கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
“தேவன் பெரியவர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர். அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட அவருடைய ஜனம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவனை ஆராதிக்கிற ஜனங்களுக்கு ஒப்பானவர்கள் ஒருவரும் இல்லை. தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட அவர் ஜனம் அவர் துதியை சொல்லிவர வேண்டும்” என்று தேவன் விரும்புகிறார். (எண்.23:8) வசனத்தில் “தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?…. அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்” தேவன் சபிக்காத, வெறுக்காத ஜனம், தேவன் தான் தெரிந்துகொண்ட ஜனத்தை வானத்தைத் திறந்து, தேவன் போஷித்தார். செங்கடலைப் பிளந்து வழி திறந்தார், பார்வோனையும் அவன் சேனையையும் ஆயுதமின்றியே ஆழ்கடலில் மூழ்கி மடியச் செய்தார்.
யோசுவா 2:9ஆம் வசனத்தில் “கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில்பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்” என்று ராகாப் வேவுகாரரிடம் கூறினாள். மேலும் இஸ்ரவேலராக எகிப்திலிருந்து புறப்பட்டபோது கர்த்தர் அவர்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப் பண்ணினார். அவர்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு இராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம் என்று கூறி தேவனை விசுவாசித்தாள். மோவாபிய பெண்ணாகிய ரூத்தும் இஸ்ரவேலின் தேவனிடம் அடைக்கலம் வந்தாள். எனவே புறஜாதியிலிருந்து வந்தாலும் ராகாவும், ரூத்தும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு இயேசுவின் வம்ச அட்டவணையிலே பங்கு பெற்றனர்.
எதினால் தேவ ஜனங்களுக்கு ஒப்பான ஜனம் இல்லை? ஏன் அவர்கள் விசேஷமானவர்கள்? என்பதை கீழே ஆராய்ந்து பார்ப்போம்.
1) தேவ ஜனங்களை சபிக்க முடியாது:
எண்.23:8ஆம் வசனத்தின்படி “தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?” தேவனுடைய பிள்ளைகளை யாரும் சபிக்க முடியாது. இயேசு சாபமான சிலுவையில் தொங்கி, நமக்காக முட்கிரீடத்தை தரித்துக்கொண்டு, நமக்காக மரித்து, சிலுவையில் பிசாசின் கிரியைகளையும், சாபங்களையும் முறியடித்தார். பிசாசின் தலையை நசுக்கியபடியால் சாபம் மேற்கொள்ளாது. தேவன் நமக்காக மரணத்தை ஜெயித்து, சாபத்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை செய்தார். எனவே தேவப் பிள்ளைகளை சாபம் ஒன்றும் செய்வதில்லை.
2) தேவ ஜனங்கள் தனித்தன்மையுள்ளவர்கள்:
எண்.23:9ஆம் வசனத்தில் கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன். அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். மற்ற புறஜாதிகளின் பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள்.
3) தேவ ஜனம் பெருகுகிற ஜனம்:
யாத்.33:16 “எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்” எகிப்திலே பார்வோன் இஸ்ரவேலரை எவ்வளவு ஒடுக்கினானோ அவ்வளவாய் அவர்கள் பெருகினார்கள். லேவி.20:26 பரிசுத்தவான்கள் பிரித்தெடுக்கப்பட்டவர்கள், தேவனுக்கென்று வாழும்படி பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள். உபா.7:2,3ஆம் வசனங்களில் “உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம். அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக”
லேவி.24:26; ஏசா.55:11 அசுத்தமானதைத் தொடாமல் புறப்பட்டுச் செல்ல வேண்டும். மேலும் யோவா.15:17ஆம் வசனத்தில் நாம் உலகத்தார் அல்ல. அப்.2:40ன் படி மாறுபாடான சந்ததியைவிட்டு நம்மை விலக்கி இரட்சித்துக்கொள்ள வேண்டும். தேவ ஜனம் தனித்தன்மையை விடும்போது பெருக்கம் குறுகிற்று. தேவ ஜனங்கள் பலுகிப் பெருகும் ஜனமாயிருப்பார்கள்.
4) தேவன் அக்கிரமத்தைக் காண்கிறதில்லை:
எண்.23:21 “அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது” தேவன் மற்றவர்களிடம் நம்மை பிடித்துக் கொடுக்கமாட்டார், நம்மை சிட்சித்துப் போதிப்பார்
5) இராஜாவின் ஜெயகெம்பீரம் அவர்களுக்குள் இருக்கும்:
எண்.23:21 வசனத்தில் இராஜாவின் ஜெயகெம்பீரம் அவர்களுக்குள்ளே ஜெயகெம்பீரம் கொடுக்கும். தேவன் அவர்கள் நடுவில் இருப்பதால் அசைக்கப் படுவதில்லை. தோல்வி இல்லை ஜெயம் உண்டு.
6) காண்டாமிருகத்துக்கொத்த பெலன் உண்டு:
எண்.23:22ஆம் வசனத்தில், “தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.”
7) இஸ்ரவேலுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை:
எண்.23:23 “யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்”
8) தேவ ஜனங்களின் வாசஸ்தலங்கள் அழகானவைகள்!
எண்.24:5 “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!”
அன்பு நண்பரே! தேவன் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிக்கிறார். அவர்களுக்கு ஒப்பான ஜனம் எவரும் இல்லை, அவர்களை யாரும் சபிக்கமுடியாது. ஏனென்றால் தேவன் அவர்களோடு உடன்படிக்கை செய்துள்ளார். அவர்கள் அக்கிரமத்தை மன்னிக்கிறார். சிட்சித்து திருத்துகிறார். ராஜாவின் ஜெயக்கெம்பீரம் அவர்களுக்குள் இருப்பதால் அசைக்கப்படமாட்டார்கள், தோல்வி அவர்களுக்கு இல்லை. ஜெயமாய் அவர்களை தேவன் நடத்துவார். அவர்களுக்குக் காண்டாமிருகத்துக்கு ஒத்த பெலனைத் தருவார். அவர்கள் தங்கும் வாசஸ்தலங்கள் மிகவும் அழகாக இருக்கும். தேவ ஜனங்களுக்கு விரோதமான மந்திரவாதமும், குறிசொல்லுதலும் இல்லை. நீங்களும் தேவ ஜனமாக வாழும்படி தேவன் அழைக்கிறார். நீங்கள் தேவனால் அவருக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். தோல்வி உங்களை சேதப்படுத்தாது. தேவன் மகிமையாய் உங்கள் வாழ்வில் வெற்றி சிறப்பார்! – அல்லேலூயா!




