கர்த்தரின் ஆலோசனைகளைக் கேள்! பிழைப்பாய்!

Written by Pr Thomas Walker

October 21, 2007

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்று தேவனுடைய சபையில் அநேக விசுவாசிகள் தேவ ஆலோசனை என்று தெரிந்த பின்பும் அதைப் புறக்கணித்து, தங்கள் மனம்போல் சுயவிருப்பங்களையும் மனித ஆலோசனைகளையும் நிறைவேற்றி பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். ஆம்! பிரியமான தேவபிள்ளைகளே! நாம் தேவ ஆலோசனைகளைப் பெற்று கீழ்ப்படியக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும். நீ தேவ ஆலோசனைகளைப் புறக்கணித்தால் அழிவு நிச்சயம். யார் தேவ ஆலோசனைக் கூறினாலும் கேட்காதபடி உன் செவிகளை விலக்கினால் சகாயமின்றி சடிதியில் நாசம் வரும். பொருள் நஷ்டமும் உயிர் சேதமும் ஏற்படும்.
தாவீது சங்.16:7ல் “எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்;” என்று கூறுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியானவைகள் (ஏசா.25:1) என்றும் தேவன் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர் என்றும் (ஏசா.28:29) கூறுகிறார். தாவீது “உம்முடைய(கர்த்தருடைய) சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது” என்று சங்.119:24ல் கூறுகிறார். தேவனுடைய வசனம் மூலம் அவர் நமக்கு ஆலோசனைகள் கூறுகிறார். வேதத்தையும், போதகரின் ஆலோசனைகளையும் கேளாமல் தன் சுயபுத்தியில் சாய்ந்து வாழ்ந்தால் ஆவிக்குரிய வாழ்வில் வீழ்ச்சியும் தோல்வியையும் அடைய நேரிடும்.

முதலாவதாக
தானி.4:33ஆம் வசனத்தில் நேபுகாத் நேச்சாரில் தேவ வார்த்தை நிறைவேறிற்று. அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப் போல் புல்லை மேய்ந்தான்… அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது என்று பார்க்கிறோம். இவை எல்லாம் எப்பொழுது சம்பவித்தது என்றால் வசனம் 4:27,29ல் தேவ ஆலோசனையைப் புறக்கணித்து, பொறாமை கொண்டதால் பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்பு நேபுகாத்நேச்சாரின் மேல் வந்தது. அவன் வசனம் 30ல் “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என்று சொன்னான்.


ஒரு மனிதன் தள்ளப்படுவது திடீரென்று நடக்கலாம். பெருமைப்படாதே, பிசாசு பரிசுத்தவான்களை விழத்தள்ள பெருமையை ஆயுதமாக பயன்படுத்துகிறான். ஆயமiபே ஞசடிரன டிக hளை hரஅடைவைல. தான் தாழ்மையாக இருப்பதையே பெருமையாக எண்ண வைப்பான். உலகத்தின் ஆவியாகிய கண்களின் இச்சை, மாம்ச இச்சை, ஜீவனத்தின் பெருமை கொண்டு தாக்கி சத்துரு வீழ்த்த நினைப்பான். அவனுக்கு எதிர்த்து நிற்க வேண்டும்.

இரண்டாவதாக
1இராஜா.17:8,9ல் கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாயிற்று, “நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்”. அப்படியே எலியா எழுந்து கீழ்ப்படிந்து சாறிபாத்துக்குப் போனான். அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருக்க கண்டு, “நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா, பின்னும் அவளிடம் கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா” என்றான். வசனம் 17:13ல் எலியா, “பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா;” என்றார். முதலாவது தேவனுக்குக் கொடுத்தால் ஆசீர்வாதம். சாறிபாத் விதவை முதலாவது அடையை தேவ மனிதன் எலியாவுக்கு கொடுத்ததால் வசனம் 16ல் எலியாவின் சொற்படி செய்தாள், அவளும் எலியாவும், அவள் வீட்டாரும் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் அநேகநாள் சாப்பிட்டார்கள். தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படிந்த எலியாவும், சாறிபாத் விதவையும் பஞ்சத்தில் உயிர் தப்பினர்.

மூன்றாவதாக
ஆதி.19:17,18ஆம் வசனத்தில் லோத்துக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது. “அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்” அவன் அப்படியல்ல ஆண்டவரே, என்று கூறி வசனம் 20ல் “அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது…” என்றான்.
லோத்துக்கு கடவுளும் வேண்டும், உலகப்பிரகாரமான வசதி, பணமும் வேண்டும். முதலாவது தேவனைத் தேடினால் அவருடைய இராஜ்ஜியத்தை தேடினால் எல்லாம் கூட கொடுக்கப்படும் அல்லவா? தேவனைத் தேடினால் பணமும் வரும். பணத்தைத் தேடும்போதும் கடவுளைத் தேடி முடியாது. தேவ ஆலோசனையிலும் தன் சுய இலாபம் தன் வசதியையே பார்க்கிறான் லோத்து. இன்றும் தங்கள் வசதி, தங்களுக்கு அது லாபமாக உள்ளதா? என்று பார்த்தே செயல்பட விரும்புகின்றனர்.


லோத்துக்கு நன்கு பரிந்துபேசி ஜெபிக்கும் ஆபிரகாமின் Prayer support இருந்தது. அதினால் தான் குடும்பமாய் அழிவிலிருந்து தப்ப தேவதூதர்கள் வீட்டுக்கு வந்தார்கள். தன்னுடைய ஆலோசனைப்படி நடந்ததால் அவன் மனைவியையும், பிள்ளைகளையும் அவனால் பாதுகாக்க முடியவில்லை. மனைவி உப்பு தூணாக மாறினாள். மலைக்குப் போகாமல் அருகில் உள்ள ஊருக்குச் சென்றதால் சாபத்தின் சந்ததிகளுக்கு தகப்பன் ஆனான். உடனே மலைக்குப் போகாமல் பிந்தி கீழ்ப்படிந்ததால் பயனில்லை.


ஆம் பிரியமானவர்களே! நாமும் நமது இலக்கான பரம கானானை நோக்கி ஓட வேண்டும். இலக்கை நோக்கி ஆசையாய் ஓட வேண்டும். பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி ஓட வேண்டும். சமபூமியில் நில்லாதே மலைக்குப் போ என்று கூறியது ஏன் என்றால், சம பூமி (easy going life) கவலையற்ற சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்தால் தேவராஜ்ஜியம் செல்ல முடியாது. மலைக்குப் போ என்பது கடினமான வாழ்க்கை (hard life) வெற்றி பெற வேண்டுமானால் தேவசித்தத்தின்படி கடினமான பாதையானாலும் மனம் தளராது முன்னேறிச் செல்ல வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் இடறாமல் முன்னோக்கிச் செல்ல நமக்காக பரிந்துபேசி ஜெபிக்கும் மேய்ப்பனும் நன்கு ஜெபிக்கும் சகோதர, சகோதரிகளும் தேவை. உன்னை ஜெபத்தில் தாங்கும் சகோதரன் உண்டா?


ஆதி.11:2ல் ஜனங்கள் சிநெயார் தேசத்திலே சமபூமியைக் கண்டு, அங்கே குடியிருந்தார்கள். பின்பு தேவ ஆலோசனையில்லாமல் தாங்களாகவே பாபேல் கோபுரம் கட்டினார்கள். தேவன் விரும்பாததால் அவர்களை பூமி எங்கும் சிதறப் பண்ணினார். பாபேல் கோபுரம் சுயபெருமைகளையும், தேவனைத் தேடாத வாழ்க்கையையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு கூட தேவன் எகிப்து தேசத்தை சொந்தமாகக் கொடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் எகிப்து தேசம் நைல் நதி ஓரமான சமபூமி. ஓங்கிய புயத்தாலும் அற்புதங்களாலும் மோசேயின் மூலம் வழிநடத்தி மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த செழிப்பான தேசமான கானானையே தந்தார். லோத்து மலைக்கு உடனே செல்லாமல் காலதாமதம் செய்து பிந்திக் கீழ்ப்படிந்தது பயனில்லாமல் போனது. நமக்கு எச்சரிக்கை. தேவ ஆலோசனைக்கு உடனே கீழ்ப்படிவோம், கஷ்டமானாலும், காடானாலும் மலையானாலும் கர்த்தரின் வழிநடந்து முடிவிலே பரம கானானை அடைய தேவன் நமக்கு கிருபை செய்வாராக!






Author

You May Also Like…

Share This