கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் தான் சிருஷ்டித்த மனுஷன் ஆதாமுக்கும் அவன் மனைவி ஏவாளுக்கும் தேவ மகிமையைக் கொடுத்து மகிமையை உடுத்துவித்தார். அவர்கள் பாவம் செய்தபோது தேவ மகிமையை இழந்துவிட்டார்கள். பாவத்தினால் மகிமையை மனுஷன் இழந்துவிடுகிறான். ஆனால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவ மன்னிப்பு பெற்ற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் தேவன் மகிமையைக் கொடுக்கிறார். மேலும் அவரது சரீரமாகிய சபைக்கும் தேவ மகிமையைக் கொடுக்கிறார். ரோமர் 9:4ஆம் வசனத்தில் அவர்கள் இஸ்ரவேலரே, புத்திரசுவிகாரமும், மகிமையும் உடன்படிக்கைகளும், நியாயப்பிரமானமும், தேவராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையது. மேலும் அப்.7:38ஆம் வசனத்தில் “சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே” தேவன் வனாந்திரத்தில் இருந்த சபைக்கு மோசேயை தீர்க்கதரிசியாக வைத்து நடத்தினார். மேலும் தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து பிரித்தெடுத்தார். “எக்ளிஸியா” என்ற கிரேக்க வார்த்தைக்கு உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் (Called out) (என்பது அர்த்தமாகும்) என்று சொல்லுகிறது. ஆராதிக்கும் இடமே சபை. பிரித்தெடுக்கப்பட்ட சபைக்கே தேவன் மகிமையைக் கொடுக்கிறார். சக.10:1ஆம் வசனத்தில் “பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று சொல்லுகிறது. (Bright Clouds) இந்த மகிமையின் மேகமே எழுப்புதலை சபைகளில் கொண்டுவரும்.
மோசேயினால் வழிநடத்தப்பட்ட வனாந்திர சபைக்கு மகிமை எப்படியெல்லாம் வெளிப்பட்டது?
1) மேகம் தேவப்பிரசன்னமே: யாத்.16:10ஆம் வசனத்தில் “ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது” யாத்.20:21ல் ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள். மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தார். கர்த்தர் கார்மேகத்தில் மோசேயிடம் வந்தார், பேசினார். கடைசி காலத்தில் தேவன் முழு மகிமையையும் காண்பிப்பதாக கூறுகிறார். அதற்கான பாத்திரங்களை தான் தேவன் தேடுகிறார்.
2) வெளியரங்கமாக வெளிப்பட்ட தேவமகிமை: யாத்.24:10ஆம் வசனத்தில், “இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக் கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது” தேவ மகிமையை மோசே, ஆரோன் மற்றும் 70 மூப்பர்களும் தரிசித்தார்கள். வனாந்திர சபையில் தேவ மகிமை பிரத்தியட்சமாய் காணப்பட்டது.
3) பட்சிக்கிற அக்கினியாக வெளிப்பட்டார்: யாத்.24:17,18ல் மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப் போல இருந்தது. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து மலையின்மேல் ஏறி இரவும், பகலும் நாற்பது நாள் மலையில் இருந்தார். தேவன் தமது ஊழியர்களை அக்கினி ஜீவாலைகளாக மாற்றி பயன்படுத்துகிறார். எபி.12:29ஆம் வசனத்தில் பட்சிக்கிற அக்கினி என்று சொல்லப்பட்டுள்ளது. மத்.3:11ஆம் வசனத்தில் “அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” அக்கினி சுத்திகரிக்கக் கூடியது.
4) ஆசரிப்பு கூடாரத்தில் தேவ மகிமை தங்கியது: யாத்.25:8, அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. யாத்.33:9 “மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடார வாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்” தேவன் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் வாசம் பண்ணினார். மேகஸ்தம்பத்திலிருந்து மோசேயோடே பேசினார். தேவன் நம் நடுவில் வாசம்பண்ண விரும்புகிறார். வீடும் ஆலயமும் பரிசுத்தமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
5) தேவ குணாதிசயம்: தேவ தயையே மகிமை. மோசே தேவ மகிமையைக் காணவேண்டும் என்று கெஞ்சிக் கெஞ்சி விண்ணப்பம் செய்தார். யாத்.33:18,19ல் அப்பொழுது அவர் உம்முடைய மகிமையை எனக்கு காண்பித்தருளும் என்றார். அதற்கு அவர் என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப் பண்ணி கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன். எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் கிருபையாயிருப்பேன். எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று கூறினார். மேலும், யாத்.34:6,7ஆம் வசனத்தில் கர்த்தர் அவனுக்கு முன்பாக நடந்துபோகிற போது அவர் கர்த்தர், கர்த்தர் இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர். அக்கிரமத்தையும், பாவத்தையும் மன்னிக்கிறவர். குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும் பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.கர்த்தரின் மகிமையை மோசே கண்டார். மேகத்தின் அக்கினியில் கூடாரத்தில் குணாதிசயங்கள் அவர் தயவு, இரக்கம், கிருபையில் அவர் மகிமையைக் காணலாம்.
6) மனிதனின் சரீரம் மூலமும் மகிமை வெளிப்பட்டது: யாத்.29:30,35 ஆரோனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது அவைகளை ஏழுநாள் மட்டும் உடுத்திக்கொள்ளக் கடவன். இந்தப் பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் ஆரோனுக்கும், அவன் குமாரனுக்கும் செய்வாயாக. ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைப்பண்ணு. மேலும் மோசே தேவனுடன் இருந்ததால், மோசேயின் முகம் பிரகாசமானது. ஊழியக்காரர்கள் ஆரோனைப்போல அழைக்கப்பட்டனர்.
மகிமையின் 4 அம்சங்கள்:
1) பரிசுத்தமாக்கும் மகிமை: யாத்.29:44ஆம் வசனத்தில் “ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்” தேவன் ஊழியர்களையும், விசுவாசிகளையும் பரிசுத்தப்படுத்துகிறவர்.
2) வழிகாட்டும் மகிமை: யாத்.13:21 இஸ்ரவேலர் இரவும், பகலும் வழிநடக்கக் கூடும்படிக்கு கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த, மேகஸ்தம்பத்திலும் இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும், அவர்களுக்கு முன் சென்றார்.
3) பாதுகாக்கும் மகிமை: எண்.14:10ஆம் வசனத்தில் அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறிய வேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள். உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாக காணப்பட்டது. தேவன் தமது ஊழியக்காரரை அவருடைய மகிமையினால் மூடிப் பாதுகாக்கிறார்.
4) போஷிக்கும் மகிமை: யாத்.16:7,8ஆம் வசனத்தில் “விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள். பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திர்ப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்…என்றான்” தேவ மகிமை நம்முடன் இருந்தால் நாம் போஷிக்கப் படுவோம்.
இதை வாசிக்கும் அன்பு நண்பரே! தேவன் உங்களையும் உங்கள் சபையையும் மகிமையினால் நிரப்பி, நடத்த விரும்புகிறார். நீங்கள் உலகத்தால் கறைபடாமல் உங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். தேவனுக்கு என்று பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆரோன் குடும்பத்தைப் போலவும் தேவ சமூகத்தில் உபவாசத்தோடும் ஜனத்தில் மீறுதலுக்காக பரிந்துபேசும் ஜெபவீரர்களாக தேவ சமூகத்தில் தங்கியிருக்கும் தேவ மகிமை உங்கள் மூலமாய் வெளிப்படும். தேசத்தில் எழுப்புதல் அக்கினி ஊற்றப்படும்! அல்லேலூயா.




