கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். எனவே மாம்சமான யாவரும் அவரிடத்தில் ஜெபிக்கிறவர்கள். கேளுங்கள் கொடுக்கப்படும் என்கிறார். கேளுங்கள் உங்கள் சந்தோஷம் நிறைவாகும்படி பெற்றுக்கொள்வீர்கள் என்கிறார். ஆனாலும் அவருக்குச் சித்தமானதை அவருக்கு விருப்பமானபடி கேட்டால் பதிலளிப்பார்! தகாதவிதமான விண்ணப்பம், அக்கிரம சிந்தையோடு பண்ணும் ஜெபத்திற்கும் தேவன் பதிலளிப்பது இல்லை. தாவீது ராஜா இவ்வாறு கூறுகிறார். சங்.18:24ஆம் வசனத்தில், “ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்” தேவன் நம்முடைய நீதிக்கும், நம்முடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக பலனளிக்கிறவர் என்ற நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ரோமர் 11:35ஆம் வசனத்தில், “தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” என்கிறார் பவுல் அப்போஸ்தலன்! கடவுள் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்றும், அவர் கடமைப்பட்டவர் என்றும் அவரிடம் கேட்காமல் கிருபையினிமித்தமும் இரக்கத்தினிமித்தமும் நாமத்தினிமித்தமும் பதிலளிப்பார்.
தேவன் நம் ஜெபத்திற்கு பதில் அளிக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
1) உத்தமமாய்ப் பின்பற்ற வேண்டும்:
சங்.18:21ஆம் வசனத்தில், “கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை” என்கிறார். தேவனை உத்தமமாய்ப் பின்பற்ற வேண்டும். சங்.139:24 வேதனை உண்டாக்கும் வழிகளை நம்மைவிட்டு அகற்றி, நித்திய வழியில் நடக்க வேண்டும். சங்.125:5ஆம் வசனத்தில் “தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு”
மேலும் சங்.119:128ஆம் வசனத்தில் “எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்” என்கிறார். உத்தமமாய் தேவனைப் பின்பற்ற சகல பொய் வழிகளையும் வெறுத்து அவற்றைவிட்டு விலகி வாழ வேண்டும்.
2) தேவனுக்கு துரோகம் பண்ணக்கூடாது:
யோசு.7:1ஆம் வசனத்தில், “இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்;” சாபத்தீடானதை நாம் வைத்துக்கொண்டிருந்தால் நாம் தேவனுக்கு முன்பாக துரோகம் பண்ணுகிறவர்களாக இருப்போம். 1நாளா.9:1ஆம் வசனத்தில் தேவனை விட்டு விலகுதல் துரோகம் என்று கூறப்பட்டுள்ளது. 1நாளா.10:13ஆம் வசனத்தில், “அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்” நாம் கர்த்தருடைய வார்த்தையை தேடாமல், உலக ஆலோசனைக்கு இடம்கொடுத்தால் தேவனுக்குத் துரோகம் பண்ணுகிறோம். அஞ்சனம் பார்த்தல், குறிபார்த்தல் போன்றவைகளில் ஈடுபட்டால் தேவனுக்குத் துரோகம் செய்கிறவர்களாயிருப்போம். லூக்.6:16 ஆண்டவரைக் காட்டிக்கொடுக்கிறவன் துரோகி. மேலும் விசுவாச துரோகம் என்பது கர்த்தரை சார்ந்துகொள்வதை விட்டுவிட்டு பணத்தையோ, பொருளையோ, மனிதர்களையோ சார்ந்துகொள்வது பாவம்.
3) ஆண்டவரின் நியாயங்களைப் பின்பற்ற வேண்டும்:
சங்.19:8,9 வசனங்களில், “கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. …கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது” எனவே ஆண்டவரின் வேதத்தைக் கைக்கொள்ள வேண்டும். யூதர்கள் தேவனை 7 முறை தொழுதார்கள். சங்.119:164 “உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்” என்கிறார் பக்தன்.
4) பிரமாணங்களை தள்ளிப்போடக் கூடாது:
யாக்.1:22ஆம் வசனத்தில், “…நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” வசனத்தின்படி வாழ்பவர்களையே தேவன் நோக்கிப் பார்ப்பார். சங்.119:8ஆம் வசனத்தில், “உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்” மனமகிழ்ச்சியாயிருக்கிறேன், உமது வசனத்தை மறவேன். மனமகிழ்ச்சியோடே வசனத்தைத் தியானிக்காவிட்டால் தள்ளிப்போடுகிறோம் என்று அர்த்தம். வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருந்து அதை தியானிக்க வேண்டும்!
5) மனப்பூர்வமாயும் உண்மையுமாயிருக்க வேண்டும்!
சங்.51:6ஆம் வசனத்தில், “இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” நாம் தேவனுக்கு முன்பாக உண்மையாயிருக்க விரும்ப வேண்டும். மேலும் எசே.18:9ல் “என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.”
6) துர்குணத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்:
சங்.18:23ஆம் வசனத்தில், “அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்” என்கிறார். பழைய புளித்தமா ஆகிய துர்உபதேசங்களுக்கு விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்.
7) கைகளில் சுத்தம் காணப்பட வேண்டும்:
சங்.18:24ஆம் வசனத்தில், “…கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்” யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏற முடியும்? கைகளில் சுத்தம் காணப்பட வேண்டும்.
அன்பு நண்பரே! தேவன் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் அளிக்க வல்லவர். அவர் கிருபையினிமித்தமும், இரக்கத்தினிமித்தமும், நாமத்தினிமித்தமும் பதிலளிக்கிறார். எனவே தேவன் நமக்கு பதிலளிக்கும்படியாய் கர்த்தருடைய வழிகளை கைக்கொண்டு வருவோம். தேவனுக்கு துரோகம் செய்யாமல், அவருக்கு முன்பாக மனவுண்மையாயிருப்போம். நம்மை துர்குணத்துக்கு விலக்கிக் காத்துக்கொண்டால் தேவன் தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற நம் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாக நமக்கு பதிலளிப்பார்! ஆமென்!




