கடந்த மாதத்திலே, நான் பஞ்சாப் மற்றும் ஹரியானா பணித்தளங்களைப் பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கே சில சபைகளில் பிரசங்கம் செய்யவேண்டிய சூழ்நிலையும் இருந்தது.
சிறு வயதிலிருந்தே போதகர் குடும்பத்தில் வளர்ந்து, பல்வேறு பிரசங்கங்களைக் கேட்டு, “நீச்சல் ஆழம் வரை” அறிந்திருந்தாலும், என்னைப் பொருத்தவரை “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்ற யோவான் ஸ்நானகனின் பிரசங்கமே இன்றைக்கும் சிறப்பானதாக, ஏற்புடையதாகத் தோன்றுகிறது.
இயேசுவின் நேரடி சீஷனாகிய, பரிசுத்த தோமா அவர்களே இந்த தேசத்திற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்து, இயேசுவின் அன்பைப் பிரசங்கித்தும், “இந்த நற்செய்தி” இத்தேசத்தின் “ஆறு லட்சம்” கிராமங்களுக்கு இன்றும் போய்ச் சேரவில்லை.
“பரலோகத்திற்குப் போகும் வாசலை” அறியாமல் ஆயிரங்கள் மாளும்போது, அறிந்தவரோ, “பரலோகத்தின் வாசல்களின் நன்மைகள் பற்றி” விரிவான விளக்கக் கூட்டங்கள் நடத்தி அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“அறிவிக்க ஆட்களில்லை, ஆட்களை அனுப்பவேண்டிய அவசரம் அநேகருக்குப் புரியவில்லை.” பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் கூடிவந்திருந்த ஒரு இளம் சபையில் இரட்சிப்பின் நற்செய்தியை விளக்க, இந்தக் கால மக்களுக்கு ஏற்றவாறு ஒரு உதாரணம் சொல்ல, தேவன் எனக்குக் கிருபை பாராட்டினார். இந்த உதாரணம் உங்கள் “ஆத்தும ஆதாயப் பணிக்கு” உதவியாக இருக்கும் என நான் நம்புகிறேன்… எவ்வாறாக ஒரு செல்போனில், போன், பேட்டரி, சிம்கார்டு என மூன்று பகுதி அடங்கியிருக்கிறதோ, அப்படியே நமது சரீரத்திலும் உடல், உயிர், ஆத்துமா என்ற மூன்று பகுதி அடங்கியிருக்கிறது.
உடலானது – கருவில் உருவான நாள் முதல், நாளுக்கு நாள் வளர்ந்து, பின்பு முதுமையடைந்து, மண்ணுக்குத் திரும்புகிறது.
உயிரானது – அந்த உடல் உருவான நாள் முதல், இரத்தத்தின் மூலம், உடல் முழுவதுமாகச் சென்று, உடல் உறுப்புகளை இயங்கச் செய்கிறது. இதயம் நின்று இரத்த ஓட்டம் நிற்பதை “மரணம்” என்று சொல்லுகிறோம்.
ஆத்துமாவானது – தேவன் தந்த பொக்கிஷமாயிருக்கிறது. அது செல்போனிலுள்ள “சிம் கார்டு” போன்றது. நமது ஆத்துமா நமது உடலின் உள்ளே இருந்தாலும், அது தன்னுடைய ஆண்டவரோடு ஐக்கியப்பட வேண்டும். அப்பொழுது மட்டுமே நம்முடைய உயிரானது, நமது உடலைவிட்டுப் பிரியும் நேரத்தில், நமது ஆத்துமா தன்னுடைய ஆண்டவரின் சமூகத்தைச் சென்றடைய முடியும்.
இந்த ஆத்துமாவின் விலையானது, முழு உலகத்தின் விலையைப் பார்க்கிலும் மேலானது. எனவேதான் “மனந்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி” உண்டாயிருக்கிறதென்று வேதம் சொல்கிறது.
ஆண்டவர், இதயத்தின் வாசலருகே நின்று, நாம் பிறந்த நாள் முதல் இன்று வரை, கதவைத் திறக்கும்படித் தட்டிக்கொண்டே இருக்கிறார். நாம் அவருடைய சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்து, பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவின் இரத்தத்தால் கிடைக்கும் இலவச “பாவ மன்னிப்பைப்” பெற்றுக்கொண்டால், நமது ஆத்துமா பரலோக தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கும். நாம் இந்த உலகைக் கடந்துபோகும்போது… நமது ஆத்துமா, தன்னுடைய தேவனோடு நித்தியகாலமாய் மகிழ்ந்திருக்கும்.
நாம் நித்தியத்தை எங்கு கழிக்கப் போகின்றோம் என்பதை தீர்மானிக்க, கிருபையாய் கொடுக்கப்பட்ட, இந்த உலக வாழ்க்கையில்….. சிறந்தத் தீர்மானம் செய்வோம். சந்தோஷம் மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் உண்டாகும். பரலோகம் உங்களில் மகிழும். முடிவிலே நித்திய மோட்சம் கிடைக்கும் என்று சொன்னபோது…
அந்த இளம் விசுவாசிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த எளிய நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்க உற்சாகப்படுத்தினேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
எப்படியாகிலும் இராஜ்யத்தின் சுவிசேஷம் அனைவருக்கும் அறிவிக்கப்பட கருத்தாய் ஜெபிப்போம், உழைப்போம், நம்மையே அர்ப்பணிப்போம். கர்த்தர் நம்மில் மகிழட்டும்.