கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
இன்றைய உலகம் இருளை நேசிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்கிறீர்களா? பிசாசானவன் நம்மை இருளில் இருக்கப் பண்ணுகிறான். அவன் மனிதனை தீய குணங்களிலும், பொய்யிலும் வாழும்படி தூண்டுகிறான். நாம் உண்மைகளையும், நற்குணங்களையும் இழந்துவிடுகிற காரணத்தால் வாழ்வில் ஒளி இழந்து, சமாதானம் இன்றி, முகத்தின் ஒளியை இழந்து நிற்கிறோம். உலகத்திற்கு ஒளியாக வந்தவர் இயேசு. இயேசு பாவ இருள், சாப இருள், நோய் இருள் போன்று மரண இருளின் பள்ளத்தாக்கில் வாழும் மக்களுக்கு வெளிச்சத்தை கொடுக்கவே மனிதனாக உலகில் வந்து பிறந்தார். தேவனைத் தேடும் ஒவ்வொருவரையும் வெளிச்சம் வீசும் ஜீவ கற்களாக மாற்றுகிறார். இருளில் வாழ்பவர்களை உலகத்துக்கு வெளிச்சம் கொடுப்பவர்களாக மாற்றுகிறார். ஒரு மனிதனும் நித்திய ஜீவனை இழந்து கெட்டுபோவதை இயேசு விரும்பவில்லை. அதற்காகவே பரலோகிலிருந்து மனிதனைத் தேடி வந்தார். மனிதனுக்காக தன் ஜீவனையே கொடுத்தார். அவர் உயிர்த்தெழுந்தார். நம்மேல் கரிசனையுடனும், அக்கறையுடனும் பரிந்து பேசுகிறவராய் இன்னும் உயிருடன் உள்ளார் என்ற உண்மையை மக்களுக்கு பறைசாற்றும்படி நம்மை அழைத்துள்ளார். ஆச்சரியமான அவரது அன்பையும், அவரது புண்ணியங்களையும் அறிவிக்கவே நாம் தெரிந்துகொள்ளப் பட்டவர்கள். இந்த மேன்மையான சுவிசேஷம் நம் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பறைசாற்றி, சாட்சியாக அறிவிப்பது நம் கடமை. ஏன் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும்? என்று பார்ப்போம்.
1) இது நம்முடைய கடமை:
ரோமர் 1:16 “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” மேலும், பவுல் கொரிந்திய சபைக்கு “சுவிசேஷத்தை அறிவிக்காவிட்டால் எனக்கு ஐயோ! உற்சாகமாய் செய்தால் எனக்கு பலன் உண்டு” என்கிறார். சமாதானத்தின் சுவிசேஷத்தை நற்காரியமாய் அறிவிப்பவனுடைய பாதங்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறது.
2) இயேசுவின் கட்டளை:
மாற்.16:15 “…அவர் (இயேசு) அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று தம்முடைய சீஷர்களுக்கு கட்டளை கொடுத்தார். சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷம் தேவை. உலகெங்கும் நாம் போக வேண்டும். குறிப்பிட்ட தேசமோ, இடமோ, மாவட்டமோ, நாடு மட்டும் அல்ல.
3) எல்லா இடங்களிலும் பூரணமாய் பிரசங்கிக்க வேண்டும்:
ரோமர் 15:19,21 “இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்…. கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன்” என்கிறார். தற்காலத்தில் காணப்படும் வசதிகள் ஏதும் அந்நாட்களில் இல்லை. ஆனாலும் ஊழியம் செய்வதில் உற்சாகமாய் செயல்பட்டார்.
4) சுவிசேஷத்தை தைரியமாய் பேச வேண்டும்:
எபே.6:19,20 “சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்” என்கிறார்.
5) எல்லா காலத்தும் உரியது நித்திய சுவிசேஷம்:
வெளி.14:6,7 “…ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்… என்று கூறினான்”
6) சாட்சியாக கண்டிப்பாக அறிவிக்க வேண்டும்:
மத்.24:14ஆம் வசனத்தில் “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” இயேசு கிறிஸ்துவின் வருகை சீக்கிரமாய் வர சுவிசேஷம் பூலோகமெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக அறிவிக்கப்பட வேண்டும். தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட போகிறது. சுவிசேஷம் அறிவிக்கும்போது தேவன் தன்னுடைய இராஜ்ஜியத்துக்கு என்று ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்.
7) இது தேவனுடைய சுவிசேஷம்:
ரோமர் 1:1 “இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்” சுவிசேஷம் உலகத்திலிருந்து உண்டாகவில்லை. பரலோகத்திலிருந்து தேவனிடமிருந்து வந்தது. 2கொரி.2:12 இது கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் இதை அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமை. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் அறிவிக்க வேண்டும்.
அன்பு நேயரே! இந்த சமாதானத்தின் சுவிசேஷம் உலகமெங்கும் பரவி தேவ பெலனையும் விடுதலையும் கொடுக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மனுஷ யோசனையினால் இரட்சிப்பும், விடுதலையும் கிடைப்பது கிடையாது. தேவனுடைய அநாதி தீர்மானம், மனிதர் ஒருவரும் கெட்டு நரகம் செல்வதை தேவன் விரும்பவில்லை. ஞானிகள் தங்கள் ஞானத்தினால் அறிய முடியாது. கிருபையினால் இயேசுவின் செய்தியை உலகத்துக்கு பறைசாற்றுவோம். இயேசுவின் நாமமே எல்லா நாமத்துக்கும் மேலானது. நாம் இரட்சிக்கப்பட அவர் நாமமே கட்டளையிடப்பட்டது என்ற உண்மையை அறிவிப்பதே சுவிசேஷத்தின் மேன்மை. மாரநாதா!