கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்…” என்று 1யோவான் 3ஆம் அதிகாரம் முதலாம் வசனத்தில் பார்க்கிறோம். தேவ பிள்ளைகளென்று அழைக்கப்படுகிறவர்களிடத்தில் தேவன் தமது அன்பைப் பொழிகிறார். தேவப் பிள்ளைகள் வெளிச்சத்தின் பிள்ளைகள். தேவப் பிள்ளைகள் எரிந்து பிரகாசிக்கிற ஒளி; உலகத்திற்கு உப்பைப் போன்றவர்கள். தேவப் பிள்ளைகளின் வாழ்வு, தான் கரைந்து மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கப் பிறந்தவர்கள். தேவப் பிள்ளைகளாக வேண்டுமானால் அதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. எப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்தால் நாம் தேவனை தரிசிக்க முடியும் என்பதையும் எப்படி அநேகருக்கு ஆண்டவரின் அன்பை காட்டும் வெளிச்சமாக இருக்க முடியும் என்பதை இங்கே காணலாம்.
முதலாவதாக – தேவன்பேரில் விசுவாசம் வேண்டும்
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான் என்று 1 யோவான் 5:1ஆம் வசனத்தில் பார்க்கிறோம். அவனே உலகத்தை ஜெயிக்க முடியும் (1யோவான் 5:4,5). தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினால் தான் நாம் பிழைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்களே தேவப்பிள்ளைகள் (கலா.2:20). விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது (எபி.11:6). தேவன் ஒருவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும். தேவனிடத்திலிருந்து ஒரு தீமையும் உண்டாவதில்லை. தேவன் நன்மையே செய்கிறார். சகலமும் நன்மைக்கு ஏதவாக நடக்கிறது (ரோமர் 8:28). ஆரம்பம் எப்படியோ தெரிந்தாலும் முடிவு நன்மையாகவே இருக்கும். தேவன் தம்முடைய ஆலோசனையின்படி நம்மை நடத்தி, முடிவில் தம்மிடத்தில் நம்மை சேர்த்துக்கொள்வார் என்று விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நாம் அவருடைய பிள்ளைகளாக முடியும்.
இரண்டாவதாக – தேவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்
நாம் அவரை ஏற்றுக்கொள்ளும் போது “அப்பா பிதாவே” என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியைத் தருகிறார் (கலா.4:3-6). தேவனை நமது இரட்சகராக, ஆண்டவராக, மணவாளனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை ஏற்றுக்கொண்ட பின்பு உள்ளத்தில் வேறு யாருக்கும் இடம் தரக்கூடாது. கற்பு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உரியது. ஆண்டவரை ஏற்றுக்கொண்ட பின்பு அவரே நமது மணவாளன். நாம் அவருக்காக நியமிக்கப்பட்ட கன்னிகை. ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்துக்கு அழைக்கப்பட வேண்டுமானால் நாம் அவரை ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக – தேவனால் நடத்தப்பட வேண்டும்
தேவ ஆவியினால் நடத்தப்படுகிறவர்களே தேவ பிள்ளைகள் ஆவார்கள் (ரோமர் 8:14). தேவன் நமக்கு அடிமைத்தனத்தின் ஆவியைத் தராமல் “அப்பா பிதாவே” என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை தருகிறார் (ரோமர் 8:15). நம்மை நாள்தோறும் வழிநடத்தும் தேவ ஆவியானவர் நம்மை தேற்றுவார், ஆற்றுவார், நமக்காக வழக்காடுவார், ஜெபிப்பார். ஆலோசனை கொடுப்பார், நம்மோடு பேசுவார். தேவ ஆவியானவரை நாம் நம்மை வழிநடத்தும் ஆசானாக தெரிந்துகொள்ள வேண்டும். நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தவே ஆவியானவர் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
நான்காவதாக – பிரித்தெடுக்கப்பட்டவர்களாயிருக்க வேண்டும்
“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” என்று 2கொரி.6:17,18 வசனங்களில் பார்க்கிறோம். உலகமாகிய அசுத்தத்தைவிட்டுப் பிரிந்துவந்த பின்பு திரும்ப அதைத் தொடக் கூடாது. அப்பொழுது தேவன் நம் பிதாவாயிருப்பார். ஒரு நிபந்தனையை நமக்கு தேவன் விதிக்கிறார். பரிசுத்த ஜீவியம் செய்யும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருப்போம். மாறுபாடான வாழ்க்கையை விட்டு பிரியவேண்டும். இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும்போதே தேவனால் பயன்பட முடியும்.
ஐந்தாவதாக – குற்றமற்றவர்களாய் இருக்க வேண்டும்
உலகத்தில் இருந்தாலும் நீங்கள் உலகத்தாரல்ல. கோணலானவைகளின் நடுவே சாட்சியாக ஜீவிக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளாயிருக்கும்படி நாம் கோணலும் மாறுபாடுமான சந்ததியில் நடுவே குற்றமற்றவர்களாய் இருக்க வேண்டும் (பிலி.2:15). நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்க வேண்டும் (1தெச.5:23).
ஆறாவதாக – சமாதானமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்
சமாதானம் பண்ணுகிறவர்களே தேவனுடைய பிள்ளைகளாயிருக்க முடியும் (மத்.5:9). தேவனுடன் சமாதானமாயிருக்க வேண்டும். மனிதர்களுடன் சமாதானமாயிருக்க வேண்டும். தேவ சமாதானம் உலகம் தரக்கூடாத மெய்சமாதானம், தேவ சமாதானத்தால் சூழ்நிலைகளை மேற்கொள்ள முடியும். சமாதானமுள்ளவர்களாயிருக்க தேவன் நம்மை அழைத்திருக்கிறார் (1கொரி.7:15) ஆவியின் கனியாகிய சமாதானத்தை அடையும்படி நாட வேண்டும்.
ஏழாவதாக – சகோதர சிநேகம் உள்ளவர்களாயிருக்க வேண்டும்
சகோதர சிநேகம் உள்ளவர்களே தேவனுக்குப் பிள்ளைகளாயிருக்க முடியும் (1யோவான் 3:10) முதலாவதாக நம்முடைய தேவனிடம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்புகூர வேண்டும். இரண்டாவதாக கண்ட சகோதரனிடத்தில் அன்புகூர வேண்டும். கல்வாரியில் கோரச் சிலுவையில் இயேசு பட்ட பாடுகளை தியானிக்க தியானிக்க அவர்மீது உள்ள அன்பு பெருகும். பகைவரையும் மன்னித்து அன்பு செலுத்தினாரே அந்த அன்பு நம்மிலும் பெருகும். உலக அன்பு மாயையானது. அது மாறிப்போகக் கூடியது. தெய்வீக அன்பு நம்மில் பெருக வேண்டும். அப்பொழுது நம்மைப்போல் பிறரையும் நேசிப்போம்.
நீங்கள் தேவனுக்குப் பங்காளிகள்
கிறிஸ்துவுக்குள்பிரியமானதேவப்பிள்ளைகளே! எல்லா மதங்களும் தேவனை உயர்ந்த இடத்திலும் மனிதனை தாழ்ந்த இடத்திலும் வைத்து...