இந்த மாதம் ஜனவரியில், நான் புதிய பொறுப்பை என்னுடைய அலுவலகத்தில் ஏற்று முதல் வேலையாக, உலகின் முதல் நிலையிலுள்ள கோல்கேட் நிறுவனத்துடனும் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்யும்படி அழைக்கப்பட்டு இருந்தேன். இந்த ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களிடமும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தன. என்னிடம் பணிபுரியும், மேற்கு இந்திய விற்பனை மேலாளர், இதற்கு முன்பாக பலமுறை, கோல்கேட் நிறுவனத்தின் வர்த்தகத் தலைவரை சந்தித்தவர், “கோல்கேட் வர்த்தக தலைவர் எவ்வளவு கடினமானவர், பல ஆண்டுகள், பல தேசங்களில் பணியாற்றிய அனுபவஸ்தர்” எனவே அவரிடம் கவனமாகப் பேச வேண்டும் என பலவித ஆலோசனைகளைக் கூற ஆரம்பித்துவிட்டார். எனக்கு சற்று பயமாக இருந்தாலும் பல தேவப் பிள்ளைகளிடம் ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டு, அந்த சவாலை மேற்கொண்டபடியால் அதிகம் கலங்கவில்லை. அந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சிறு தவறு செய்தாலும், பல கோடி இழப்புகள் ஏற்படும் சூழ்நிலை.
இதற்கிடையில் அவரது அறைக்கு அழைக்கப்பட்டேன். அவரிடம் என்னுடைய பெயரைக் கூறியவுடன், உங்களை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். நான் அவரிடம், இவ்வாறாக “10 ஆண்டுகள்” முன்பாக, பல்துலக்கியில் (Tooth brush) உள்ள நைலான் நூல் இழைகள், உடைந்துபோவதாக, உங்கள் நிறுவனத்தில் பல புகார்கள் வரவே, நான் இங்கு வந்து, அதன் காரணத்தைக் கண்டுபிடித்து, புதிய நைலான் நூலிழைகள் கண்டுபிடிக்க உதவினேன். இன்று உலகம் முழுவதும், பல் துலக்கியில் பயன்படுத்தப்படும், நூலிழையின் “காப்புரிமை என்னுடைய பெயரில் உள்ளது” என்றுக் கூறியவுடன் அவரது முகம் முற்றிலும் மலர்ந்துவிட்டது. அவர் கூறினார்….
“இந்த சம்பவம் நடந்தபோது, நான் உலகமெங்கிலுமுள்ள பல்துலக்கி துறைக்கு, தரக்கட்டுப்பாடு துறை தலைவராக இருந்தேன் என்றார். பின்பு நிகழ்ந்த காரியங்கள் சற்று எளிதாக இருந்தன. இவ்வாறாக, கர்த்தர் எளியவனை தூசியிலிருந்து உயர்த்துகிறார்.
மொர்தெகாயை உயர்த்த, “ஆண்டவர், சில ஆண்டுகள் முன்பாகவே, வாயில் காப்பவனாக இருந்த அவனுக்கு எப்படி, ராஜாவின் பிரதானிகளாகிய பிக்தானாவும், தேரேசும்” ராஜாவாகிய அகாஸ்வேருவின் மேல் கைபோட வகைத் தேடியதை தேவன் அறிவித்தாரோ….
அதுபோலவே தேவன் தம்முடைய பிள்ளைகளை தகுந்த நேரத்தில் உயர்த்தும்படி, சில காரியங்களைக் கண்டுபிடிக்க உதவி செய்கிறார். நாம் சாதாரண காவலாளியாக இருந்தாலும், ரகசியங்களை உணர்த்துவது தேவனுக்கு லேசான காரியம்.
இவ்வாறாக நான் என்னுடைய “முதல் வேலையில்” தேறி சற்று நிம்மதியுடன் வீட்டிற்கு வந்தபோது, மிகுந்த மகிழ்ச்சியுடன், எனக்கு நன்கு அறிமுகமான கிறிஸ்தவ நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் இவ்வாறாக, பதவி உயர்வு பெற்றுள்ளேன் எனக் கூறினேன். உடனே அவர் சற்றும் சளைக்காமல், பிசாசு, தனக்கு பிரியமானவர்களுக்கு, உயர்வுகளை அளிக்கிறான்” எனக் கூறினார். எனக்கு ஓரளவு வேதாகமம் தெரிந்திருந்தாலும், இந்த வசனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
“மொர்தெகாய் யூத குலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாக தாழ்ந்துபோவது நிச்சயம்” என அந்நிய ஸ்திரீ சிரேஷும் அறிந்திருந்தாலும், நம்மவர் அறியவில்லை.தேவப்பிள்ளைகளை, தகுந்த வேளை, தம் கரத்தால், கன்மலை மேலாய் உயர்த்திடுவார்.
“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்” (ஏசாயா 40:31).