தேவ ஆலோசனை தேவை இவ்வேளை

Written by Pr Thomas Walker

March 21, 2007

பிரியமான தேவப்பிள்ளைகளே! “எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்” என்று தாவீது பாடுவதை சங்.16:7ல் பார்க்கிறோம். தேவ ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்கிற ஒரு மனிதனாக தாவீது இருந்தான். சமுதாயத்தில் இன்று தேவ ஆலோசனைக்கு மதிப்பு கொடுக்கப்படுவது இல்லை. வாலிபர்கள் தேவ ஆலோசனையைப் புறக்கணிக்கிறார்கள். சுய ஆலோசனையின்படி நடந்து தங்களைக் கெடுத்துக்கொள்கிறார்கள். தேவ ஆலோசனை கொடுப்பதற்காக போதகர்கள், மூப்பர்கள், பெற்றோரை தேவன் கொடுத்திருக்கிறார். இவர்களை அசட்டை பண்ணக்கூடாது.


தேவ ஆலோசனைகள் ஆச்சரியமானவைகள் (ஏசாயா 28:29). தேவ ஆலோசனையைக் கேட்காதவர்களுக்கு பல நஷ்டங்கள், கஷ்டங்கள் தோல்விகள் உண்டாகிறது. கடைசி கால லவோதிக்கேயா சபையாகிய நாம் நிர்பாக்கியமுள்ளவர்களும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும், தரித்திரரும், குருடரும், நிர்வாணிகளுமாயிருக்கக் கண்டு தேவன் நமக்கு ஆலோசனை கொடுக்கிறார் (வெளி.3:16,17). தேவ ஆலோசனைகளை நாம் புறக்கணிக்கும்போது தேவன் நம்மை புறக்கணிப்பார். “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்” என்று நீதி.11:14ல் பார்க்கிறோம்.

முதலாவதாகதேவ ஆலோசனையை தள்ளிய ஆதாம்ஏவாள்
தேவன் ஆதாமுக்கு ஏதேன் தோட்டத்திலுள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அதிகாரம் கொடுத்தார். அவனுக்கு ஏற்ற துணையைக் கொடுத்தார். ஆனால் அவன் வாழ்வில் சத்துரு பிரவேசித்தான். ஆதாம் தேவ ஆலோசனையைத் தள்ளிவிட்டு சத்துருவின் இன்ப வசனிப்பான வார்த்தைகளைக் கேட்டான். தேவன் விலக்கின கனியைப் புசித்தான் (ஆதி.3:4-6). பொய்யனும், பொய்க்குப் பிதாவும், திருடனும், கொல்லுகிறவனும், அழிக்கிறவனுமாகிய சாத்தானின் ஆலோசனையைக் கேட்டு ஆதாம் தேவ சமூகத்தை இழந்து போனான். இரட்சிக்கப்பட்டும், சபைக்கு வந்தும், தேவ ஆலோசனையைத் தள்ளி சத்துருவின் ஆலோசனையைக் கேட்பதால் தேவ ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள இயலாமல் போகிறது.

இரண்டாவதாக தேவ ஆலோசனையைத் தள்ளிய யோசபாத்
யோசபாத் ராஜா தேவனுடைய மனுஷனாயிருந்தான். கர்த்தர் அவனோடே இருந்தார். அவன் உண்மையாக கர்த்தரைப் பின்பற்றினான் (2நாளா.17:3,4). ஆனால் தோழன் ஒருவன் மூலமாக சத்துரு அவன் வாழ்வில் புகுந்தான். தேவனுடைய பார்வையில் பொல்லாப்பானதைச் செய்துவந்த ஆகாபோடு சம்பந்தங்கலந்தான் (2நாளா.18:1). தேவ ஆலோசனையைக் கேளாமல் ஆகாபோடு யுத்தத்திற்கு செல்ல சம்மதித்தான் (2நாளா.18:2). தேவ பிள்ளையாகிய யோசபாத்தைக் கொல்ல பிசாசு திட்டமிட்டான். கர்த்தருடைய வார்த்தையை விசாரித்தறிய விரும்பிய யோசபாத்திடம் ஆகாப் நானூறு கள்ளத்தீர்க்கதரிசிகளை கொண்டு வந்தான். ஒரு தேவ பிள்ளையை வீழ்த்த, அழிக்க நானூறு கள்ளத்தீர்க்கதரிசிகள் வந்தார்கள். பிசாசு அவர்கள் வாயில் பொய்யின் ஆவியாக இருந்தான். யோசபாத் தேவ மனுஷனாக இருந்தபடியால், மிகாயா என்ற தீர்க்கதரிசியின் மூலமாக தேவ ஆலோசனை அவனுக்குக் கிடைத்தது (2நாளா.18:18-22).
ஆனால் தேவ ஆலோசனையை மீறி யோசபாத் ஆகாபோடு யுத்தத்திற்கு சென்றான். யுத்தத்தில் ஆகாப் மரித்தான். ஆனால் தேவன் யோசபாத்தைக் காப்பாற்றினார் (2நாளா.18:31).
மீண்டும் தேவ ஆலோசனையைக் கேளாமல் யோசபாத் ஆகாபின் குமாரனாகிய அகசியாவோடு கூடிக்கொண்டபோது, தேவன் அவர் கிரியைகளை முறித்துப் போட்டார். கப்பல் உடைந்து போயிற்று (2நாளா.20:37).


தேவ ஆலோசனையைக் கேளாமல் நாம் நடக்கும்போது பிசாசு நம்மைக் கொன்றுபோட வகைதேடுவான். அதனால் நாம் எப்பொழுதும் தேவ ஆலோசனையைப் பெற அவரது சமூகத்தில் காத்திருக்க வேண்டும். அவிசுவாசிகளோடு பிணைபடும் போது தேவவன் நம் கிரியைகளை தகர்த்துப் போடுவார். துன்மார்க்கருக்கு துணைநின்று கர்த்தரைப் பகைக்கிறவர்களை நாம் ஒருபோதும் சிநேகிக்கக்கூடாது.

மூன்றாவதாகதேவ ஆலோசனையைத் தள்ளிய ரெகோபெயாம்
ரெகோபெயாம் முதியோர் தனக்குச் சொன்ன தேவ ஆலோசனையைத் தள்ளினான். தன்னோடு வளர்ந்த வாலிபருடைய ஆலோசனையின்படி நடந்தான். பெரிய நஷ்டம் அவனுக்கு உண்டானது. தன் இராஜ்ஜியத்தில் பெரும்பகுதியை இழந்து போனான் (1இராஜா.12:13, 2நாளா.10:13). முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே என்று யோபு 12:12ல் பார்க்கிறோம். நமது பிள்ளைகள் முதியோரை மதித்து நடக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்லும் ஆலோசனைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.


வாலிபர்கள் ஒருபோதும் துர் ஆலோசனைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. துன்மார்க்கரின் ஆலோசனைகள் சூதானவைகள் (நீதி.12:5). அவைகளில் நாம் நடக்கக் கூடாது (சங்.1:1). துன்மார்க்கரின் ஆலோசனையின்படி நாம் நடக்கும்போது காற்றுப் பறக்கடிக்கும் பதரைப் போலிருப்போம் (சங்.1:4). தேவ வசனங்களை வாசித்து தியானித்து அவரது ஆலோசனையின்படி நடக்கும்போது நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்போம் (சங்.1:3).
தேவன் தாமே நம்மை அவருடைய ஆலோசனையின்படி நடத்தி, முடிவிலே நம்மை மகிமையில் ஏற்றுக்கொள்வாராக! சங்.73:24


“கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்” ஏசாயா 25:1






Author

You May Also Like…

Share This