ஜெப மாதிரி – ஜார்ஜ் முல்லர்

ஜார்ஜ் முல்லர் அணிந்திருந்த ஜெபம் என்னும் சங்கிலி, விலை மதிப்பற்ற பொற் சங்கிலியாகும். ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட அவரது ஜெபங்கள், முழங்காலை விட்டு எழுமுன் பதிலும், பலனும் பெற்றவையாகும். முல்லர் தனது 93ஆம் வயதில் இவ்வாறு கூறினார். பதில் வராத ஜெபம் ஒன்றுகூட இருந்ததில்லை. அவர் ஆணித் தரமாக இதற்கான இரகசியத்தை விளக்கும்போது கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையை ஜெபத்தில் பயன்படுத்தி ஜெபிக்கும்போது நிச்சயமாய் ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்கிறார்.


ஜார்ஜ் முல்லர் 1805ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள் குரோப்பன் ஸ்டாட் என்ற ஊரில் ப்ரஸ்ஸியா நாட்டில் அவர் பிறந்தார். அவரது தந்தை வருமான வரி அதிகாரி. அவரது பதினான்கு வயதில் ஏல் பல்கலைக்கழகத்தின் உறுப்பினரானார். தனது 22ஆம் வயதில் தன்னை ஒரு மிஷனெரியாக ஒப்புக்கொடுத்தார். ஆனால் ஒரு தடை ஏற்பட்டது. அந்நாட்டின் குடிமகன் ஒவ்வொருவனும் பல்கலைத் தேர்வுக்குப் பின் மூன்றாண்டுகள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இதனை முடித்தால்தான் நாட்டை விட்டு வெளியேற முடியும். மேலும் அவரது வயிற்றில் ஏற்பட்ட கோளாறும் அவர் இராணுவம் பயிற்சி பெறத் தகுதியற்றவராகக் கருதப்பட்டு 1829, மார்ச் 19ஆம் நாள் பாஸ்போர்ட் வந்து சேர்ந்தது.


1829ல் அவர் லண்டன் பட்டணம் வந்து சேர்ந்தார். இறையியல் கற்கும் மாணவருக்கு ஒரு ஜெபக்குழுவும் யூத குழந்தைகளுக்கு ஒரு வேதபாட வகுப்பும் நடத்த முற்பட்டு 50 குழந்தைகளை வைத்து ஆரம்பித்தார். மனித வழிநடத்துதலின் படி ஊழியம் செய்வதைவிட பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுவதையே விரும்பினார். இவர் முழு வேதாகமத்தையும் இருநூறுக்கும் மேற்பட்ட தடவைகள் படித்தார். குறிப்பாக நூறு தடவைகள் முழங்காலிலிருந்து படித்து, ஆண்டவரில் உண்மைப் பற்றும், தெய்வீக வெளிப்பாடும் கொண்டவராக விளங்கினார். தன் தேவைகளைப் பிற மாந்தரிடமல்ல, தன் தேவனிடமே சொல்லி பலமும் பலனும் பெற இந்த ஆழ்ந்த வேத தியானம் அவரை ஊக்குவித்தது. 1831ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் மேரி குருவ்ஸ் என்ற அம்மையாரை தன் நண்பரின் வீட்டில் ஆடம் பரமற்ற முறையில் மணந்தார்.


ஜார்ஜ் முல்லர் எப்பொழுதும் திறந்த வேதாகமத்தோடு ஜெபிப்பார். தன்னுடைய விண்ணப்பங்களை தேவனுடைய வார்த்தையோடு இணைந்து ஜெபிப்பார். அவரது ஜெபத்தைக் குறித்து அவருடைய நண்பர்கள் கூறும்போது, அநாதை இல்லத்தின் தலைவர் தேவனுடைய வார்த்தை இல்லாமல் வாயைத் திறந்து ஜெபித்ததேயில்லை. ஒவ்வொரு விண்ணப்பமும் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் தான் இருந்தது. முல்லர் தேவனிடம் ஜெபிக்கும் முன்பு நன்கு வேதத்தை வாசித்த பின்னரே ஜெபிப்பார். மற்றபடி ஜெபிப்பதே கிடையாது.


ஜார்ஜ் முல்லர் தனது தியான நேரத்தைப் பற்றி கூறுகையில் தேவனுடைய ஆசீர்வாதத்தை நான் தியானிக்கும் வேத பகுதியில் ஊற்ற வேண்டும் என ஜெபித்து விட்டு தேவனுடைய வார்த்தையை தியானிக்க ஆரம்பிப்பேன். மிகவும் கருத்தாய் ஒவ்வொரு வசனத்தையும் ஆராய்ந்து அதில் தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தேடுவேன். இவ்வாறு கற்றறிந்த தேவனுடைய வார்த்தையை பெரிய கூட்டத்திலோ, அல்லது நான் மற்றவர்களுக்கு பிரசங்கிக்கவோ பயன்படுத்தாமல் என் ஆத்துமா விற்கான ஆகாரத்தை பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்துவேன். இதனால் நான் கண்டடைந்த உண்மை என்னவென்றால் என் ஆத்துமா பாவத்தை அறிக்கையிட ஆரம்பித்து விட்டது அல்லது நன்றி சொல்ல அல்லது பரிந்து பேச ஆரம்பித்து விடுகிறது. நான் ஜெபிக்க அல்லது தியானிக்க என்னை ஈடுபடுத்திக்கொண்டாலும் அதுவும் உடனடியாக ஜெபமாக மாறிவிடுகிறது.


ஜார்ஜ்முல்லர் கண்டறிந்த மறைபொருள் என்னவென்றால், தேவனுடைய வார்த்தையை விசுவாசத்தினால் நிறைந்த விண்ணப்பங்களாக மாற்றுவதே. வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் தேவனுடைய எழுத்துக்களாகும். அவற்றை தேவனுக்கு முன்பாக, காட்டி விண்ணப்பிப்பதேயாகும். நீர் சொன்னபடி எனக்குச் செய்யும் என ஜெபிக்கும்போது சிருஷ்டிகர் தன் சிருஷ்டியை ஏமாற்றவே மாட்டார். அதற்கு மேலாக பரலோகத் தந்தை தன்னுடைய பிள்ளைகளுக்காக தன்னுடைய வார்த்தையை மீறவே மாட்டார் என்பதே.
தேவன் குறுகியவராகவோ, குறைவுபட வைப்பவராகவோ அவரின் வாழ்க்கையில் இல்லை. என் தேவைகளுக்காக என்னை என் தேவன் ஏங்க வைத்ததே இல்லை என்கிறார் முல்லர்.
போராட்ட நேரத்தில் தன்னை மேற்கொள்ள வந்த சாத்தானைத் தோற்கடிக்க அவர் மேற்கொண்ட சாதனம் முழங்காலை முடக்குவதுதான்.


தன்னையே ஜெபத்தில் தந்துவிட்ட அவரைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களைச் செய்தார். ஏழரை மில்லியன் டாலர்களை அவர் ஜெபத்தாலும், விசுவாசத்தாலும் பெற்றிருந்தார். மிகவும் எளிமையாக ஆரம்பித்த இந்த திருப்பணி, காப்பகங்கள், மிஷனெரிப் பணிகள், வேத விநியோகங்கள், சமய வெளியீடுகள் இவற்றினையும் தாங்கி நடத்திய அவர் அனாதையரின் அருமைத் தந்தையென்றப் பெயரைப் பெற்றார். 31 ஆண்டுகளில் மட்டும், 2813 அனாதையர் விசுவாசிகளாக அவரது காப்பகங்களை விட்டுச் சென்றனர். இவரது பல வேறுபட்ட நிறுவனங்களில் 1,21,683 மாண, மாணவியர் கர்த்தரண்டை வழிநடத்தப் பட்டனர்.


உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சை கொடுங்கள் (லூக்.12:33). இதுவே வாழ்வின் சட்டமாயிருந்தது. நீங்கள் என் நாமத்தினிமித்தம் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன் (யோவான் 14:14) என்ற வசனத்தின்படி முல்லர் குறைவாக அல்ல, முல்லர் அபரிதமாகவே கேட்டார், பெற்றார். பிதா மகிமைப்பட்டார். முல்லர் 1898, மார்ச் 10ஆம் நாள் தனது 93ஆம் வயதில் நித்திரையடைந்தார்.






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This