தேவாலயத்தில் இருந்த தேவ மகிமை

Written by Pr Thomas Walker

May 4, 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

தேவன் தமது மகிமையை தேவனுடைய பிள்ளைகளுக்கும் சபைக்கும் கொடுக்கிறார். எகிப்திலிருந்து புறப்பட்டு கானானுக்குச் சென்ற இஸ்ரவேலர் தேவனுடைய மகிமையை ஆலயத்தில் அதாவது ஆசரிப்பு கூடாரத்தில் கண்டனர். தேவ மகிமை நம்மை பரிசுத்தமாக்குகிறது, வழிகாட்டுகிறது. வனாந்திரத்தில் மேகஸ்தம்பம், அக்கினி ஸ்தம்பத்தினால் பாதுகாக்கும் மகிமையால் செயல்பட்டார். போஷிக்கும் மகிமையாய் இஸ்ரவேல் ஜனங்களை மன்னா மூலம் போஷித்தார். தேவன் மனிதர்கள் மத்தியில் வாசம்பண்ண விரும்புகிறார். தேவனுடைய மகிமை மோசே மூலம் மகிமைப்பட்டது. நாமும் தேவ மகிமையைக் காண கெஞ்சி ஜெபிக்க வேண்டும்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தில் தேவனுடைய மகிமை சாலமோன் கட்டின தேவாலயத்தில் காணப்பட்டது:

2நாளா.7:1-3 வசனத்தில் “சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று. கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது. அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்”

தேவமகிமை மக்களின் துன்மார்க்கமான வாழ்க்கையால் விலகியது:

1சாமு.4:21 “தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.” தேவ ஆலயத்தில் இருந்த மகிமை பாவ காரணத்தினால் விலகியது.

தேவ மகிமை நான்கு காரணங்களால் விலகிற்று:

தேவன் நம்முடைய ஆலயங்களில் எழுந்தருளி எல்லாரையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். தேவ மகிமை அவருடைய ஆலயத்தில் தங்கியிருக்க வேண்டும். நாம் நம்மை பரிசுத்தப்படுத்தினால், அவர் மகிமை நம் மேலும் நமது ஆலயத்திலும் தங்கியிருக்க வேண்டும்.

1) எரிச்சல் உண்டாக்கும் விக்கிரகங்கள்:

எசே.8:10ஆம் வசனத்தில் “நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந் தீரப்பட்டிருந்தன. தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட தேவ மனுஷன் சிருஷ்டிகரை தொழுது சேவியாமல் சிருஷ்டிக்கப்பட்ட மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும் தொழுது சேவித்தால் மகிமை நம்மைவிட்டு விலகிவிடும்.

2) நரகலான விக்கிரகங்கள்:

எசே.8:12ஆம் வசனத்தில் “அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.”

3) மூப்பர்களின் அந்தரங்க ஜீவியங்கள்:

எசே.8:11 “இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.” மூப்பர்களும், ஆசாரியர்களும் அந்தரங்க ஜீவியத்தில் தேவனுக்கு பரிசுத்தமாக பிரதிஷ்டை உள்ளவர்களாக வாழவில்லை. எனவே தேவனுடைய ஆலயத்தில் மகிமை தங்கியிருக்கவில்லை.

4) ஆலயத்தில் விபசார தேவதை தம்மூசுக்காக அழுதார்கள்:

எசே.8:14ஆம் வசனத்தில், “என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டுபோனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்” அந்தரங்க வாழ்க்கையில் விசுவாசிகள் பெண்கள், வாலிபர்கள் வாழ்க்கையில் விபசாரம், வேசித்தன ஆவிகளின் கிரியைகள் காணப்பட்டால் ஆலயத்தில் மகிமை தங்கியிருக்காது.

5) சூரியனை நமஸ்கரித்தார்கள்:

எசே.8:16ஆம் வசனத்தில் “என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்”

6) போதை வஸ்துகளை பயன்படுத்துகிறார்கள், கோபமூட்டுகிறார்கள்:

எசே.8:17 “அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.” நமது சரீரம் தேவனின் ஆலயம். நாம் புகைத்து, மதுபானம், லாகரீக போதை வஸ்துகளை உபயோகித்து தேவனுக்கு உக்கிர கோபமூட்டக் கூடாது.

நாம்! நமது வீடுகளிலும், ஆலயத்திலும் தேவ மகிமை தங்கியிருக்கும்படி வாழவேண்டும். நமது சரீரம் தேவன் தங்கியிருக்கும் ஆலயமாகப் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்ரவேலர் அவருடைய கட்டளைகளின்படி நடவாமல் அவர்களைச் சுற்றியிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்தபோது தேவன் உக்கிர கோபம் அடைந்தார். என் கண் தப்பவிடுவதில்லை. நான் இரங்குவதில்லை, அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்க கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்கிறார். அவர் சபைகளின் நடுவில் அவர்களுக்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடுவார். அடையாளம் போடப்பட்டிருக்கிற மக்களை சேதப்படுத்தாமல் மற்றவர்களை தண்டிப்பார்.

அன்பு நண்பரே! தேவ மகிமை ஆலயத்தில் தங்கியிருக்கும்படி நாம் சபைக்காக உபவாசித்து அழுது புலம்ப வேண்டும். நெற்றியில் முத்திரை போடப்பட்ட மக்களாக திறப்பின் வாசலில் நிற்க வேண்டும். இல்லாவிட்டால் எசே.11:23ல் கூறியபடி, “கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது” என்கிறார். நாம் நம்மைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வோம். தேவனுடைய மகிமை ஆலயத்தையும் நம்மையும் நிரப்பும்.






Author

You May Also Like…

Share This