இராஜ மேன்மை

Written by Pr Thomas Walker

June 4, 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்று அநேகம் தேவபிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த பதவி, அதிகாரம், உலக மேன்மைகள், தேவராஜ்யம் கட்டப்படுவதற்காகவே என்பதை உணரவில்லை. இவர்கள் தங்களுக்குக் கிடைத்த ராஜ மேன்மை, உதவியற்ற நிலையிலுள்ள தேவ பிள்ளைகளுக்கு உதவுவ தற்காகவே என்பதை ஒருபோதும் சிந்திப்பதில்லை. இன்று அநேகர் தங்களுக்குக் கிடைத்த ராஜ மேன்மையை தாங்களே வைத்து அனுபவிக்கும் சுயநலவாதிகளாயிருக்கிறார்கள். இன்று நற்கிரியைகள், தானதர்மங்கள் செய்வது குறைந்து வருகிறது. சுவிசேஷ ஊழியங்கள், சபை ஊழியங்கள், மிஷனரி ஊழியங்கள் நலிந்து வருகிறது. இதற்கு காரணம் தேவ பிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த ராஜ மேன்மையை சரியாக பயன் படுத்தாததே ஆகும். இன்று நாம் செய்ய வேண்டிய கிரியைகளை நாம் செய்யாவிட்டால் தேவன் தம்முடைய வேலையை செய்வதற்காக வேறு ஒரு நபரைத் தெரிந்துகொள்வார். கர்த்தருடைய வேலை ஒருபோதும் தடை படுவதில்லை.

தங்களுக்கு கிடைத்த ராஜ மேன்மையை சரியாகப் பயன்படுத்திய நபர்களைப் பற்றி வேதத்திலிருந்து இங்கு பார்க்கலாம்.


முதலாவதாக, இஸ்ரவேல் வம்சம் ஒழிந்து போகாமலிருக்கும்படி அதற்கு இரட்சகனாக ஏற்படுத்தப்பட்ட யோசேப்பைப் பார்க்கிறோம். ஆதி.45:7,8.
யோசேப்பு சாதாரண மேய்ப்பனுடைய குடும்பத்தில் பிறந்தவன். தன்னுடைய வேலையில் உண்மையுள்ளவன். தேவனுக்கு மிகவும் பயந்தவன். திவ்விய சுபாவ முள்ளவன். தேவன் அவனை உயர்த்த திட்டமிட்டார். சகோதரர்களால் பகைக்கப்பட்டு துன்பப்பட்டவன். பலவித சோதனைக்குட்பட்டவன். தேவன் அவனை போத்தி பாரின் வீட்டில் உயர்த்தினார். ஆனால் அது அவன் உயர்த்தப்படவேண்டிய இடம் அல்ல. அங்கு தன்னுடைய பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள யோசேப்பு போராடி னான். இறுதியில் அவனைக் குறித்த தேவனுடைய திட்டம் நிறைவேறியது.


தேவன் பார்வோனின் அரண்மனையில் அவனை உயர்த்தினார். ராஜ மேன்மை பெற்றான். ஆனாலும் அவனது சந்தோஷம் நிறைவாகவில்லை. அவன் எதற்காக இந்த ராஜமேன்மையைப் பெற்றானோ, அந்த நோக்கம் அவனில் நிறைவேறும்போதுதான் மனநிறைவு பெற்றான். அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது ஒரு பெரும் கூட்டம் அல்ல. தேவ ஜனமாகிய பரிசுத்த ஜனமாகிய தேவபிள்ளைகளாகிய தேவ திட்டமாகிய சிறுகூட்டமே. அதிலிருந்தே ஈசாயின் வேராகிய விடிவெள்ளி உதிக்கும். எனவே தனது தகப்பன் சகோதரர் என்பதற்காக அல்ல, தேவ திட்டம் நிறைவேறவும் தேவ நோக்கம் நடை பெறவும் எதிர்பார்த்திருந்தான். தேவநோக்கம் என்ன என்று கண்டுகொண்டு வாழ்ந்தான். தேவ திட்டத்தை சகோதரர்கள் அறிந்துகொள்வார்கள் என்று அவன் நினைத்தான். அவர்களோ அறியவில்லை.
யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து பூமியில் உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும் பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் என்றான். யோசேப்பைக் குறித்த தேவனுடைய திட்டம் நிறைவேறியது பஞ்ச காலத்தில் தன் குடும்பத்தை போஷிக்கக்கூடிய ஜீவரட்சனையாக அவனை ஏற்படுத்தினார்.

இரண்டாவதாக, அப்.7:25 மோசேயைக் குறித்து பார்க்கிறோம். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீட்பதற்காக மோசே தன் ராஜமேன்மையை பயன்படுத்தினான். எபிரேயனான மோசே பார்வோனின் மகனாக உயர்த்தப்பட்டு எகிப்தின் சகல கலைகளையும் கற்றவன். பார்வோனுக்கு அடுத்தபடியாக சிங்காசனத்தில் அமரக்கூடிய எல்லாத் தகுதியையும் பெற்றிருந்தான். மோசே எகிப்தின் ராஜாவாக ஆகியிருந்தால் அவனுக்கு எல்லா மேன்மையும் கிடைத்திருக்கும். ஆனால் அங்கு ஒரு கூட்டம் ஜனங்கள் இருந்தார்கள். அது துன்புறுத்தப்பட்ட, அருவருக்கப் படத்தக்க நிலையிலிருந்த அடிமைக்கூட்டம். மோசே ராஜ மேன்மையா? அடிமை வாழ்வா? என்ற எதிர்பார்ப்பில் தன்னை தேவனுடைய சித்தத்திற்கு அர்ப்பணிக்க ஒப்புக்கொடுத்தான். எபி.11:25,26ல் பார்க்கிறோம், மோசே தேவ ஜனங்களுடன் துன்பங்களை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான். ராஜ மேன்மையை உதறினான். தன்னுடைய மகிமையைத் தேடாமல் தேவனுடைய திட்டத்திற்குத் தன்னை உட்படுத்தி தேவ ஜனங்களைத் தெரிந்துகொண்டான்.

மூன்றாவதாக, எஸ்றா 7:6,10 நெகே.8:2ல் எஸ்றாவைக் குறித்துப் பார்க்கிறோம். அவன் ஆசாரிய வகுப்பில் பிறந்தவன், தேறின வேதபாரகன். தன்னுடைய இராஜ மேன்மையை அவன் தேவனுடைய ஜனங்களை கூட்டிச் சேர்ப்பதற்காக பயன்படுத்தினான். தேவ ஆலோசனைகளை தேவ ஜனங்களுக்குக் கொடுக்கவும் ஜனங்களை சீர்திருத்தவும் தன்னை அர்ப்பணித்து தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். தன் இராஜ மேன்மையை விட்டு எருசலேம் சென்றான். தேவன் அவனை பயன்படுத்தினார்.

நான்காவதாக, நெகே.2:3,5 நெகேமியா ராஜமேன்மையுள்ளவன். எருசலேம் பட்டண அலங்கங்களைக் கட்ட தெரிந்துகொள்ளப்பட்டவன். செருபாபேல் எருசலேம் தேவாலயத்தைக் கட்டினான். எஸ்றா தேவ ஜனங்களை சத்தியத்தில் கட்டினான். நெகேமியா அலங்கங்களைக் கட்டினான். அலங்கங்களைக் கட்டி புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவந்தான். நெகேமியா ராஜ சமூகத்தைத் துறந்து ஆலயம் கட்டப்பட வேண்டிய பாழான பட்டணத்தைத் தெரிந்துகொண்டான்.
ஆலயத்தின் தாழ்ப்பாள்கள் பலப்பட தன்னை ஒப்புக்கொடுத்தான்.

ஐந்தாவதாக, எஸ்தர் 8:5,6 எஸ்தர் ராஜாத்தி ராஜ மேன்மையில் இருந்தாள். தன் ஜனத்திற்கு வர இருந்த பொல்லாப்பை சகிக்கக் கூடாமல் தன் ஜீவனை அர்ப்பணித்தாள். தேவன் கொடுத்த மேன்மை எதற்காக என்பதை எஸ்தர் உணரவில்லை. மொர்தேகாய் உணர்த்தினான். தன் ஜனங்களுக்காகப் பரிந்து பேசவே இந்த இராஜ மேன்மை என்பதை எஸ்தர் உணர்ந்தாள். மௌனமாக இருக்க இந்த மேன்மை யல்ல; ஜனங்களை விடுவிக்கவே இந்த மேன்மை.

ஆறாவதாக, எஸ்தர் 10:3 மொர்தேகாய் அகாஸ்வேரு ராஜாவின் அரண்மனை முற்றத்தில் அமர்ந்திருந்த ஒரு சாதாரண மனிதன். தேவன் அவனை அந்த தேசத்திற்கு பிரதம மந்திரியாக உயர்த்தினார். இவன் சகோதரருக்குப் பிரியமானவன். ஜனங்களின் நன்மையை நாடினான். சமாதானமுண்டாக பேசுகிறவனாய் இருந்தான். தேவன் அவனுக்கு ராஜமேன்மையைக் கொடுத்தார். அவன் ராஜமேன்மையை அடைந்தவுடன் தன் சகோதரரை அற்பமாக நினைக்கவில்லை. அவர்கள் நன்மையை நாடினான்.


உன்னை குறித்து தேவன் கொண்டிருக்கும் தேவ நோக்கம் நிறைவேற உன்னை ஒப்புக்கொடு.




Author

You May Also Like…

Share This