பக்தியுள்ளவனைக் கர்த்தர் தெரிந்துகொண்டார்

கடந்த மாதம், நான் என்னுடைய அலுவலக பணியின் காரணமாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஒரு கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே அநேக நிறுவனங்கள் உலகமெங்கிலுமிருந்து, பலதரப்பட்ட கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை, கொண்டுவந்து, அருமையாக, “கண்காட்சியில் வைத்து” பார்வையாளர்களிடம் விவரித்துக் கூறி, வியாபாரம் செய்து வந்தனர்.


என்னுடைய வாடிக்கையாளர் பலர், அந்த “உலகளாவிய கண்காட்சியில்” தங்கள் பொருட்களை பார்வைக்காக வைத்திருந்தனர். நான் அவர்களை உற்சாகப்படுத்தும்படி சென்றிருந்தேன். என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. ஓரளவுக்கு ஹிந்தி பேசுவார். எனக்கும் ஓரளவுதான் ஹிந்தி பேசத் தெரியும். இவ்வாறாக நாங்கள் “வார்த்தை பாதி, செய்கை பாதி” என சம்பாஷித்துக்கொண்டிருந்தோம்.
அச்சமயம் அவருடைய “கண்காட்சி கூடத்திற்கு” ஒரு காவியுடை தரித்திருந்த இளைஞன் வந்தார். உடனே என்னுடைய வாடிக்கையாளர், அந்த காவியுடை மனிதரை எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தார். நானும் அரைகுறை ஹிந்தியில் சில கேள்விகள் கேட்டு, தடுமாறுவதைக் கண்ட அந்த “காவியுடை இளைஞர்” என்னிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்.
அவர் என்னிடம் இவ்வாறாகக் கூறினார்.
ஐயா, நான் “ஹரே கிருஷ்ணா இயக்கத்தில்” மிஷனரியாக இருக்கிறேன். எனக்கு சம்பளம் எதுவும் கிடையாது. ஜெய்பூர் முழுவதும் சைக்கிளில் சென்று, எங்கள் இயக்கத்தை ஆதரிக்கும் மக்களிடம் உதவிகள் பெறுவதும், அவர்களை நாங்கள் நடத்தும் “பாடல் ஆராதனைக்கு அழைத்து” பாடல் கற்றுக்கொடுப்பதும், பகவத் கீதையை கற்பிப்பதும் முக்கிய பணியாகும்.
மேலும் நாங்கள் ஜெய்பூரில் மட்டும், தினமும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு, இலவசமாக மதிய உணவு வழங்குகிறோம். இதன் மூலம் எனக்கு மன அமைதி கிடைக்கிறது என்று சொன்னார்.


அவர் மிகவும் நேர்த்தியாக, தெளிவாகப் பேசுவதைக் கண்டு, அவருடைய குடும்பப் பின்னணி குறித்து விசாரித்தேன். அவர் என்னிடம்… ஐயா, என்னுடைய தந்தையார், ஜெய்பூரில் ஒரு சிறந்த மருத்துவர். ஒரு அக்கா அமெரிக்காவிலும், மற்றொரு அக்கா நியுசிலாந்திலும் இருக்கிறார்கள், என்னுடைய அண்ணன் டெல்லியில் ஒரு பெரிய, அயல்நாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நானும் கூட ஒரு பெரிய கல்லூரியில் MBA., பட்டம் பெற்று HDFC வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தேன். அச்சமயம் எனக்கு, என்னுடன் பணிபுரியும் வேறொரு “மேலாளருடன்” திருமணமும் ஒழுங்காகி இருந்தது.
இதற்கிடையில், “நான் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் இந்த அற்புத திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டேன்” எனக்குள் ஏதோ ஒரு சக்தி, என்னை இதற்கு அர்ப்பணிக்கத் தூண்டியது. நானும் “சந்நியாசியாக” இதில் இணைந்துவிட்டேன்.


என்னுடைய குடும்பம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். நான் திருமணம் செய்துகொள்ள இருந்த அந்தப் பெண்ணும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாள். நான் உறுதியாக துறவறம் மேற்கொண்டு விட்டேன். ஆரம்ப நாட்களில் கஷ்டமாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல பழகிவிட்டது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவருடைய அர்ப்பணிப்பு என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. இவ்வளவு பெரிய வேலையை, ஏழைகளுக்கு உணவு அளிக்கும் சேவைக்காக, உதறித் தள்ளிவிட்டாரே! மேலும் அதில் மிகுந்த அமைதியுடனும், உண்ணவும், உடுக்கவும் இருந்தால் போதும் என்ற மன நிறைவுடனும் வாழ்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்.
நான் அவரிடம்… ஐயா நான் ஒரு கிறிஸ்தவன். நீங்கள் இயேசுவின் கற்பனைகளில் பல கற்பனைகளை கைக்கொள்கிறீர்கள் என்று கூறி, “நற்கிரியைகள் குறித்த” இயேசுவின் போதனைகளை விவரித்துச் சொன்னேன். மேலும் நான் அவரிடம் “நற்கிரியைகள் செய்யாமல்” பரலோக ராஜ்யம் எவரும் சேர முடியாது. எனவே நீங்கள் செய்யும் பணி “பரலோகம் சேர வேண்டும்” என்று நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய பணி. இதை ஒரு ஓட்டப்பந்தயம் என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த “பந்தயத்தில் ஓடுவதற்கு துவக்கம் மிக மிக முக்கியம். உங்களைப் பொறுத்தவரை நீங்கள் ஓடுகிறீர்கள். ஆனால் வாசல் வழியாக உட்பிரவேசிக்கவில்லை” எனவே உங்கள் ஓட்டம், முடிவிலே பரலோகத்தில் “அங்கீகாரம் பெறாது” என்று கூறி… இயேசுவின் மூலம் கிடைக்கும் “பாவ மன்னிப்பையும்” இயேசுவே பரலோக பயணத்திற்கு வாசல் என்பதையும் விவரித்துக் கூறினேன்.
அவருடைய முகம் மலர்ந்தது. எனக்கு மிகவும் நன்றி கூறி… அவர் இவ்வாறாகக் கூறினார்… ஐயா என்னைப் படைத்தக் கடவுளிடம், என் பாவங்களைக் கூறி, அறிக்கையிட்டு, அவர் மூலமாய், இந்த புனித யாத்திரையைத் தொடர்ந்து பரலோகம் சேர ஆசைப்படுகிறேன். நான் கண்டிப்பாக பாவ அறிக்கை செய்வேன். பைபிள் வாசிப்பேன் என்று கூறி கடந்துசென்றார்.


தேவன் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள பல்லாயிரம் இளைஞரை சந்திக்க கருத்தாய் ஜெபிப்போம்.
“பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்;” சங்.4:3



Author

You May Also Like…

Share This