ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் ஒரு தீர்க்கதரிசியைப் போல தேவனால் அழைக்கப்பட்டு, சபைகள் ஜீவனற்று சடங்காச்சாரங்களில் மூழ்கிக் கிடந்தபோது ஆவிக்குரியபடி தேவனைத் தொழுதுகொள்ள வழிகாட்டியாக எழுப்பப்பட்டார் ஜார்ஜ் பாக்ஸ்.
இங்கிலாந்தில் வீஸ்ட்டர் ஷையர் என்ற ஜில்லாவிலுள்ள டிரெய்ட்டன் என்ற ஊரில் பிறந்தவர். இவரது தகப்பனார் நெசவு தொழில் செய்பவர். மிக உண்மையுள்ளவர். தாயார் நீதி நிறைந்தவளும் இரத்த சாட்சிகளின் மரபில் உதித்தவர்களுமாவார். சிறு பிராயத்திலிருந்தே ஜார்ஜ் பாக்ஸ் அமைதியுள்ளவரும் உலக பாவங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தனித்து தேவனோடு சஞ்சரித்து வந்தார். அதிக நேரம் ஜெபத்திலும், உபவாசத்திலும் கழித்து வந்தார். வேதத்தை வாசிக்க வாசிக்க இவருக்குள் ஒரு தெளிவு உண்டானது.
தேவன் மனிதனுடைய இருதயத்தில் வாசம் பண்ணுகிறார். மனிதனில் கிரியை செய்கிற மாம்சத்தின் பிரமாணம், ஆவியின் பிரமாணம், இதை மனிதனுள் வாசம்பண்ணுகிற ஆவியானவர் ஜெயங்கொள்ளுகிறவராயிருக்கிறார் என்று அறிந்துகொண்டார். ஜார்ஜ் பாக்ஸ் வாழ்வில் ஒரு அதிசயமான சம்பவம் நடைபெற்றது. பிரௌன் என்பவரின் மரணப் படுக்கையில் ஜார்ஜ் பாக்ஸ்யைப் பற்றிய பல காரியங்களைத் தீர்க்கதரிசனமாக உரைத்தார். அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பின் தேவனுடைய கரம் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரைத் தொட்டது. அதனால் பாக்ஸ் பதினான்கு நாட்கள் மரித்தவர் போல் ஒருவித நிலையையடைந்தார். அநேகர் அவரைப் பார்த்துச் சென்றனர். ஜார்ஜ் பாக்ஸின் தோற்றமே மாறியது.
ஒருவித பகுத்தறியும் ஆவி அவருக்குள் வந்தது. ஒருவித விவரிக்க முடியாத சந்தோஷம் அவருக்குள் வந்தது. இரவும் பகலும் பரவசமடைந்தார். தேவனுடைய அளவற்ற அன்பை ருசிக்கலானார். இவரைப் பார்க்க பலரும் வந்தனர். ஆவியானவர் வல்லமையாய் கிரியை செய்தார்.
ஜனங்களுக்குள் பாவ உணர்வு உண்டானது. தேவ வல்லமையை உணர்ந்தார்கள். ஜார்ஜ் பாக்ஸ் பல துன்பங்களின் மத்தியில் நல்ல தரிசனங்களையும் ஆவிக்குரிய அனுபவங்களையும் அடைந்தார். சில வேளைகளில் ஞானதிருஷ்டி யடைந்து பல ஆவிக்குரிய இரகசியங்களைப் பெற்றுக்கொண்டார்.
சுவிசேஷம் வல்லமையாய் பல பட்டணங்களில் போதிக்கப்பட்டது. ஆவியானவரின் வல்லமை பல இடங்களில் காணப்பட்டது. அபிஷேகம் பெற்றவராக சிலர் கூடி ஆராதித்தனர். தலைவர் யாரும் இல்லை. பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல் வரும் வரை எவரும் பேசுவதில்லை. பாடுவதில்லை. ஜெப சிந்தையுடனிருப்பார்கள், ஒருவருமே பேச தூண்டப்படாவிட்டால் எல்லாரும் தேவ சமூகத்தில் ஜெப சிந்தையுடன் அப்படியே இருப்பார்கள். ஜெப வல்லமையுடன் காணப்பட்டார்கள். சில தருணங்கள் வியாதியஸ்தர்கள் குணமடைவார்கள். பிசாசுகள் நீங்கின, ஜார்ஜ் பாக்ஸ் அதிக ஜெப வல்லமையுடையவர். சொற்பமாய் பேசும் பழக்கமுடையவர்.
ஜார்ஜ் பாக்ஸ் அடிக்கடி கூறுவது, “ஒரு மனிதனாவது, மனுஷியாவது அப்போஸ்தலர்களைப் போல வல்லமையுள்ளவர்களாய்க் காணப்பட்டால் தேசத்தையே அசைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்” என்பதே. இது அவரில் காணப்பட்டது. இவரது பார்வை மக்கள் உள்ளத்தை ஊடுருவக் கூடியதும், வார்த்தை மின்னொளி போன்றதும், இவரது சிந்தை மனிதர்களின் சிந்தையை அறியக் கூடியதுமாயிருந்தது. இவரது ஊழியத்தின் நோக்கம் மக்கள் வெளியான சடங்காச்சாரங்களை விட்டுவிட்டு கிறிஸ்துவை பின்பற்றவும், இருதயத்தில் பரிசுத்தம் தங்கவேண்டும் என்பதே.