இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை

Written by Pr Thomas Walker

January 21, 2008

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! கர்த்தர் இந்த புதிய வருடத்தில் கொடுத்த வாக்குத்தத்தம் “இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை” (ஏசாயா 44:21). நம்முடைய வாழ்க்கையில் அநேகந்தரம் நாம் நம்பினவர்கள் நம்மை மறப்பதையும், கைவிடுவதையும் அனுபவித்திருக்கிறோம். ஆனால் தேவப்பிள்ளைகள் மேல் தேவன் எப்போதும் நினைவாயிருக்கிறார். மேலும் தகுந்த நேரத்தில் தேவன் அவருடைய பிள்ளைகளை உயர்த்தி மேன்மைப்படுத்த வல்லவராயிருக்கிறார். தேவன் நினைவுகூர்ந்த சில சம்பவங்களையும் தேவ தாசர்களையும் குறித்து இங்கே காணலாம்.

முதலாவதாக – தேவன் நோவாவை மறக்கவில்லை (ஆதி.8:1)

உலகத்தில் அக்கிரமங்கள் மிகுதியான போது தேவன் உலகத்தை அழிக்கச் சித்தங் கொண்டார். அப்பொழுது நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது என்று ஆதி.6:8ல் பார்க்கிறோம். நோவா நீதிமானும் உத்தமனுமாயிருந்து தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு மனதனாயிருந்தான் (ஆதி.6:9). தேவனோடு நெருங்கிய தொடர்புள்ள ஒரு மனிதன் தேவனால் மறக்கப்படுவதில்லை. “நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்” என்று லூக்கா 17:26ல் பார்க்கிறோம். “…ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என்று மத்.24:38,39ல் பார்க்கிறோம். கடைசி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் உணர்வுள்ளவர்களாய் உலகக் காரியங்கள் மேல் ஈடுபாடு கொள்ளாமல், கர்த்தரோடு நெருங்கி ஜீவிக்கும்போது தேவன் நம்மை ஒருபோதும் மறவாதிருப்பார். உலகமே அழிக்கப்பட்டுப் போனாலும் நாம் தேவனால் காப்பாற்றப்பட முடியும்.

இரண்டாவதாக – தேவன் ஆபிரகாமை மறக்கவில்லை

“…தேவன் ஆபிரகாமை நினைத்து, …லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்” ஆதி.19:29ல் பார்க்கிறோம். லோத்து ஆபிரகாமுடன் பிரயாணப்பட்டு கானானுக்குச் செல்லும்வழியில் சோதோமைத் தெரிந்துகொண்டான் (ஆதி.13:12). “சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்” என்று ஆதி.13:13ல் பார்க்கிறோம். எனவே தேவன் அவர்களை அழிக்கச் சித்தங்கொண்டார். ஆபிரகாம் லோத்துவுக்காக மன்றாடினான் (ஆதி.18:22-33). தேவன் ஆபிரகாமை நினைத்தார். அவனிடம் வாக்குப் பண்ணியதை அவர் மறக்கவில்லை. லோத்து சோதோம் ஜனங்களோடு அழிக்கப்பட்டுப் போகாதபடி தேவன் அவனைக் காத்தார். லோத்துவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷ குமாரனுடைய நாட்களிலும் நடக்கும் என்று லூக்கா 17:28ல் பார்க்கிறோம். கடைசி காலத்தில் தேவனோடு ஐக்கியம் கொள்ளாமல் உலக சிநேகத்தை நாடி, நரக ஆக்கினைக்கு நேராக ஓடிக்கொண்டிருக்கும் ஜனங்களுக்காக பரிந்து பேசும் தேவ தாசர்களை தேவன் மறக்கமாட்டார். அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டார். பதில் கொடுப்பார்.

மூன்றாவதாக – தேவன் யோசேப்பை மறக்கவில்லை

யோசேப்பு சொப்பனத்தின் அர்த்தத்தை தெரிவித்துவிட்டு பானபாத்திரக்காரனின் தலைவனிடம் நீ வாழ்வடைந்திருக்கும்போது என்னை நினைத்துக்கொள் (ஆதி.40:14) என்று சொன்னான். ஆனால் பான பாத்திரக்காரரின் தலைவன் அவனை நினையாமல் யோசேப்பை மறந்து விட்டான் (40:23). ஆனால் தேவன் அவனை மறக்கவில்லை. யோசேப்புக்கு தேவன் சொப்பனங்கள் மூலமாக அநேக வாக்குத்தத்தங்கள் கொடுத்திருந்தார். ஆனால் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள் அவற்றிற்கு முற்றிலும் வித்தியாசமாக காணப்பட்டது. யோசேப்பு எகிப்திலே அடிமையாக விற்கப்பட்டு போத்திபாரின் வீட்டிலே இருந்தபோதும் அவன் தன் எஜமானுக்கும், தேவனுக்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். அதனால் தேவன் அவனை மறக்கவில்லை. கர்த்தர் அவனோடுகூட இருந்தார். தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாயிருக்கும் போது, தேவன் நம்மை மறக்க மாட்டார். சூழ்நிலைகள் பாதகமாகத் தோன்றலாம், நம்மால் நன்மை பெற்றவர்கள் நம்மை மறந்தும் போகலாம், ஆனால் தேவன் நம்மேல் நினைவாயிருப்பார்.

நான்காவதாக – தேவன் மொர்தெகாயை மறக்கவில்லை

மொர்தெகாய் எஸ்தர் ராஜாத்தியின் சிறிய தகப்பன். ராஜாவாகிய அகாஸ்வேருவின் மேல் கைபோட வகைதேடிய இரண்டு பிரதானிகளை மொர்தெகாய் ராஜாத்தியாகிய எஸ்தர் மூலம் ராஜாவுக்கு அறிவித்தான். அந்தக் காரியம் விசாரிக்கப்பட்டு அந்தப் பிரதானிகள் இருவரும் தூக்கிப் போடப்பட்டார்கள் (எஸ்.2:21-23). அகாஸ்வேரு ராஜா மொர்தெகாயை கனப்படுத்தாமல் மறந்துபோனான். ஆனால் தேவன் அவனை மறக்கவில்லை. மொர்தெகாய் தேவனுக்குக் கொடுக்கவேண்டிய கனத்தை மனிதனுக்குக் கொடுக்கவில்லை. எனவே அவன் பிரபுவாகிய ஆமானை வணங்கவும் இல்லை, நமஸ்கரிக்கவும் இல்லை என்று எஸ்தர் 3:2ல் பார்க்கிறோம். யூதனாகிய மொர்தெகாய் தன்னை வணங்காததைக் கண்ட ஆமான் மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க வகை தேடினான். இவைகளை மொர்தெகாய் எஸ்தருக்கு சரியான நேரத்தில் அறிவித்து யூதரை காப்பாற்ற வகை செய்தான் (எஸ்தர் 4:14). மேலும் ஆமான் உக்கிரம் நிறைந்தவனாய் 50 முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்து மொர்தெகாயை நாளைதினம் தூக்கிப்போட நினைத்தான். அன்று இராத்திரியில் தேவன் மொர்தெகாயை நினைத்தார். ராஜாவுக்கு நித்திரை வராதபடியால் நடபடிப் புத்தகத்தை ராஜா வாசிக்கக் கேட்டான். அதில் மொர்தெகாய் ராஜாவுக்கு செய்த நன்மை வாசிக்கப்பட்டது. அப்பொழுது ராஜா மொர்தெகாயை கனமும் மேன்மையும் செய்யவில்லை என்பதை உணர்ந்து அதை ஆமான் மூலமாக செய்தார். ஒரு மனிதன் தேவனைக் கனம்பண்ணி அவருக்கு முதலிடம் கொடுக்கும்போது தேவன் அவனை மறவாமல் கனம் பண்ணுவார்.

 ஐந்தாவதாக – தேவன் தாவீதை மறக்கவில்லை

“நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்” என்று தாவீது கூறுவதை சங்.40:17ல் பார்க்கிறோம். கர்த்தர் சவுலை இஸ்ரவேலின் ராஜாவாய் இராதபடி தள்ளிவிட்டு தமது இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்க விரும்பினார். தாவீது சாமுவேல் தீர்க்கதரிசி மூலமாக இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டான். அந்நாள் முதல் கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் வந்து இறங்கினார் (1சாமு.16:13). கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி அவனைக் கலங்கப் பண்ணிற்று (1சாமு.16:14). தாவீது ராஜ சமூகத்திற்கு அழைத்து வரப்பட்டான். தாவீது சுரமண்டலத்தை வாசித்தபோது பொல்லாத ஆவி சவுலைவிட்டு நீங்கியது (1சாமு.16:28). பெலிஸ்தனாகிய கோலியாத்தைக் கொன்றவனுக்கு தனது குமாரத்தியை கொடுப்பதாக சவுல் அறிவித்தான். தாவீது கோலியாத்தைக் கொன்றான். தாவீது திரும்பி வந்தபோது சவுல் கொன்றது ஆயிரம்; தாவீது கொன்றது பதினாயிரம் என்று பெண்கள் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தபடியால் தாவீதை காய்மகாரமாய்ப் பார்த்தான் (1சாமு.18:9). அவனைக் கொல்ல வகை தேடினான் (1சாமு.18:11). சவுல் தனது குமாரத்தியாகிய மேராபை வேறொருவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். சவுல் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. ஆனால் சிறுமையும் எளிமையுமான தாவீதைத் தேவன் மறக்கவில்லை. சவுலின் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தார். பெலிஸ்தர் கையில் விழாதபடி அவனைக் காப்பாற்றினார் (1சாமு.18:23,27). தாவீது இஸ்ரவேலுக்கு ராஜாவானான் (2சாமு.5:3). கர்த்தருடைய ஆலயத்தை கட்ட வேண்டுமென்பது தாவீதின் வாஞ்சையாயிருந்தது (2சாமு.7:2). அதனால் தேவன் அவனை தமது இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டார். நாமும் கர்த்தருடைய காரியங்களில் வைராக்கியமாய் இருக்கும்போது தேவன் நம்மை உயர்த்துவார். நம்மை நினைவில் கொள்வார்.

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! நாமும் தேவனைக் கனம்பண்ணி, தேவனோடு நெருங்கி ஜீவித்து, நரக ஆக்கினைக்கு நேராக செல்லும் ஜனங்களுக்காகப் பரிந்து பேசுவோமாக! நாம் உண்மையுள்ளவர்களாய் வாழ்ந்து, தேவனுடைய காரியங்களில் வைராக்கியமாய் வாஞ்சையாய் இருக்கும்போது தேவன் நம்மை மறவாமல் ஆசீர்வதித்து, நம்மை உயர்த்துவார்.






Author

You May Also Like…

Share This