தேவன் விசுவாசிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்?

Written by Pr Thomas Walker

April 22, 2011

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவனுடைய சபையில் நாட்டப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையிடமிருந்தும் தேவன் என்ன எதிர்பார்க்கிறார்? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். தேவனுடைய பிள்ளைகள் வேதத்தை அப்படியே முழுமையாக விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசிகள் மத்தியில் ஒற்றுமையும் ஐக்கியமும் காணப்பட வேண்டும். பிரிவினைக்கு இடம்கொடுக்கக் கூடாது. பிரிவினையையும், குழப்பத்தையும், கலகத்தையும் நம்மிடையே கொண்டுவருபவன் சாத்தான். அவனுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். அடுத்தப்படியாக விசுவாசிகள் நடமாடும் நிருபங்களாக உண்மையான கிறிஸ்தவ அனுபவத்தைப் பெற்று வாழவேண்டும். மனந்திரும்புதல் பாவ மன்னிப்பு, பரிசுத்த வாழ்க்கையில் நிலைத்திருக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று ஆவியின் கனிகள் நிறைந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று திருச்சபை எதிர்பார்க்கிறது.


நாம் நற்கிரியைகள் செய்வதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். இயேசுவாகிய திராட்சைச் செடியோடு, கொடிகளாக இணைக்கப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும். கிளை நறுக்கி, சுத்திகரிக்கப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும். கலா.5:22ல் சொல்லப்பட்ட ஆவியின் கனிகளான “…அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்…” போன்ற கனிகளால் நிறைந்த வாழ்க்கை வாழவேண்டும். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். லூக்.10:33ல் நல்ல சமாரியன் போல மனதுருக்கம் உள்ளவர்களாக, ஏழை, எளியவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். மதர்.தெரசா போல குஷ்டரோகிகள், வியாதியஸ்தர்களையும் கவனித்து பராமரிக்கக் கூடிய கிறிஸ்துவின் சிந்தை வேண்டும் என்று கிறிஸ்தவனிடமிருந்து சமுதாயம் எதிர்பார்க்கிறது.

ஒரு விசுவாசி எப்படிப்பட்டவனாக காணப்பட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்? என்பதை கீழே விளக்கமாக பார்ப்போம்:-

 முதலாவதாகவிசுவாசி தேவனுடைய பிள்ளையாக இருக்க வேண்டும்
1யோ.3:1 வசனத்தில், “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை (இயேசுவை) அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.” இயேசு உலகத்தில் மனிதனாக வந்தபோது அவரை ‘மேசியா’வாக ஏற்றுக்கொள்ளவில்லை. பிசாசுகளின் தலைவனால் பிசாசுகளை விரட்டுகிறார் – பெயல்செபூல் என்று கூறினர். பிசாசுடைய பிள்ளைகளால் தேவனை கண்டும் அறிந்து உணர முடியவில்லை. ஏனெனில் அவர்கள் பிசாசினால் உண்டானவர்கள். யோவான் 1:12 வசனத்தில், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.” விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் தான் கிறிஸ்தவர்கள், தேவனால் பிறந்தவர்கள். அவரது பிள்ளைகளுக்கு அவரது சாயல் இருக்கும். இயேசுவினுடைய வல்லமை அவனிடம் இருக்கும்.

 இரண்டாவதாகவிசுவாசி தேவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும்
கிறிஸ்தவன் முழுவதும் அடிமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
ரோமர் 6:22 வசனத்தில், “இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.” அடிமையாக முழுவதும் ஒப்புக்கொடுத்தபின் தான், கர்த்தர் பரிசுத்தம் செய்கிறார். அடிமைக்கு உரிமைகள் இல்லை. தன்னுடைய இஷ்டமானபடி செயல்பட முடியாது. வேலைக்காரன் தன் இஷ்டமானபடி வேலை செய்கிறவன். தன்னை அடிமையாக ஒப்புக்கொடுத்தவர்களைத் தான் தேவன் எதிர்பார்க்கிறார். தேவன் தேடும் மனிதன் அடிமையாக ஒப்புக்கொடுத்தவனே. கன்னி மரியாள் தன்னை முழுவதுமாக அடிமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். ஒரு சாதாரண அடிமை 6 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை பெறலாம். விடுதலை பெற விரும்பாமல் எஜமானிடம் வேலை செய்ய விரும்பினால் அவனுக்கு காதை குத்தி அடையாளமாக ஏற்படுத்தி நிரந்தர அன்பின் அடிமையாக பணியாற்றுவான். அவனை சகோதரனாக பிரியமாக எஜமான் வைத்துக்கொள்வார். நாம் அன்பின் அடிமையாக மனப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கும்போது கர்த்தர் நம்மை மிகவும் அன்பாக நடத்துகிறார்.

 மூன்றாவதாகவிசுவாசி ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்
சங்.32:2 வசனத்தில், “எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.” ஆவியில் கபடமில்லாமல், குற்றமற்ற வாழ்க்கை வாழ்பவனே மெய்யான கிறிஸ்தவன்.

 நான்காவதாகபோர்ச் சேவகனாக தீங்கனுபவிக்க வேண்டும்
எபே.6:12 வசனத்தில், “…மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாக தீங்கநுபவி என்கிறார் பவுல்.Be always ready to fight with the devil. விசுவாசமுள்ள ஜெபம் – முக்கிய ஆயுதமாக உள்ளது. வசனங்கள் எபே.6:14-17ல் சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசம் என்னும் கேடகம், இரட்சணியம் என்னும் தலைச்சீரா, தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். போர்வீரன் முதுகைக் காட்டக் கூடாது. மார்பைத் தான் காட்ட வேண்டும். போர்க்களத்தில் பின்வாங்கும் வீரர்கள் சுடப்படுவார்கள். எனவே எதிரியுடன் நேரிடையாக யுத்தம் செய்ய போர் முனைக்கே ஓடிவிடுவார்கள்.

 ஐந்தாவதாக – உண்மையுள்ள உக்கிராணக்காரனாக இருக்க வேண்டும் (Steward) – தர்மகர்த்தா
1கொரி.4:1,2 வசனங்களில், “…எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன். மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.”
உண்மையுள்ள உக்கிராணக்காரன் கர்த்தர் தன் கையில் ஒப்புக்கொடுத்ததை முறைப்படி செலவழிக்க வேண்டும். பிள்ளைகளை கர்த்தருக்கு ஏற்ற முறையில் வளர்க்க வேண்டும். வீட்டை தேவனுக்காக பயன்படுத்த வேண்டும். ஆஸ்தி, பணம், வேலை, சொத்து எல்லாவற்றிலும் தேவனுக்கு பயந்து பொறுப்புள்ள உண்மையான உக்கிராணக்காரனாக பயன்படுத்த வேண்டும். பணத்தை தாறுமாறாய் செலவழிக்கக் கூடாது.

 ஆறாவதாககற்புள்ள கன்னிகையாக இருக்க வேண்டும்
யூதா 20-25 வசனங்களில், உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ண வேண்டும். தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்… மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ள வேண்டும். வழுவாதபடி உங்களை காக்கவும்… உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர் அவர். தேவன் கறைதிரையற்றவர்களையே எடுக்க வருகிறார். உலகம், மாமிசம் பொல்லாங்கனால் கறைபடாத வாழ்க்கை வாழவேண்டும். கற்புள்ள கன்னிகை – பிறர் முகம் பார்க்கக் கூடாது. தன் நேச மணவாளனுக்கே உண்மையாக இருக்க வேண்டும்.

 ஏழாவதாகஇயேசுவின் பின்செல்லுகிறவர்களாக இருக்க வேண்டும்
யோவான் 10:27ஆம் வசனத்தில், “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.” தேவன் எங்கு சென்றாலும் காடானாலும், மேடானாலும் அவர் காட்டும் இடத்திற்கு அவர் பின் செல்பவனே உண்மையான கிறிஸ்தவன்.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! தேவன் ஒரு விசுவாசியிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்று பார்த்தோம். நாம் தேவன் எதிர்பார்க்கும் குணத்தை உடையவர்களாக மாற வேண்டும். நம் வாழ்வில் உள்ள குறைவுகளை அவரிடம் கூறினால் நம்மை நிறைவாக்கி, நம்மை அவருடைய மாசற்ற சன்னிதானத்தில் சேர்த்துக்கொள்வார்.

கிறிஸ்துவுக்காக உண்மையான போர் வீரனாகவும், அன்பின் அடிமையாகவும், உண்மையுள்ள உக்கிராணக்காரனாகவும், கற்புள்ள மணவாட்டியாகவும், எங்கு சென்றாலும் அவரின் பின்செல்லும் உண்மையான ஆட்டுக்குட்டியாகவும் மாற நம்மை அவருக்கு முற்றிலும் ஒப்புக்கொடுப்போமாக! தேவன் நம் வாழ்க்கையின் மூலம் மகிமைப்படுவார்.
அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This