கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது தேவன் நமக்குப் பாராட்டின அன்பு. அவர் நம்மை அந்தகாரத்திலிருந்து பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து பிரித்தெடுத்துள்ளார். அவருடைய புண்ணியங்களை அறிவிக்க தெரிந்தெடுத்துள்ளார். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனையே அனுப்பி அன்பு கூர்ந்துள்ளார். நமக்கு வேதத்தின் மகத்துவங்களை எழுதிக் கொடுத்துள்ளார். நாம் அவருடைய வேதத்தின்படி நடக்கும் உத்தம மார்க்கத்தாராக வாழவேண்டும் என்று விரும்புகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதும்போது, தீத்து 2:14 வசனத்தில் “அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” என்று கூறுகிறார். நாம் வேதத்தின் அடிப்படையில் வாழவேண்டும். நமக்கும் தேவனுக்கும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய தொடர்பு வேண்டும் என விரும்புகிறார். தேவ ஜனங்கள் யார்? எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று தியானிப்போம்.
1. கர்த்தரால் இரட்சிக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்:
உபா.33:29 வசனத்தில், “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ் செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்”. தேவ ஜனங்கள் இரட்சிக் கப்பட்டவர்கள். இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தினால் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. இயேசுவின் இரத்தத்தினால் பாவ மன்னிப்பை பெற்றவர்கள் மாத்திரம் பரலோகம் செல்லமுடியும். இரட்சிப்பின் வஸ்திரம் தரியாதவர்கள் பரலோகம் செல்ல முடியாது. இயேசு சொன்ன உவமையில் கல்யாண வஸ்திரம் தரியாதவன் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேவன் உன்னை இயேசுவின் இரத்தம் மூலம் பார்க்கிறார்.
2.தேவ ஜனங்கள் அவரின் சொந்த சம்பத்து:
யாத்.19:5 வசனத்தில், “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது” என்கிறார். நாம் தேவனுடைய ஆஸ்தி, அல்லது அவருடைய சொத்தாக இருக்கிறோம். தேவனைப் பின்பற்றாத மூடனின் வீடும் நிலமும் மோசமாயிருக்கும். நாம் இயேசுவின் ஆஸ்தி. நம்மைத் தொட்டால் எதிரிக்கு ஆபத்து. உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணி யைத் தொடுகிறான். எனவே நாம் விலையேறப்பெற்றவர்கள். அவர் நம்மைத் தம்முடைய உள்ளங் கைகளில் வரைந்து வைத்துள்ளார். நாம் அவருடையவர்கள் அவர் கையில் உள்ள அவர் சொத்தை யாரும் பறிக்க முடியாது. கெடுக்க முடியாது என்ற விசுவாசம் நமக்குத் தேவை.
3. தேவனை ஆராதனை செய்பவர்கள், அவரைத் துதிப்பவர்கள்:
யாத்.8:1 “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு” என்றார். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்ததே அவரை ஆராதனை செய்யத்தான். மேலும் ஏசாயா 43:21 வசனத்தில், “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” தேவனிடம் உடிஅயீடயiவே டிச முறையிடவோ, முறுமுறுக்கவோ தேவன் நம்மைத் தெரிந்து கொள்ளவில்லை. எப்படி தேவனை ஆராதிப்பது? பயத்தோடும் பக்தியோடும் ஆராதிக்க வேண்டும். ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து ஆராதிக்க வேண்டும். பரிசுத்த அலங்காரத்தோடு ஆராதிக்க வேண்டும். ஆவியோடும், உண்மை யோடும், புத்தியுள்ள ஆராதனை செய்யவேண்டும். தானி.6:20 வசனத்தில் “தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா” என்று தரியு ராஜா தானியேலைக் கேட்டான். நாம் இரட்சிக்கப்பட்டதே அவரை ஆராதிக்கத் தான். உலகத்திலிருந்து பலவித சத்தங்கள் பிதாவிடம் சேருகின்றன. நீயோ தேவனை துதித்து, ஆராதனை செய்து மகிமைப்படுத்து.
4. தேவனின் மேய்ச்சலின் ஜனங்கள் அவரின் ஆடுகள்:
சங்.95:7 “அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” நாம் தேவனின் மந்தையிலுள்ள ஆடுகள். நாம் மேய வேண்டும். நாம் சத்தியத்தை மேய்ந்துகொள்ள வேண்டும். துர் உபதேசங்களை மேயக் கூடாது. வீண் கவலை வேண்டாம். அவர் நல்ல மேய்ப்பனைப் போல நம்மை நடத்துவார். சங்.23:1-3 வரை, அவர் மேய்ப்பனாக இருப்பதால் குறைவு இல்லாமல் நடத்துவார். ஆயிரம் தலைமுறை மட்டும் நமக்கு இரக்கம் செய்வார். நீ கர்த்தரின் ஆடாக இருக்க வேண்டும். குறைவு, இடறல் இல்லை. நீ கர்த்தரின் கைக்குள்ளான ஆடாக இருக்கவேண்டும். நீ செய்வது போதகருக்குத் தெரிய வேண்டும். யோவா.10:9 வசனத்தில், “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.”
உலக கவலை நமக்குத் தேவையில்லை. கவலைப்படுபவன் அஞ்ஞானி. தேவன் ஒரு குறைவுமின்றி கரம் பிடித்து நடத்துவார்.
5. ஞானமும் விவேகமுமுள்ள ஜனம்:
உபா.4:6 வசனத்தில், “அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்” நினைவுகள் சரியாயிருக்கும் எப்பொழுது? இருதயம் பரிசுத்தமாயிருக்கும் போது தான். சங்.119:97-100 வசனங்களில், உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். அவருடைய கற்பனை களைக்கொண்டு சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர். மேலும், எனக்குப் போதித்தவர்களிலும் அதிக ஞானம், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன் என்கிறார். தேவன் தமது ஞானத்தையும் விவேகத்தையும் கொடுப்பதால்தான் யூதர்களும், கிறிஸ்தவர்களும் அதிக ஞானமுள்ளவர்களாய் அதிக கண்டு பிடிப்புகளைச் செய்தனர். விஞ்ஞானிகளாக உள்ளனர். தானி.1:20, “ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்” தேவன் தமது ஜனத்துக்கு உலக மக்களை விட அதிக ஞானம் தருகிறார்.
6. தேவனை சமீபமாய் பெற்ற ஜனங்கள்:
உபா.4:7 வசனத்தில், “நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?” தேவனை சமீபமாய்ப் பெற்றிருக்கக் கூடிய ஜனம் என்றால் 1) தொடக்கூடிய இடத்தில் 2) கூப்பிடும் தூரத்தில் 3) நமக்குள் அவர் பெரியவராய் இருக்கிறார். யோவான் அப்போஸ்தலன் மட்டும் இயேசுவிடம் அதிக நெருக்கமாக மார்பில் சாய்ந்து இருந்தார். அவருடைய இதய துடிப்பையும், பாரத்தையும் அறிந்தவராக காணப்பட்டார். ஆனால் பரிசுத்தாவியைப் பெற்ற நாமும் அவர் மார்பில் சாயலாம், நெருக்கமாக அவருடன் நடக்கலாம், பேசலாம், அவர் சத்தம் கேட்கலாம். சங்.91:15 வசனத்தில் “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” என்கிறார். தேவன் நாம் கூப்பிடும்போது மறுஉத்தரவு அருளிச் செய்கிறவராய் இருக்கிறார்.
7. தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி:
1பேதுரு 2:9 வசனத்தில் “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்று பேதுரு கூறுகிறார். நாம் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயிருப்பதால் அவருடைய புண்ணியங்களை அறிவிக்க வேண்டும். ஆசாரியர்கள் என்றால் பலியிட வேண்டும். நாம் ஆவிக்குரிய பலிகள் செலுத்தவேண்டும். ஸ்தோத்திர பலி, நற் கிரியைகளாகிய பலி, நன்மை செய்வது, தானதர்மம் செய்வது, கீழ்ப்படிதல் போன்ற பலிகளைச் செலுத்த வேண்டும். ராஜரீக ஆசாரியக் கூட்டம் என்றால் பிசாசை எதிர்த்து மேற்கொள்ளும் இராஜாவாக இருக்க வேண்டும். பரிசுத்த ஜாதியாக தெரிந்துகொண்டுள்ளார். நாம் மாம்சத்துக்குரியவர்கள் அல்ல. ஆவிக்குரியவர்களாய் வாழவேண்டும்.
அன்பு நண்பரே! தேவனுடைய ஜனங்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தோம். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படும் பாக்கியம் பெற்றவர்கள். இது பெருமைக் குரிய விஷயம். மாம்சத்தின்படி அவர் நம்மைத் தெரிந்துகொள்ளவில்லை. உலக தோற்றத்துக்கு முன்பே அவருடைய அநாதி தீர்மானத்தின்படி, நம்மை முன்குறித்து சொந்த ஜனமாகத் தெரிந்தெடுத்துள்ளார். எனவே நாம் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக வீட்டிலும் சபையிலும் பரிசுத்த ஜாதியாக வாழ்வோம். கிறிஸ்துவின் நற்கந்தமாக வாழ்ந்து வாசனை வீசுவோம்! மாரநாதா!