் முல்லன்ஸ்).
திருமதி.ஹன்னா முல்லன்ஸ் அவர்கள் சித்திர தையல் ஊசியை கையாள்வதில் மிகவும் திறமை பெற்றவராய், மிக அழகான சித்திர தையல் வேலைகளை செய்தார்கள். ஒருநாள் ஒரு உள்ளுர் கனவான் அவர்களுடைய வீட்டிற்கு வரும்போது திருமதி ஹன்னா ஒரு ஜோதி காலணிகளை செய்துகொண்டிருந்தார். அந்த கனவான் அந்த வேலை மிகவும் நேர்த்தியாக இருப்பதைக் கண்டு மிகவும் மெச்சிக் கொண்டார். கடைசியாக அந்த கனவான், “என்னுடைய மனைவியும் இப்படிப்பட்ட வேலைகளை செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்” என்று சொன்னார். அப்படி சொன்னவுடன் மின்னல் வேகத்தில் பதிலளித்த திருமதி.ஹன்னா “நான் வந்து உங்கள் மனைவிக்கு எப்படி செய்வது என்று கற்றுத் தருகிறேன்” என்றார். இப்படித் தான் முதல் முதலாக ஜினானா-களில் நுழைய வாசல் திறந்தது.
ஜினானா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? “ஜினானா என்பது இந்திய வீடுகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி. அந்த பகுதியில் திருமணமான பெண்கள் மட்டும் வசிப்பார்கள். அவர்களுக்கு ஒருபோதும் அங்கிருந்து வெளியே வருவதற்கோ, வெளி உலகோடு தொடர்பு கொள்வதற்கோ அனுமதி கிடையாது.
முல்லன்ஸ் தம்பதியினருக்கு ஜினானா பெண்களைக் குறித்து எப்பொழுதும் ஒரு பாரம் உண்டு. ஜினானா-வில் இருக்கும் பெண்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந் தார்கள். அவர்களுக்காய் வருத்தப்பட்டார்கள். எப்படி அவர்களை சந்திப்பது மற்றும் கற்றுக்கொடுப்பது? அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் கவலையோடி ருப்பவர்கள். அந்த வீடுகளுக்குள் சென்று அந்த பெண்களை சந்திப்பது இயலாத காரியம். இப்படி இருந்த சூழ்நிலையில்தான் இந்த முதலாவது வாய்ப்பு கிடைத்தது.
அந்த முதலாவது வாய்ப்புக்கு பின்பு பல ஜினானா பெண்களை சந்திக்கும் வாய்ப்பு மிஷனரி பெண்களுக்கு கிடைத்தது, ஊழியமும் தொடர்ந்து வளர்ந்தது. திருமதி ஹன்னா முல்லன்ஸ் அவருடைய ஊழிய வாஞ்சைக்காகவும், ஜினானா மிஷன் திட்டமிடுதலுக்காகவும் நன்கு அறியப்பட்டவராய் இருந்தார். ஒரு கருத்தரங்குக்கு பின்பு ஒரு இந்து விதவை டாக்டரை, ஜினானா பெண்களை தன்னுடன் தங்க வைப்பதற்கு சம்மதிக்க வைத்தார். ஹன்னா முல்லன்ஸ் அந்த வீட்டிற்குச் சென்று கற்றுக்கொடுப்பார். அதன் பின்பு பல இடங்களில் அதேபோன்ற ஏற்பாட்டைச் செய்தார். இந்த இந்திய கிறிஸ்தவர்கள் “வேதாகமப் பெண்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.
எழுத்துப் பணி:
திருமதி.ஹன்னா முல்லன்ஸ் “கிறிஸ்தவம் என்றால் என்ன?” (What is Christianity) என்று ஒரு புத்தகத்தை ஆங்கிலம் மற்றும் வங்காள மொழிகளில் எழுதினார். மேலும் சார்லெட் மரியா டக்கர் அவர்களின் “பிரிட்டனில் விடியற்காலை” (னுயல செநயம in க்ஷசவையin) என்ற புத்தகத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். 1852ஆம் ஆண்டில் வங்காள மொழியின் முதல் நாவலான “புல்மணி மற்றும் கருணையின் விவரங்கள்” (Phulmani O Karunai Bibaran) -ஐ எழுதினார். 1858ஆம் ஆண்டில் அவரும், அவருடைய கணவனும் தங்களுடைய இந்திய மிஷனரி பணியைப் பற்றி பரப்ப பிரிட்டனுக்கு பயணப்பட்டார்கள். நான்கு ஜினானா-க்கள் அவருடைய பராமரிப்பில் இருந்தது. மேலும் பதினோரு ஜினானா-க்களை அவர் ஒவ்வொரு நாள் மதியமும் பார்வையிட்டு வந்தார். நாட்கள் செல்லச் செல்ல அநேக பெண்கள் கர்த்தரிடத்தில் சேர்ந்து, இயேசுவை தங்களின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
பிரியமான நண்பர்களே, கடினமான பணிச்சூழல் மற்றும் ஊழியங்களின் மத்தியிலும் திருமதி.முல்லன்ஸ் ஒரு சிறந்த பணியைச் செய்தார். அவருடைய முப்பத்தி ஐந்தாவது வயதில் 1861ஆம் ஆண்டு தேவன் அவரை தன்னுடன் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொண்டார். சித்திர தையல் ஊசியை கையாள்வதில் அவருக்கு இருந்த திறமை அவருக்கு அநேக வாசல்களை திறந்துகொடுத்தது. இப்பொழுது நமக்கோ எல்லா இடங்களிலும் வாசல்கள் திறந்துள்ளது. நாம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வோம். திருமதி.முல்லன்ஸ் சித்திர தையல் ஊசியை சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்திக்கொண்டார். நம்முடைய தாலந்துகளை நாம் பயன்படுத்தும்படி தேவன் நமக்கு ஞானத்தை தருவாராக!