கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதிக்க விரும்புகிறார். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். ஆனால் தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற சில தடைகள் காணப்படுகிறது. அதை நீக்கிவிட்டால் தேவனின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். ஒவ்வொரு விசுவாசியையும் ஆசீர்வதிப்பதே தேவ சித்தம். “கொடுங்கள்” என்பது தேவ விதியாகும். முதலாவது தேவனுக்கு கொடுக்க வேண்டும். தேவன் தான் நமக்கு ஜீவன், சுகம், பெலன் கொடுத்து சம்பாதிக்க ஞானம் தயவு கொடுக்கிறவர். நீங்கள் தேவனுக்கு கொடுப்பது மிக அவசியம். ஏனெனில் உற்சாகமாய்க் கொடுப்பவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். லூக்.6:38 வசனத்தில் “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.” நாம் தேவனுக்கு கொடுக்கும்போது மனப்பூர்வமாக தாராளமாய் உற்சாகமாய் தேவனுக்கு கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கும்படி கொடுங்கள்.
நாம் யாருக்கு கொடுக்க வேண்டும்? என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
1. தசமபாகத்தை தேவனுக்குக் கொடுக்க வேண்டும்
மல்கியா 3:8 வசனத்தில் “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.” மேலும் “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்.3:10). தசமபாகங்களும், காணிக்கைகளும் தேவனுக்கு உரியது. தேவனுக்கு நாம் கொடுக்க வேண்டும்.
2. வரிப்பணத்தை அரசாங்கத்துக்கு கொடுங்கள்
மத்.17:24-27 வசனங்களில் இயேசு பேதுருவிடம் “…நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.” விசுவாசிகள் அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டிய வரிப் பணங்களை கட்டாயம் செலுத்த வேண்டும். இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள் என்றார் இயேசு.
3. ஏழைகளுக்கு இரங்கி கொடுங்கள்
மத்.6:1-4 வசனங்களில், “மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;…. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.” மேலும் 2கொரி.9:9,10 வசனத்தில் “வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்… விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.”
தர்மம் செய்யும்போது மற்றவர்கள் அறியும்படி தாரை ஊதுவியாதே என்கிறார் இயேசு. ஏழைகளுக்கு கொடுக்கிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை தேவன் திரும்பக் கொடுப்பார். விசுவாசியே உன் உள்ளத்தில் ஏழைகளுக்கு எப்பொழுதும் இடம் இருக்க வேண்டும். இந்தியாவில் ஒருவேளைக்கு உணவு இல்லாமல் அநேகர் வாழ்கின்றனர். 40ரூ மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். எனவே தரித்திரரை எப்பொழுதும் நினைத்துக்கொள்ளுங்கள், மறவாதேயுங்கள். லூக்.11:41 வசனத்தில் “உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.”
4. பரிசுத்தவான்களுக்கு கொடுங்கள்
2கொரி.8:4 மக்கெதோனியா நாட்டுச் சபைகள் “தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.” மக்கெதோனியா நாட்டுச் சபையார் கொடிய தரித்திரராக இருந்தபோதிலும் தாராளமாய்க் கொடுத்தார்கள்.
2கொரி.8:1-4 வசனங்களில் மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை என்னவென்றால், “அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்கள்…” மேலும் லூக்.21:1-4 வசனங்களில் ஏழை விதவை 2 காசு போட்டாள், அதிகமாகப் போட்டாள் என்றார். தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். கொடுப்பது கிருபை. கொடுக்காதவன் கிருபை பெறாதவன்.
5. நற்கிரியைகளுக்காகக் கொடுங்கள்
மத்.5:16 வசனத்தில் “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” தேவனுடைய சேவைக்காக நம் பெலன், பணம், நேரம் தாலந்துகள் எல்லாவற்றையுமே கொடுக்க வேண்டும். 2கொரி.9:8ல் “மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.”
நாம் தேவனுக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதை நாம் பார்ப்போம்
1. தேவனுக்கு கொடுக்கும்போது விளம்பரம் செய்யக்கூடாது
மத்.6:2 வசனத்தில் “நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்கிறார் இயேசு.
2. நம்முடைய தகுதிக்குத் தக்கதாக நாம் கொடுக்க வேண்டும்
1கொரி.16:1,2 வசனங்களில் “….தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக் கடவன்.”
3. மனப்பூர்வமாய் கொடுக்க வேண்டும்
1நாளா.29:3-9 வசனங்களில், கர்த்தருடைய ஆலயத்தின் வேலைக்காக தாவீது தான் சவதரித்த அனைத்தையும் தவிர, தனக்கு சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் கொடுத்தான். பிரபுக்களும், ஆயிரம் பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ஜனங்களும் மனப்பூர்வமாய் கொடுத்தார்கள். மனப்பூர்வமாய் பிரபுக்கள் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள். உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்…
4. தாராளமாய்க் கொடுக்க வேண்டும்
2கொரி.9:6,7 வசனங்களில், “…சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”
5. உற்சாகமாய் கொடுக்க வேண்டும்
யாத்.35:21-31 வசனங்களில், “…எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்…. இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.” எண்.7ஆம் அதிகாரத்தில் பிரபுக்களும் தேவனுக்கு உற்சாகமாகக் கொடுத்தார்கள்.
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவனுக்கென்று மனப்பூர்வமாக உற்சாக மனதுடன் கொடுங்கள். உற்சாகமாய் கொடுப்பவர்களிடம் தேவன் பிரியமாய் இருப்பார். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கு அளக்கப்படும். கொடுக்கும்போது தேவனிடமிருந்து நாம் பெறவேண்டிய ஆசீர்வாதத்தின் தடைகள் நீக்கப்படும். சம்பூரணமும், மகிழ்ச்சியும் உண்டாகும். தேவன் கொடுக்கும் கிருபையை தருவாராக! அல்லேலூயா!




