கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்

Written by Pr Thomas Walker

January 10, 2011

கர்த்தருக்குள் பிரியமான தேவ பிள்ளைகளே!
தேவன் தன்னுடைய பிள்ளைகளையும், சபையாரையும், அவருடைய ஊழியக்காரர்களையும் நேசிக்கிறார். ஏனென்றால் அவர்கள் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள். ஞானஸ்நான உடன்படிக்கை மூலம் அவருடன் உடன்படிக்கை பண்ணினவர்கள். எனவே வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தராலே நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த வருடத்திலும் தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் என்னவென்றால் “கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.” (சங்.115:12). இந்த வசனம் நமக்கு தேவனுடைய பாதுகாப்பையும், தேவனின் கரிசனையையும் விளக்குகிறது. தேவன் தன்னுடைய பிள்ளைகளின் தேவைகளை சந்திக்கிறார். உலகில் தனிப்பட்ட ஒவ்வொருவருடைய தேவைகளும் பல வழிகளில் சந்திக்கப்படுகின்றன. தேவன் தரும் ஆசீர்வாதத்தில் வேதனைகள் கிடையாது. யார் மூலம் தேவன் நம் தேவைகளை சந்திக்கிறார். எந்த வழியில் என்பதும் மிகவும் முக்கியம்.


தேவன் யாரைக் கொண்டு, நமக்கு நன்மை செய்தாலும் தேவன் நடத்துகிறாரா? என்பதை சிந்திக்க வேண்டும். (யோவான் 1:12) “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.” தேவனுடைய பிள்ளைகள் தான் அவருடைய சுதந்தரம். ஆபிரகாமின் சந்ததியாரான இஸ்ரவேலர் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், புறஜாதிகளாகிய நாமும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட படியினால் இரட்சிக்கப்பட்ட நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆரோன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஆசாரியக்கூட்டம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளும், ஊழியம் செய்யும் ஆசாரியர்களும் அவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
மத்.6:28, 30-34 வசனங்களில் நாம் உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்படக் கூடாது. என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். ஆகாயத்துப் பறவைகளை போஷிக்கிற தேவன், காட்டுப் புஷ்பங்களை உடுத்துவிக்கும் தேவன் உங்களை உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? தேவன் நம்மேல் அக்கறையாக இருக்கிறார். நாளைய தினத்தைக் குறித்து கவலைப்பட வேண்டாம். நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

*** முதலாவதாகதேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்
மத்.6:33ஆம் வசனத்தில் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்…” அப்பொழுது உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுப்பார். மேலும் லூக்.2:49 வசனத்தில், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.” இயேசு பிதாவின் சித்தம் செய்வதையே தெரிந்துகொண்டு நிறைவேற்றினார். பிதாவுக்கடுத்தவைகளில் இருக்க வேண்டியது என்றார். நம்மில் எத்தனை பேர் இன்று இப்படி தேவ சித்தம் செய்பவர்களாக இருக்கிறோம்? எத்தனை பிள்ளைகள் இன்று இப்படி சொல்லக்கூடிய அளவில் வாழ்கிறார்கள்?

*** இரண்டாவதாகதேவன் ஞானத்தை சம்பூரணமாய்த் தருகிறார்
யாக்.1:5,6ஆம் வசனங்களில், “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” விசுவாசத்துடன் கேள், சந்தேகப்படாமல் கேள், அப்பொழுது நிறைவாக ஆசீர்வாதம் பெறுவாய். யாக்.5:15 வசனத்தில், “…விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்;”

*** மூன்றாவதாகதேவ சித்தம் அறிந்து ஜெபிக்க வேண்டும்
1யோவான் 5:14,15ஆம் வசனத்தில், “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்…” நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். யாக்.4:2,3ஆம் வசனங்களில் “…நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.” நீங்கள் விண்ணப்பம் பண்ணியும் உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று, தகாத விதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். எனவே தேவனுடைய சித்தம் அறிந்து, விசுவாசத்துடன் ஜெபித்தால், அது அவனுக்கு கொடுக்கப்படும்.

*** நான்காவதாககவலைகளை அவர்மேல் வைத்துவிடுங்கள்
1பேது.5:7ஆம் வசனத்தில், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” தேவன் நம்மேல் அக்கறையுள்ளவர், எனவே நாமாக கவலைப்பட்டு பாரங்களைச் சுமக்கக் கூடாது. தேவன் நம்மை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் தேவன்மேல் வைத்துவிட வேண்டும்.

*** ஐந்தாவதாகவாக்குத்தத்தத்தை வைத்து ஜெபிக்க வேண்டும்
ஏசா.41:10ஆம் வசனத்தில், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” சீனா தேசத்தில் அற்புதம் நடந்தது. மிஷனெரிகள் இளம் விசுவாசிகள் கூடி ஆலயத்தில் உபவாசித்து உணவுக்காக ஜெபித்தனர். தேசத்தில் மழை பெய்யாததால், விளைச்சல் இல்லை. கடைகளிலும் உணவு கிடைக்கவில்லை. மிஷனெரிகள் விசுவாசப் போதனைகளை கொடுத்து, சபையில் உபவாச நாட்களை நியமித்து 3 நாட்கள் ஒருமனதுடன் உணவுக்காக ஜெபித்தனர். மழை பெய்வது போல சத்தம் கேட்டது. வெளியே போய் பார்த்தால் ஆலயத்தின் காம்பவுண்டுக்குள் கோதுமை விழுந்து கிடந்தது. விசுவாசிகள் தேவையான கோதுமையை ஒவ்வொருவரும் எடுத்துச் சென்றனர். ஆச்சரியமான விதத்தில் தேவன் தேவைகளை சந்தித்தார் என்று மகிமைப் படுத்தினர். மறுநாள் காலையில் செய்தித்தாளில் 1500 கி.மீ. தொலைவிலுள்ள பாமீர் பீடபூமியிலிருந்து பெரிய சுழல் காற்று அடித்து, கோதுமை களஞ்சியங்களின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. எனவே கோதுமையும் காற்றடித்து ஜெபிக்கும் இடத்தில் வந்து போடப்பட்டது. இந்த கோதுமையை ருசி பார்த்தவர்தான் ஹட்சன் டெய்லர். மிஷனெரியின் மகள், எவ்வளவு பெரிய அற்புதத்தை தேவன் தன் பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்டு செய்தார்.

*** ஆறாவதாகதேவ ஆலோசனையைக் கேட்கும்போது தேவைகள் சந்திக்கப்படுகிறது
2இராஜா.4:1-7ஆம் வசனங்களில், தீர்க்கதரிசியின் விதவையான மனைவி தன் கடன் பிரச்சனைக்காக தேவ மனிதனாகிய எலியாவிடம் ஆலோசனைக் கேட்டாள். எலியாவின் ஆலோசனைப்படி செய்ததால், அவள் கடன் தீர்ந்தது. மீந்ததைக் கொண்டு அவளும் அவள் பிள்ளைகளும் சந்தோஷமாக வாழ்ந்தனர். மேலும் பஞ்ச காலத்தில் எலியா தீர்க்கதரிசி தேவ ஆலோசனைப்படி சாரிபாத் விதவை வீட்டுக்குள் தங்கும்படி கட்டளை பெற்று கீழ்ப்படிந்ததால் பஞ்சகாலம் முழுவதும் போஷிக்கப்பட்டார்.


இந்த வருடம் தேவன் நமக்கு நன்மைகளைத் தருவார். தேவன் நம்மை நினைத்திருக்கிறார். அவர் ஆசீர்வதிப்பார். அவர் கரிசனையுள்ள தேவன். அவர் நம்மை விசாரித்து நமது குறைகளையெல்லாம் நிறைவாக்குவார். முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுவோம். விசுவாசத்துடன், தேவ சித்தத்தின்படி ஜெபிப்போம். அவர் சம்பூரணமாய் ஆசீர்வதிப்பார். வாக்குத்தத்தங்களைப் பிடித்துக்கொண்டு தைரியமாய் ஜெபிப்போம். தேவன் அற்புதங்களைச் செய்வார். இந்த ஆண்டில் தேவன் பெரிய அற்புதங்களைச் செய்து நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிமைப்படுவாராக!
அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This