கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
சிலுவை ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையை விட்டுப் பிரிக்கவே முடியாத ஒன்று. 2000 வருஷங்களுக்கு முன் அரசாங்கம் வன்மையாக தண்டிக்க விரும்புகிறவர்களை தண்டித்து, கொல்ல உபயோகித்தது சிலுவை மரம். இது அவமானமான சின்னம். இதில் இயேசு மரித்ததால் சிலுவை மகிமையான சின்னமாக மாறிற்று. இங்கிலாந்து ராணியின் கிரீடத்திலும், அமெரிக்க தேசக் கொடியிலும், பெண்களின் தாலியிலும் சிலுவை உள்ளது. சிலுவை உயர்வாக எண்ணப்படுகிறது. உபா.21:23 “…தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்;” சிலுவையுத்தம் (ழடிடல றுயச) ஐரோப்பாவில் நடந்தபோது சிலுவையே போர்ச் சின்னமாக காணப்பட்டது.
1கொரி.1:23ல், “நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்” மேலும் 1கொரி.1:18ல் “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” சிலுவை சாபத்தை நீக்குகிறது.
சிலுவையின் மேன்மையைப் பற்றி பார்ப்போம்:
தேவன் பாவத்தையே பார்க்க மாட்டாத சுத்த கண்ணன், பரிசுத்தர். பாவம் செய்யும் மனிதன் தேவனுடன் உடனே தொடர்புகொள்ள முடியாது, பெரிய பிளவு இருக்கிறது. தேவனோடு மனிதனை ஒப்புரவாக்குவதற்கு ஒரே வழி சிலுவை வழி தான். இயேசுவின் இரத்தம் நமக்காக சிந்தப்பட்டதால், தேவனோடு உறவு ஏற்பட்டது. இரத்தம் சிந்துதலாகிய பலி, பாவத்திற்கான பிராயச்சித்தம் செய்யப்பட்ட இடம் சிலுவையே. சிலுவை மரணத்தால் பாவத்திற்கு பரிகாரம் செய்யப்பட்டது. இரத்தம் சிந்தி இயேசு நமக்காக மரித்து பாவத்துக்கு பரிகாரத்தைச் சிலுவை மரணத்தால் நிறைவேற்றினார்.
பழைய ஏற்பாட்டில் தேவன் ஏற்படுத்திய ஒழுங்கு பாவத்திற்குப் பரிகாரமாக குற்றமில்லாத இரத்தம் பலியாக செலுத்தப்பட வேண்டும். எனவே ஆபேல் பலி செலுத்தினான். மந்தையிலிருந்து ஆடு கொல்லப்பட்டு இரத்தம் சிந்தப்பட்டது. எனவே தேவன் ஆபேலின் பலியை அங்கீகரித்தார். பாவ மன்னிப்புக்கு இரத்தமே அடையாளம். மோசே இஸ்ரவேலரின் பாவ மன்னிப்புக்காக பஸ்கா ஆசரிப்பு நியமனத்தை நியமித்தார். பஸ்கா பண்டிகையின் போது மோசே ஒரு வயது பழுதற்ற ஆட்டை அடித்து இரத்தத்தை வாசல் நிலைக்கால்களில் பூச வேண்டும் என்றார். இரத்தம் பூசிய வீடுகளில் சங்காரத் தூதனால் சேதம் வரவில்லை. “இரத்தம் பூசுதல்” அடையாளமாக இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. விசுவாசிகளின் இருதயத்தில் நிலைக்கால்களில் எப்போதும் இரத்தம் பூசப்பட வேண்டும். நாம் சத்துருவை மேற்கொள்ள, இரத்தக் கோட்டைக்குள் மறைந்துகொள்ள வேண்டும். இஸ்ரவேலர் தேவ சமுகத்தில் வரும்போதெல்லாம் பலி செலுத்தி இரத்தத்தோடு தான் வரவேண்டும் என்ற நியமனம் இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன் அடையாளமாக நியமிக்கப்பட்டிருக்கிறது. ஏழையானாலும், புறாவையாவது பலியாக செலுத்த வேண்டும். சங்.51:5; ரோம.5:12 வசனங்களில், எல்லாருமே பாவம் செய்து தேவ மகிமையினால் வரும் ஆசீர்வாதத்தை இழந்து போய்விட்டனர்.
மேலும் ரோம.6:23 வசனத்தில், “பாவத்தின் சம்பளம் மரணம்” இயேசுவின் சிலுவையின் மரணத்தால், இயேசுவின் இரத்தத்தால் நித்திய ஜீவன் உண்டாகிறது. ஏசாயா 64:6 வசனத்தில் எங்கள் நீதியெல்லாம் அழுக்கான கந்தை. பாவியான மனிதனை நினைக்க தேவனுக்கு அவசியமே இல்லை. தமது ஒரே பேரான குமாரனைப் பலியாக ஒப்புக்கொடுத்து உலகத்தில் அன்புகூர்ந்தார். பாவமில்லாத தேவ குமாரன் மனித குமாரனாக வாழ்ந்து தம்மை பலியாக ஒப்புக்கொடுத்தார்.பாவியின் தண்டனையை தேவன் தன்மேல் ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்காவில் பழங்குடி மக்கள் தலைவனின் வீட்டில் கோழிகள் திருடு போய்க்கொண்டே இருந்தன. எனவே திருடர்களுக்கு 10 கசையடி, 20 அடி, 50 அடி, 100 அடி என்று தண்டனை விதித்து மக்களை திருத்த முயன்றும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்பு தலைவனின் தாயே கோழியைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. மரத்தில் கட்டி அடிக்கப் போகும்போது தலைவன் தன் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு 100 அடிகளையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு, தன் அன்பை வெளிப்படுத்தினார்.
எபே.2:8,9 வசனங்களில் கிரியையினால் உண்டானதல்ல, கிருபையால் இரட்சிப்பு உண்டானது. மேலும் அப்.22:3ல், ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படி எபி.9:22ன்படி இரத்தம் சிந்துதலால் மன்னிப்பு உண்டாயிற்று. விலையேறப் பெற்ற இயேசுவின் இரத்தம் எல்லாருக்காகவும் சிந்தப்பட்டது. இனி பிறக்கப் போகிற பிள்ளையைக் குறித்தும் இதுவே நீதி. மேலும் எபி.9:28 வசனத்தில், “கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்” உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியின் சிலுவைப் பாடுகளைச் சிந்தித்து, அதனால் உண்டான ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோமா? என்று ஆராய்ந்து பார்ப்போம். சிலுவையில் இயேசு மரித்ததால் நடந்தது என்ன?
1. தேவனோடு மனிதனை ஒப்புரவாக்கினார்
ரோமர் 5:10 வசனத்தில், “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்ட பின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.” பாவியாகிய நம்மை தேவனோடும் பரிசுத்தரோடும் சேர்த்தார். மரணத்தாலே நமக்கு இது கிடைத்தது. வேறு எந்த மார்க்கத்திலும் இந்த பாக்கியம் இல்லை. இயேசுவின் மரணத்தால் மட்டுமே மனுக்குலத்துக்கு இது கிடைத்தது. 2கொரி.5:18-20 இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கி ஒப்புரவாக்குதலின் ஊழியத்தைக் கொடுத்தார். ஒப்புரவாக்குதலின் உபதேசத்தையும் கொடுத்துள்ளார். ஒப்புரவாக்குதலின் நற்செய்தியே சுவிசேஷம் எபே.2:16 இருதிறத்தாரையும் ஒன்றாக்கினார். கொலோ.1:20,21 வசனங்களில் சிலுவையில் சிந்தின இரத்தத்தாலே… அவர் மூலமாய் ஒப்புரவாக்கினார்.
2. தேவன் இயேசுவுக்குள் பாவியை நீதிமானாகப் பார்க்கிறார்
ரோம.3:28 வசனத்தில், “மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்” என்கிறார் பவுல். விசுவாசத்தினாலேயே மனிதன் நீதிமானாக்கப்படுகிறான்.
ரோம.5:1,9 விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறோம். அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.
ரோம.8:30ல் தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
3. மீட்டுக்கொண்டார்
தீத்து 3:5 மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். பாவம், சாபம், வியாதிகளிலிருந்து மீட்டார். அவருடைய வருகையின்போது நாம் அவரை முகமுகமாய்ப் பார்ப்போம். ரோமர் 3:26 வசனத்தில், “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.”
4. இயேசுவே நமது பலியாக இருக்கிறார்
எபி.2:17 வசனத்தில், “அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.”
1யோவான் 2:2 “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.”
1யோவான் 4:10 “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.” தேவன் நம்மை நேசித்ததால் அவரே இயேசுவை நமக்குத் தந்தருளினார்.
மேலும் சிலுவை நமக்கு வெளிப்படுத்துவது என்ன என்று பார்ப்போம்.
1. சிலுவை அன்பு
யோவான் 13:34 வசனத்தில், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” அன்பு பூரணமாக வெளிப்பட்ட இடம் சிலுவையே. காந்தம் இரும்பை இழுக்கும், களிமண்ணை இழுக்காது. உறுதியாக மாட்டியுள்ள இரும்பை இழுக்காது. உங்களுக்கு தேவன்மேல் அன்பு இருந்தால் அவர் அன்பு காந்தத்தைப் போல உங்களைக் கவர்ந்து இழுக்கும். அன்பு இல்லாதவன் தேவனை அறியான்.
2. சிலுவை வாழும் வழியைக் காட்டுகிறது
1பேதுரு 2:21 வசனத்தில், “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார்.”
3. சிலுவை அவரில் நிலைத்திருப்பதைக் கற்றுக்கொடுக்கிறது
1யோவான் 3:6 வசனத்தில், “அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.”
4. சிலுவை உலகப் பற்றை நீக்குகிறது
கலா.6:14, “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்” சிலுவையைப் பற்றிய தியானம் உலக ஆசையிலிருந்து நம்மை விடுவிக்கிறது.
5. சிலுவை நம்மை பூரணப்படுத்துகிறது
எபி.10:14 வசனத்தில், “ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்”
இதை வாசிக்கும் அன்பு நண்பரே! சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாக உள்ளது. இரட்சிக்கப்படும் நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. சிலுவையின் மரணத்தால் தேவனுடைய அன்பு நம்மேல் பூரணமாக வெளிப்படுகிறது. அவர் நமக்கு இவ்வுலகில் வாழும் அடிச்சுவட்டை வைத்துப் போயிருக்கிறார். தேவனோடும் மனிதனோடும் நம்மை ஐக்கியப்படுத்தி, அவரில் நிலைத்திருக்கச் செய்கிறது. சிலுவை நம் வாழ்க்கையிலிருக்கும் உலகப் பற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறது. சிலுவை நம் வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்தி பூரண வாழ்வுக்கு நேராக வழிநடத்துகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தே நாம் மேன்மை பாராட்டுவோமாக!




