கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நம்முடைய தேவனுக்கு ஒப்பாக ஒருவருமில்லை. நம் தேவன் சர்வ வல்லவர். சகலத்தையும் படைத்தவர். நம் தேவன் சர்வ ஞானி. அவரது அறிவு ஆராய்ந்து முடியாதது. சர்வ வியாபி. எங்கும் நிறைந்து, எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறார். அவரது கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை. இருளில் நடக்கும் காரியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். தேவன் பெரியவராகவும் மிகவும் உயர்ந்தவராகவும் இருக்கிறார். நம்முடைய நினைவுகளின் தோற்றத்தையும் நம்முடைய நாவிலிருந்து சொற்கள் வெளியே வரும் முன்னதாகவே அவற்றை எல்லாம் அறிந்திருக்கிறார். மேலே வானத்திலும், கீழே பூமியிலும் நடப்பவைகள் அனைத்தும் அவருக்கு தெளிவாகத் தெரியும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடு இருந்து அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமே அவர் தம் வல்லமையை வெளிப்படுத்தி பெரிய காரியங்களைச் செய்கிறார்.
ஏசா.59:1 வசனத்தில் “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை” என்று வாசிக்கிறோம். நாம் இந்த மாதத்தின் தியானத்திற்காக “கர்த்தருடைய கரம் வல்லமையுள்ளது. அது குறுகிப்போகவில்லை” என்பதைக் குறித்து சிந்திப்போம்.
2நாளா.14:17 வசனத்தில் யூதாவின் ராஜா ஆசா தேவனை நோக்கிப் பார்த்தான். “கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்;” நீரே எங்கள் தேவன், எதிரிகள் உம்மை மேற்கொள்ள விடாதேயும்! என்று கூப்பிட்டபோது கர்த்தர் அந்த எத்தியோப்பிய சேனைகளை முறியடித்து வெற்றி பெற்றார். தேவன் நமக்காக எந்த கடினமான காரியத்தையும் செய்ய முடியும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தருடைய கரம் எப்படிப்பட்டது என்று பார்ப்போம்:
யாத்.14:23 வசனத்தில், மோசே தன் கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டினான். பலத்த கீழ்க் காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை கர்த்தர் வறண்டுபோகப் பண்ணினார். ஜலம் பிளந்து பிரிந்து போயிற்று. மேலும் யாத்.15:6 வசனத்தில், “கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது” என்று பார்க்கிறோம்.
சங்.118:15 வசனத்தில் “கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்” என்றும், சங்.98:1 வசனத்தில் “அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது” என்றும், சங்.89:13 வசனத்தில் “உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது” என்றும் பார்க்கிறோம்.
இந்த பராக்கிரமஞ்செய்யும் வல்லமையான கரத்தினால் என்ன நன்மைகளையெல்லாம் செய்கிறார் என்று பார்ப்போம்.
முதலாவதாக – தேவனுடைய கரம் நம்மை ஆசீர்வதிக்கிறது
லூக்.9:16,17 வசனத்தில் இயேசு “…அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்” தேவனுடைய கரத்தின் ஆசீர்வாதத்தினால் எல்லாரும் (ஏறக்குறைய 5000 புருஷர்கள்) சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் 12 கூடை நிறைய எடுக்கப்பட்டது. மேலும் சங்.123:2 வசனத்தில் “…எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது” தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறார். அவர்களை ஆசீர்வதிக்கிறார்.
இரண்டாவதாக – தேவனுடைய கரம் திருப்தியாகும்படி போஷிக்கிறது
எண்.11:21,23 வசனங்களில், மோசே தேவனிடம், என்னோடிருக்கிற காலாட்கள் 6 லட்சம் பேர். ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே என்றான். அதற்கு கர்த்தர் மோசேயை நோக்கி, “கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்”. தேவன் தம்முடைய ஜனங்களை அவர்கள் தெவிட்டிப் போகும்வரை திருப்தியாக போஷித்தார். அவருடைய கரம் குறுகிப் போகவில்லை என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் உணரும்படி அற்புதங்களைச் செய்தார். உங்கள் வாழ்விலும் தேவனுடைய கரம் உங்களை திருப்தியாகும்படி போஷிக்கும். சகல நன்மைகளாலும் திருப்தியாக்கி உங்களை நடத்துவார். கன்மலைத் தேனினாலும் உச்சிதமான கோதுமையினாலும் உங்களை போஷிப்பார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை குறைவின்றி நடத்துகிறார். சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும் அவரைத் தேடும் அவருடைய பிள்ளைகளுக்கு ஒரு குறைவும் வராது. பஞ்சத்திலும் அவர்களை போஷித்து பராமரித்து காப்பார்.
மூன்றாவதாக – தேவனுடைய கரத்தினால் வியாதிகள் சுகமாகிறது
லூக்.5:13 “அவர் (இயேசு) தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று” தீராத வியாதியையும் அவர் தீர்க்கிறார். மேலும் லூக்.4:40 வசனத்தில், “சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்” தேவன் நம் ஒவ்வொருவர் மேலும் அக்கறை உள்ளவராக இருக்கிறார். அவருடைய காயப்பட்ட கரத்தினால் நம்மைத் தொட்டு சுகமளிக்கிறார். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம். மேலும் லூக்.13:13 வசனத்தில், அவள் எவ்வளவும் நிமிரக் கூடாத கூனியாயிருந்தாள். “அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்”.
தேவன் நமது வாழ்விலும் அவிசுவாசமாகிய கூனைத் தொட்டு சுகமாக்கும்படி கேட்போம், நம் வாழ்வில் தேவனின் அற்புதங்களைச் செய்யும் கரம் உயர்ந்திருக்கிறது. விசுவாசத்தில் உறுதியாக இருந்து பெரிய காரியங்களைச் செய்வோம்.
நான்காவதாக – தேவனின் கரம் மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிறது
லூக்.7:14 வசனத்தில், “(இயேசு) கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” மரித்துப்போன நாயின் ஊர் விதவையின் மகன் உயிர்பெற்று எழுந்தான். மேலும் லூக்.15:20, 24 வசனங்களில், “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்” மனந்திரும்பும் ஒவ்வொரு பாவியையும் தேவன் நேசிக்கிறார். அக்கிரமத்திலும் பாவத்திலும் மரித்திருக்க, ஒவ்வொருவரையும் இயேசுவின் கல்வாரி அன்பு திரும்பவும் உயிர்ப்பிக்கிறது. தேவன் நேற்றும் இன்றும் மாறாதவர். சரீர பிரகாரமாக மரித்தவர்களையும் தேவனின் வல்லமையால் தொட்டு குணமாக்குகிறார். ஆயுசின் வருஷத்தைக் கூட்டிக்கொடுத்து அவருக்காக வாழும்படி கிருபை தருகிறார்.
ஐந்தாவதாக – தேவனின் கரம் நம்மை வழிநடத்துகிறது
சங்.139:10 வசனத்தில், சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும் “அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.” தனிமையான நேரங்களிலும், சோர்ந்துபோன வேளைகளிலும் பின்மாற்றத்தில் தூரம் போனாலும் தேவனின் அன்பான கரம் நம்மை கண்டுபிடித்து நம்மை அவரின் அனபுக்கு நேராக வழிநடத்துகிறது. தகப்பன் தன் பிள்ளையைத் தோளின்மேல் சுமப்பது போல நம்மைச் சுமக்கிறார். வழிநடத்துகிறார். மரண இருளின் பள்ளத்தாக்கிலும் அவருடைய கரம் நம்மைத் தாங்கி வழிநடத்துகிறது.
ஆறாவதாக – தேவனின் வலதுகரம் நம்மை அணைக்கிறது
தேவனின் வலதுகரம் நம்மை அணைக்கிறது. உன்.2:6 வசனத்தில், “அவர்(தேவனின்) இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது” தேவன் அன்பின் கரத்தால் நம்மை அரவணைக்கிறார். வனாந்திர வாழ்க்கையில் போராட்டங்கள், பிரச்சனைகள் மத்தியில் வழுவாமல் முன்னேறிச் செல்ல தேவனின் அன்பின் கரங்களால் அரவணைத்து, தூக்கிச் செல்கிறார். துன்ப வேளைகளிலும் கண்ணீரின் வேளைகளிலும் அவரின் ஆறுதலான தேவ வார்த்தைகள் நம்மை அரவணைத்து தேற்றுகிறது.
ஏழாவதாக – தேவனின் கரத்திலிருந்து நம்மை பறிக்க முடியாது
யோவான் 10:29 வசனத்தில், “அவைகளை (என் ஆடுகளை) எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.” நாம் அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். நாம் அவர் சத்தம் கேட்டு, அவர் காட்டும் வழியில் அவருக்குப் பின் சென்று வந்தால் நாம் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை. ஒரு தீயசக்தியும், பிசாசும் நம்மை அவர் கையிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. தேவன் பெரியவர். அவர் உள்ளங்கையில் வைத்து நம்மைப் பாதுகாக்கிறார். நம்முடைய தலையில் உள்ள முடியெல்லாம் அவர் எண்ணி வைத்துள்ளார். ஒரு தீங்கும் நம்மை அணுகாமல் தேவனுடைய கரம் பாதுகாக்கிறது.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! தேவனுடைய கரம் குறுகிப்போகவில்லை. அவர் கரம் பராக்கிரமம் செய்யும்படி உயர்ந்திருக்கிறது. நாம் அவர் கரத்திலிருந்து நன்மையான ஆசீர்வாதங்களைப் பெற விசுவாசத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருப்போம். வேலைக்காரரின் கண்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப் போல, நம் தேவன் நமக்கு இரக்கம் செய்யும் வரைக்கும் அவருடைய கரத்தை நோக்கிப் பார்ப்போம். 1பேதுரு 5:6 வசனத்தில் கூறியபடி “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” நாம் தேவனால் உயர்த்தப்படும்படிக்கு அவருடைய ஓங்கிய பராக்கிரமம் செய்யும் பலத்த கரத்தினுள் அடங்கியிருந்து, மேன்மையான ஆசீர்வாதத்தைப் பெறுவோமாக! ஆமென்! அல்லேலூயா!




