தேவன் குறைவுகளை நிறைவாக்குகிறவர்

Written by Pr Thomas Walker

January 4, 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

“இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம்” தேவன் தம்முடைய ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார். நாம் ஆசீர்வதிக்கப்படுவது மட்டுமல்ல, நம் மூலமாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய திட்டம். தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்து, அவன் மூலம் பூமியின் வம்சங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட அவனை மேன்மையாக வைத்தார். தேவன் குறைவுகளை நிறைவாக்குகிறவர், கானாவூரில் கூட திருமண வீட்டில் ஏற்பட்ட குறைவை நிறைவாக்கினார். இந்த புத்தாண்டிலும் தேவன் உங்களை திருப்தியாக்கி, சம்பூரணமடையச் செய்ய விரும்புகிறார்.

பிலி.4:19ஆம் வசனத்தில், “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” என்ற வசனத்தின்படி, மறுமையின் வாழ்வில் மட்டுமல்ல, பூமியிலேயும் மகிமையாய் ஆச்சரியப்பட தக்கவிதத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அற்புதங்கள் செய்வார்.

குறைவுகள் நிறைவாக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?

***முதலாவது – தேவனுடன் தனிப்பட்ட உறவு தேவை:

“என் தேவன்” என்ற தனிப்பட்ட உறவு. தனிப்பட்ட வாழ்வில் அர்ப்பணிப்பு தேவை. அவருடைய அன்பை, கல்வாரி அன்பை உணர்ந்து தன்னை முழுமையாக அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். தேவன் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார். தனிப்பட்ட விதத்தில் தேவனுடன் உறவு சரியாய் இருந்தால் தான் “என் தேவன்” என்று கூற முடியும். சங்.27:1ஆம் வசனத்தில் “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்?” கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? என்கிறார் தாவீது. மேலும், சங்.28:1ஆம் வசனத்தில், “என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்” என்கிறார்.

தானி.3:17ஆம் வசனத்தில், “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்” என்று மூன்று எபிரெய வாலிபர்களும் கூறும்போது தேவனோடு எவ்வளவு ஐக்கியமுள்ளவர்களாக இருந்தார்கள் என்று தெரிகிறது. யோசுவா கூட “நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்” என்று கூறுகிறார். தனிப்பட்ட வாழ்வில் தேவனோடு உறவு உள்ளவர்களையே தேவன் குறைவுகளை நீக்கி நிறைவடையச் செய்கிறார்.

***இரண்டாவதாக – தேவனுடைய ஐசுவரியத்தின்படி நிறைவாக்குவார்:

ஆதி.14:22ஆம் வசனத்தில், “அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு…. உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்” தேவனின் ஐசுவரியம் உலகத்தின் ராஜாக்களை விட மேன்மையானது. தேவனின் ஐசுவரியத்தில் வேதனை இராது.

எபி.4:16ஆம் வசனத்தில், “…நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” தேவன் நமக்காக பரிதபித்து பரிந்துபேசுகிற பிரதான ஆசாரியராக இருக்கிறார். அவரிடம் உங்கள் மனதை திறந்து கூறுங்கள். அவர் உங்கள் பெலவீனங்களில் உதவிசெய்து, குறைவுகளை நிறைவாக்குவார்.

***மூன்றாவதாக – பஞ்ச காலத்தில் குறைவில்லாமல் அவர் சித்தம்படி செய்த எலியாவை போஷித்தல்:

1இராஜா.17:6ஆம் வசனத்தில், “காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்”

உலகத்தில் பஞ்சம் வந்தாலும் அவரைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு குறைவு வராது. புதிய முறையில் காகத்தை வைத்து போஷித்தார். சீன தேசத்தில் சிறைச்சாலையில் பசியால் வாடிய ஒரு மெய் கிறிஸ்தவனுக்கு தேவன் ஒரு எலியை அனுப்பி அவர் அறையிலேயே தினமும் ஒரு சக்கரைவள்ளி கிழங்கை அனுப்பி அவர் பசியைப் போக்கினார். அவர் தம் பக்தரின் தேவையை ஒரு நபரைக் கொண்டோ, ஒரு பிராணியைக் கொண்டோ போஷிக்க வல்லவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். மனிதனை அல்ல, தேவனையே சார்ந்து கொள்ளுங்கள். மனிதனுடைய உதவி விருதா.

***நான்காவதாக – தேவனை தன் வாழ்க்கையின் பங்காக வைத்திருப்பவர்களின் குறைவை நிறைவாக்குவார்:

எண்.12:5ஆம் வசனத்தில், “கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்;” மிரியாம் மோசேக்கு விரோதமாய்ப் பேசினபடியால் தேவன் அவர்களை கூப்பிட்டு எச்சரித்து “நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன?” என்றார். தம் ஊழியக்காரரின் வேதனைகள், துன்பங்களைக் கண்டு அவர்கள் கண்ணீரையும், வேதனையையும் போக்குவார்.

***ஐந்தாவது – அவரை விசுவாசிப்பவர்களுக்கு குறைவுகளை நிறைவாக்குவார்:

எண்.11:20-31ஆம் வசனங்களில், “…உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்” என்றார். எண்.11:31ஆம் வசனத்தில், “அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது…” இவ்வாறு இஸ்ரவேலரை வனாந்திரத்தில் காடையைக் கொடுத்து போஷித்தார்.

***ஆறாவது – ஞானத்தில் குறைவு ஏற்பட்டால் அவரை நோக்கி ஜெபிக்க வேண்டும்:

யாக்.1:5 ஒருவன் ஞானத்தில் குறைவுபட்டால் சம்பூரணமாகக் கொடுக்கும் அவரிடம் ஜெபிக்க வேண்டும். அப்பொழுது குறைவு நிறைவாகும். மேலும் சங்.95:7ஆம் வசனத்தில், கர்த்தரின் கைக்குள்ளான ஆடாக வாழ்ந்தால், அவர் நமக்கு மேய்ப்பராக இருக்கும்போது ஒரு குறைவும் வராது.

***ஏழாவதாக – தேவனே நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானவர்:

1கொரி.1:31ஆம் வசனத்தில், “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” கிறிஸ்து இயேசுவுக்குள் ஐசுவரியம், நீதி, பரிசுத்தம், மீட்பு எல்லாம் உள்ளது. அவரை ஏற்றுக்கொண்டு, அவரின் பிள்ளையாக மாறினால் உன்னதங்களில் உள்ள சகல ஆசீர்வாதங்களும் உங்களுக்கு நிறைவாய் கிடைக்கும். அவரைப்பற்றி அறிய, அறிய குறைவுகள் நீங்கி வாழ்க்கையில் நிறைவைப் பெற முடியும்.

அன்பு நண்பரே! இப்புதிய ஆண்டிலும் உங்கள் குறைகளை சம்பூரணமாய் நிறைவாக்கி உங்களை மகிழ்ச்சியாக்குவார். உங்கள் தேவன் அவருடைய ஐசுவரியத்தின்படி உங்கள் தேவைகளையெல்லாம் மகிமையாய் நிறைவாக்குவாராக! ஆமென்.

Author

You May Also Like…

Share This