நீ கொடுப்பாய் வாங்காதிருப்பாய்

Written by Pr Thomas Walker

July 22, 2012

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
இன்றைய திருச்சபைகளில் அநேகர் தங்கள் பணத்தை வீணான வழிகளில் செலவழிப்பதின் காரணத்தால் “கடன் வாங்குதல்” என்ற படுகுழியில் விழுகின்றனர். நாம் பணம் செலவு செய்வதில் ஆடம்பரமாகவும், உண்மையற்றவர்களாகவும் இருந்தால் தேவன் நமக்கு தமது இராஜ்ஜியத்தின் மெய்யான ஐசுவரியத்தை ஒருக்காலும் தரவே மாட்டார் (லூக்.16:11). நாம் ஆசீர்வதிக்கப்பட தடைகளை நீக்க வேண்டும். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அதே அளவினால் உங்களுக்கு அளக்கப்படும் (லூக்.6:38). இது தேவனின் மாறாத சட்டம். நாம் கொடுக்காவிட்டாலும், பிசினித்தனம் பண்ணினாலும் நிச்சயமாக தேவை என்ற குழியில் நாம் சிக்கி விடுவோம்.


தேவன் தமது ஜனத்திற்கு கொடுக்கும் ஆசீர்வாதம் “நீயோ கடன் வாங்காதிருப்பாய்” உபா.15:6 வசனத்தில், “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.” மேலும் உபா.28:12 வசனத்தில் “…கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.” என்று தேவன் மோசேயின் மூலம் இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறினார். தேவனுடைய பிள்ளைகள் இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க வேண்டும். நான் வட்டிக்கு கொடுத்து வாங்குவதில்லை. “நான் கடன் வாங்கவே மாட்டேன்” என்ற உறுதியுடன் வாழத் தீர்மானம் செய்ய வேண்டும்.


நீதி.22:7 வசனத்தில், “கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை” என்று ஞானி கூறுகிறார். கடன் கொடுத்தவனுக்கு கடன் வாங்கினவன் கட்டப்பட்டு இருந்தல் என்றே மூலபாஷையில் பொருள்படுகிறது. கடன் மனிதனுக்கு அடிமையாக மாற்றுகிறது. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு கிரயத்துக்கு கொள்ளப்பட்ட தேவனுடைய பிள்ளை தேவனுக்கு அடிமையாக இருக்க வேண்டியவன். ஆனால் கடன் வாங்கியதினால் மனிதனுக்கு அடிமையாகிறான். கடன் வாங்கியதால், தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை எப்படி மனிதன் இழக்கிறான் என்று பார்ப்போம்.
தேவன் தமது பிள்ளைகளை ஆசீர்வதிக்க விரும்பி கடன் வாங்காதிருக்கும்படி கூறுகிறார்.

1. கடன் குடும்பத்தை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளும்
2இராஜா.4:1 வசனத்தில், “உமது அடியானாகிய என் புருஷன் இறந்துபோனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான்” என்று தீர்க்கதரிசியின் மனைவி எலிசா தீர்க்கதரிசியிடம் கூறினாள். கடன் கொடுத்தவன் இரண்டு குமாரரையும் அடிமைப்படுத்த முயன்றான். மேலும் நீதி.22:26,27 வசனங்களில், “கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ள வேண்டியதாகுமே”

2. கடனை தீர்க்க நிர்ப்பந்திக்கப்படுவர்
மத்.18:25 வசனத்தில், “கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.”

3. சரீரத்தில் உபத்திரவம் உண்டாகும்
மத்.18:28 “…அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.” கடன் கொடுத்தவன் கடனை வாங்கினவனை சரீரத்தில் உபத்திரவப்படுத்தினான்.

4. கடன் வாங்கினவன் காவலில் போடப்பட்டான்
மத்.18:30 வசனத்தில், “…அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.” கடன் வாங்கினவனைக் காவலில் போட்டார்கள். நாம் சிறையிருப்பின் அனுபவத்தையும், துன்பங்களையும் பிரச்சனைகளையும், அனுபவிக்காமல் இருக்க கடன் வாங்காதிருக்க வேண்டும்.

5. கடன்பட்டதால் ஆசீர்வாதங்களை வேறு மனிதர்கள் அனுபவிப்பார்கள்
நெகே.5:3,4 வசனத்தில், “எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து… ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத் தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம்” இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சகோதரர் மேல் முறையிடுகிற பெரிய கூக்குரல் உண்டாயிற்று. கடன் வாங்கியதால் தேவன் தங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களை வேறு மனிதர்கள் அனுபவித்தார்கள். எனவே தேவப் பிள்ளைகள் நிம்மதியை இழந்தனர். நெகே.5:5 வசனத்தில் குமாரரும் குமாரத்திகளும் அடிமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க நிர்வாகமில்லை என்றார்கள். எனவே தேவனுடைய பிள்ளைகள் கடன் வாங்கக்கூடாது.

தேவப்பிள்ளைகள் கிறிஸ்துவுக்குள் கடனாளிகள், மூன்று விதங்களில் நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
1.
அன்புகூருகிற கடனாளிகள்
ரோம.13:8 வசனத்தில் “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்;” மற்றவர்கள்மேல் அன்பு கூருகிறதில், அன்பு காட்டுவதில் கடமைப் பட்டிருக்கிறோம்.

2. சுவிசேஷத்தைக் கொடுக்க கடனாளிகள்
ரோம.1:14 வசனத்தில், “கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்” என்கிறார் பவுல். எல்லா ஜாதி மக்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நாம் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கூற கடமைப்பட்டிருக்கிறோம். சுவிசேஷத்தை அறிவிக்காவிட்டால் எனக்கு ஐயோ! அது என்மேல் விழுந்த கடமை என்கிறார் பவுல். சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பண்ண வேண்டும். அது நம்மேல் விழுந்த கடமை.

3. பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்ய கடனாளிகள்
ரோம.15:27 வசனத்தில், பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்ய விசுவாசிகள் கடனாளிகளாயிருக்கிறார்கள். மேலும் ரோமர் 15:25,26 வசனங்களில் பவுல் பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங் காரியமாக எருசலேம் பிரயாணம் செல்லப் புறப்பட்டபோது, மக்கெதோனியாவிலும், அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள் சகாயம் செய்ய விருப்பங் கொண்டார்கள். இப்படிச் செய்கிறதற்கு கடனாளிகளாயும் இருக்கிறார்கள். புற ஜாதிகள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களால் ஞான நன்மைகள் (ஆவிக்குரிய நன்மைகள்) பெற்றிருக்கிறார்கள். எனவே சரீரப் பிரகாரமாக அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகள்.


கர்த்தருக்குள் பிரியமானவர்களே! நீ அநேகம் பேருக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்ற வாக்குத்தத்தம் நம்மில் நிறைவேற வேண்டும். இயேசுவின் திவ்விய சுபாவத்திற்குப் பங்குபெறும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். கடனுக்குள் வாழ்வது என்பது ஆசீர்வாதம் அல்ல. மற்ற விசுவாசிகளோடு மதியீனமாய் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து நஷ்டப்படாமல் தேவன் நமக்கு கொடுத்ததைக்கொண்டு போதுமென்ற மனதுடன் சந்தோஷமாய் வாழ வேண்டும். தேவனுடைய பிள்ளைகளின் சிறந்த குணாதிசயம் என்னவென்றால், வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதே நல்லது. கடனற்ற வாழ்க்கை வாழ தீர்மானம் எடுப்போம். தேவன் நம்மில் மகிமைப்படுவார். சங்.37:21 வசனத்தில் “துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்;” என்கிறார் தாவீது. கடன் வாங்காதிருப்போமாக. அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This