தேவன் நம்மோடு கூட இருந்தால்

Written by Pr Thomas Walker

May 21, 2007

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! தேவன் நம்மோடு கூட இருப்பதை நமது சாட்சி வாழ்க்கை மூலமாக மற்றவர்கள் அறிய வேண்டும். தேவனுக்கு சாட்சியாக ஜீவிக்க வேண்டுமென்பதே நமது வாஞ்சையாக இருக்க வேண்டும். தேவன் நம்மோடு கூட இருந்தால் நமக்கு விரோதியாக யாரும் இருக்க முடியாது.ஆதி பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபோடுகூட தேவன் இருந்ததை மற்றவர்கள் கண்டு சாட்சியிட்டார்கள்.


தேவன் அவர்களோடிருந்ததால் ஆசீர்வதிக்கப்பட்ட சில பக்தர்களைக் குறித்து இங்கு பார்க்கலாம்.

முதலாவதாகவிசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம்
ஆபிரகாமுடன் தேவன் இருந்தார். “நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்” என்று அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கிக் கூறுவதாக ஆதி.21:22ல் பார்க்கிறோம். அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு சத்துருவாயிருந்தான். ஆபிரகாம் தோண்டிய எல்லா துரவுகளையும் அபிமெலேக்கின் வேலையாட்கள் தூர்த்துப் போட்டார்கள். ஆனால் ஆபிரகாம் பொறுமையோடிருந்தான்.
தேவன் அவனோடிருப்பதை அவனுடைய சத்துருக்கள் கண்டு கொண்டார்கள். தேவன் ஆபிரகாமுடன் இருந்து அவனை சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார் (ஆதி.24:1,35). ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தபடியால் அவனை ‘சிநேகிதன்’ என்று அழைக்கும் ஒரு கனமான இடத்திற்கு வந்தான் (ஏசாயா 41:8). தேவன் நம்மோடுகூட இருந்தால் நம்மை ஜாதிகளுக்குத் தகப்பனாக உயர்த்துவார்.

இரண்டாவதாககர்த்தரிடத்தில் பயப்பக்தியாயிருந்த ஈசாக்கு
ஆபிரகாமுடன் தேவன் இருந்தது போலவே ஈசாக்குடன் தேவன் இருந்தார். ஈசாக்கு கர்த்தரை பக்தியுடன் தேடி அவரைத் தன்னோடு இருக்கும்படியாக வைத்துக்கொண்டான். தேவன் அவனை ஆசீர்வதித்ததினால் ஈசாக்கு விதை விதைத்தபோது நூறுமடங்கு பலன் அடைந்தான். அவன் ஜசுவரியவானாகி வரவர விருத்தியடைந்தான்; (ஆதி.26:12,13) அவன் மகா பெரியவனானான். முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது ஐசுவரியம் தானாகத் தேடி வரும். ஆவிக்குரிய பிரகாரமாகவும் பொருளாதார நிலையிலும் ஈசாக்கு ஐசுவரியவானாகக் காணப்பட்டான். தம்மைத் தேடுகிறவர்களுக்கும் தேடாதவர்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை தேவன் நிரூபிப்பார். ‘நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்’ என்று அவனுடைய சத்துருக்கள் அவனைக் குறித்து சாட்சி கூறினார்கள். தேவன் நம்மோடு கூட இருப்பாரானால் நமது கையின் பிரயாசங்களை ஆசீர்வதிப்பார். ஆபிரகாமுடன் இருந்தது போலவே ஈசாக்குடன் தேவன் இருந்து அவனை ஆசீர்வதித்து அவன் சந்ததியைப் பெருகப் பண்ணினார் (ஆதி.26:24).

மூன்றாவதாகஇஸ்ரவேலாக மாறி ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொண்ட யாக்கோபு
கர்த்தர் யாக்கோபோடு கூட இருந்தார். எத்தனாகிய அவனை இஸ்ரவேலாக மாற்றினார். லாபான் அவனை வஞ்சித்தபோது, தேவன் அவனோடிருப்பதை யாக்கோபு சுட்டிக் காட்டினான் (ஆதி.31:42). ஏசாவுக்கு தப்பி ஓடிப்போகிற போது கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்” என்று உடன்படிக்கைப் பண்ணினார் (ஆதி.28:15). அந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து இஸ்ரவேல் சந்ததியாருக்கு, தாம் வாக்குப்பண்ணியிருந்த கானான் தேசத்தை அளித்தார். யாக்கோபோடே கூட தேவன் இருந்தபடியால் அவர் அவனுக்கு வேண்டியதெல்லாம் அநுக்கிரகம் செய்தார் (ஆதி.33:11). தேவன் நம்மோடு இருப்பாரானால் நமது தேவைகள் அனைத்தையும் சந்திக்க போதுமானவராக இருப்பார்.
நான்காவதாகஅதிகாரியாக உயர்த்தப்பட்ட யோசேப்பு
யோசேப்போடு கர்த்தர் இருந்தார். அவன் சொப்பனங்களைக் கண்டான். அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டு அவனை குழியில் தூக்கிப் போட்டார்கள். ஆனால் தேவன் அவனோடுகூட இருந்தார். அவனுடைய மூத்த சகோதரன் அவனை குழியிலிருந்து வெளியே வரப் பண்ணினான். அவனை மீதியானியரிடம் விற்றுப்போட்டார்கள். தேவனோ அவனோடு கூட இருந்தார். பின்பு போத்திபாரின் வீட்டில் விற்றுப்போடப்பட்டான். “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்; அவன் காரியசித்தியுள்ளவனானான்” என்று ஆதி.39:2ல் பார்க்கிறோம். யோசேப்பினிமித்தம் அவனது எஜமானுடைய வீட்டைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். தேவன் அவனோடுகூட இருந்தபடியால் போத்திபாரின் மனைவி விரித்த கண்ணியில் அகப்படாமல் தப்பினான். அபாண்டமாய் பழி சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டான். ஆனால் தேவன் அவனோடு இருந்தார். சிறைச்சாலை தலைவனுடைய கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார் (ஆதி.39:21). யோசேப்பு எதைச் செய்தானோ அதைத் தேவன் வாய்க்கப் பண்ணினார் (ஆதி.39:23). தேவன் நம்மோடு இருப்பாரானால் நாம் செய்யும் காரியங்களை வாய்க்கப் பண்ணுவார்; மனுஷர் கண்களில் தயவுகிடைக்கப் பண்ணுவார்.

ஐந்தாவதாககர்த்தருக்காக வைராக்கியம் கொண்ட சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ
சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ ராஜா நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்ளாததினால் அக்கினிச் சூளையில் போடப்பட்டார்கள். தேவனுக்காக பக்தி வைராக்கியம் கொண்டவர்களாக இருந்தார்கள். தேவன் அவர்களோடிருந்து அவர்களை விடுவித்தார். தேவன் அக்கினி சூளையின் மத்தியில் தம்முடைய தாசர்களோடு உலாவிக்கொண்டிருந்தார் (தானி.3:25). ஆக்கினிப் பரீட்சைகளின் நடுவே நாம் செல்லும்போது தேவன் நம்மோடு இருந்து நம்மை விடுவிக்க போதுமானவராக இருப்பார்.


சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ விசுவாசித்ததினால் அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள் (எபி.11:34). தேவ பிள்ளைகள் அக்கினிச் சூளைக்குள் இறங்குவதற்கு முன்பே தேவன் இறங்கி விட்டதால்தான் அக்கினியின் மணம் அவர்கள் மேல் வீசவில்லை. பாடுகள், நிந்தைகள், அவமானத்திற்காக தேவனைத் துதிக்க வேண்டும். அக்கினிச்சூளை தேவதாசர்களைக் குறித்து சாட்சி கொடுக்க வைத்தது. நேபுகாத்நேச்சார் ஆண்ட நாடுகளில் ‘கர்த்தரே மெய்யான தேவன்’ என்று பிரகடனம் செய்யப்பட்டது. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் தேவன் நம்மோடுகூட இருப்பார்.

ஆறாவதாகபாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாக உயர்த்தப்பட்ட தானியேல்
தானியேலோடு கர்த்தர் இருந்தார். அவனுக்கு மனுஷருடைய கண்களில் தயவும், இரக்கமும் கிடைக்கும்படி செய்தார் (தானி.1:9). மற்ற எல்லாரைப் பார்க்கிலும் பத்து மடங்கு சமர்த்தனாகக் காணப்பட்டான். பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாக உயர்த்தப்பட்டான் (தானி.2:48).


சொப்பனங்களை வியர்த்தி பண்ணுகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும், புத்தியும், விசேஷித்த ஆவியும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது (தானி.5:12). தானியேல் மூன்று வேளையும் ஜெபம் பண்ணி கர்த்தரைத் தேடினபடியால் கர்த்தர் அவனோடிருந்தார். அவனைக் குற்றம் கண்டுபிடிக்க பிரதானிகளும், தேசாதிபதிகளும் வகைதேடி யாதொரு காரியத்திலும் குற்றம் கண்டுபிடிக்க முடியாமல் போயிற்று. ராஜாவைப் பணிந்துகொள்ள தானியேல் மறுத்த விஷயத்தில் குற்றங் கண்டுபிடிக்கப்பட்டு சிங்கக் கெபியில் போடப்பட்டான். கர்த்தர் அவனோடிருந்து, சிங்கங்களின் வாயை அடைத்தார். அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை (தானி.6:23). கர்த்தர் தானியேலோடிருந்தபடியால் அவனது காரியம் ஜெயமாயிருந்தது. தேவன் நம்மோடிருந்தால் போதும், தானியேலைப் போல நம்முடைய காரியங்களை ஜெயமாக மாற்றுவார்.


தேவன் நம்மோடு இருக்க நம்முடைய இருதயம் சுத்தமாக இருக்க வேண்டும். வெளி.3:20ல் பார்க்கும்போது “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” என்று எழுதப்பட்டுள்ளது. தேவன் நமக்குள் வாசஞ்செய்ய நமது இதயக் கதவை திறந்து அவரை வரவேற்போமாக. தேவன் நமக்குள் வாசஞ்செய்யும்போது நம்மை நிச்சயமாய் ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக மாற்றுவார்.






Author

You May Also Like…

Share This