கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
நாம் நம்மை நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்க வேண்டும் என்பது பிரதான கற்பனைகளில் ஒன்றாகும் (மாற்.12:30,31). நமது உறவினர்களையும், அயலகத்தாரையும், நண்பர்களையும், நம்மைப் பகைக்கிறவர்களையும் (மத்.5:44) நேசிக்கிறோமென்றால் நம்மைப்போல் அவர்களும் பரலோகத்திற்கு வர வேண்டும் என்று வாஞ்சிக்க வேண்டுமல்லவா? பிறனை நேசிக்கிறவன் அவனுக்கு நற்செய்தி அறிவிக்காமல் இருக்க முடியாது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படுவதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தீமோ.2:4). நரகத்தை நோக்கிச் செல்லும் திரளான ஜனங்களைக் கண்டு அன்று மனதுருகின கர்த்தர் (மத்.9:36-38). இன்றைக்கும் மனதுருகிக் கொண்டிருக்கிறார். நரகத்தின் பயங்கரத்தை நினைத்துப் பார்த்தால் அதை நோக்கிச் செல்லும் மக்களின் மீது நமக்கும் மனதுருக்கம் ஏற்படும்.
லூக்.16:9 வசனத்தில், “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” என்று சொன்னார். சிநேகிதரை என்று சொல்லும்போது ஆத்துமாக்களைச் சம்பாதியுங்கள் என்று தான் பொருள்படும். ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுகிறவன் ஞானமுள்ளவன் (நீதி.11:30).
பரலோகத்தில் பெரிய பாக்கியத்தையும் சந்தோஷத்தையும் பெற சிறந்த வழி ஆத்தும ஆதாயம் செய்வதே ஆகும். பிர.2:8 வசனத்தில், சாலமோன் ஞானி தான் எவற்றையெல்லாம் சம்பாதித்ததாக கூறுகிறார், “வெள்ளியையும் பொன்னையும், ராஜ சம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்”. ஆனால் கடைசியாக சாலமோன் இவ்வாறு கூறுகிறார். வசனம் 2:11ல் “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை”. மேலும் நீதி.18:15 வசனத்தில், “புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்;” ஞானம், அறிவு, விவேகம் மூன்று காரியங்கள் உள்ளன. அறிவு என்பது புத்தக அறிவு, உலக அறிவு, வியாதி, மருந்து பற்றி படித்து அறிவது. ஞானம் என்பது அறிவைச் சரியாக ஏற்றவேளையில், காலத்துக்கும், சமயத்துக்கும், சீதோஷ்ண சூழ்நிலைக்கும் ஏற்ப பயன்படுத்துவது. படிப்பினால் வருவது அல்ல. விவேகம் என்பது application of knowledge சாலையில் ‘இடது பக்கம் போ’ என்பது விதி. ஆனால் ஒரு வாகனம் பின்னால் வந்து மோத வந்துவிட்டால் உடனே தப்பும்படி வலதுபக்கம் போய் ஆபத்திலிருந்து விலகி தன்னைக் காத்துக்கொள்ளும் – சமயோசித புத்தி, செயல்படும் அறிவு தான் ஞானம். ஆனால் ஞானம் இரண்டு வகைப்படும் (1) உலக ஞானம் – பரத்திலிருந்து வராதது (2) மற்றொன்று பரத்திலிருந்து வரும் தேவஞானம். யாக்.2:14-17 வசனங்களில், “…விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” – அதுபோல ஞானமும் கிரியைகளில் செயல்படாவிட்டால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை. மேலும் 1தீமோ.6:20 வசனத்தில் பவுல் தீமோத்தேயுவிடம் இவ்வாறு கூறுகிறார். “ஓ, தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு”.
நான் ஊழியத்துக்காக வரும்படி தேவன் என்னை அழைத்தபோது ஆதி.30:30 வசனத்தின் மூலம் பேசினார். “இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது” “என் மகனே இத்தனை ஆண்டுகள் அரசாங்க department-க்காக வேலை பார்த்தாய். எனக்காக, விசுவாச குடும்பத்துக்காக சம்பாத்தியம் பண்ணுவது எப்போது? இயேசுவின் குடும்பத்துக்காய் சம்பாதி. சபைக்காக ஆத்துமாக்களை சம்பாதி” என்று பேசினார். எனவே எனது உலக பிரகாரமான இரயில்வே வேலையை இராஜினாமா செய்துவிட்டு 1979 வருடம் தேவனின் முழு நேரப் பணியைச் செய்ய மதுரையில் கூடல்நகர் பகுதி வந்து ஏலீம் சபையை ஆரம்பித்தேன்.
தேவன் சம்பாதித்தது என்ன?
*** முதலாவது – சபை
சங்.74:2 வசனத்தில், “நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்”. அப்.20:28,29,30 வசனங்களில், பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியபோது, “…உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்” தேவன் தன்னுடைய சுய ரத்தத்தினால் சம்பாதித்தது தான் சபை. எனவே அதிக எச்சரிப்புடன் மந்தையை கொடியதான ஓநாய்களிடமிருந்தும், சீஷர்களை தன்னிடமாக இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிக்கும் கள்ளப் போதகர்களிடமிருந்தும் தப்புவிக்க ஜாக்கிரதையாகவும் விழிப்புடனும் காணப்பட வேண்டும்.
*** இரண்டாவதாக – நீயும் சம்பாதி எதை? பரலோகத்தில் பொக்கிஷத்தை
லூக்.12:33 வசனத்தில், உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சை கொடுங்கள். பழமையாய்ப் போகாத பணப்பைகளையும், குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள். அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.
பரலோகத்தில் பொக்கிஷத்தை சம்பாதித்து வையுங்கள்.
1. கெட்டுப் போகாது
2. பரலோக சிந்தை நமக்கு உண்டாயிருக்கும்
பரலோகத்தில் சேர்த்து வைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
1தீமோ.6:17,18,19 வசனங்களில் பவுல் தீமோத்தேயுவுக்கு கூறும்போது இவ்வாறு கூறுகிறார்.
1) இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிருக்க கூடாது.
2) நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கக் கூடாது.
3) நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.
4) நன்மை செய்ய வேண்டும்.
5) நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக வேண்டும்.
6) தாராளமாய்க் கொடுக்கிறவர்களாய் இருக்க வேண்டும்.
7) உதாரகுணமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
8) நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் வேண்டும்.
மத்.4:19 வசனத்தில், “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்றார். நாம் சீஷனாயிருப்பது ஆத்தும ஆதாயம் பண்ண வெறும் சுவிசேஷத்தை அறிவித்தால் போதாது. நற்கிரியை செய்ய வேண்டும். ஆத்தும ஆதாயம் தான் ஒரு கிறிஸ்தவனின் வளர்ச்சியைக் காட்டுகிறது. எபி.11:26 வசனத்தில், “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்”. மோசே பார்வோன் குமாரத்தியின் மகனாய் செல்வ செழிப்புடன் அரண்மனையில் வாழ்வதை வெறுத்து விட்டு, தன் ஜனத்தாரைப் போல அடிமையாக துன்பப்படுவதையும், அவர்கள் விடுதலைக்காக பாடுபடுவதையுமே அதிக பாக்கியமாக நினைத்தார். தேவனுடைய நாமத்துக்காக பாடுபடுவதை அதிக பாக்கியமாக நினைக்க வேண்டும். மிஷனெரிகளும் பணத்தினாலும், ஆஸ்திகளாலும் நற்கிரியை செய்து மக்களை சபையில் சேர்த்தனர்.
கொரியாவில் போதகர் பால் யாங்கிசோ சபையில் உள்ள ஒவ்வொருவரும் பலவிதமான நற்கிரியைகள் செய்து ஒவ்வொரு ஆத்துமாவையும் சபைக்கு கொண்டுவருகின்றனர். வயதானவர்களுக்கு பாத்திரம் தேய்த்து கொடுப்பது, வீடு துடைப்பது, குழந்தைகளை வளர்க்க உதவி செய்தல், கடைக்குப் போய் சாமான் வாங்கி உதவி செய்தல், தோட்ட வேலை, சாமான்களை சுமந்து பல நற்கிரியைகளை புறமதத்தினருக்கும் அருகில் உள்ள நண்பர்களுக்கும் செய்து ஆத்தும ஆதாயம் செய்கின்றனர்.
யாக்.5:19,20 வசனத்தில், “…உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்”
ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் – “நரகத்திலிருந்து மக்களைத் தப்புவிக்கப் பாடுபட வேண்டும். மேலும் தேவனைவிட்டு வழிவிலகுபவர்களையும் மீண்டும் அவர் அன்பில் நிலைத்து நிற்கும்படி தூண்டிவிட வேண்டும். ஒருவனும் கெட்டுப்போவது பிதாவின் சித்தமல்லவே. ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் மூலம் (1) தேவன் பாவிகளை மரணத்திலிருந்து ரட்சிக்கிறார் (2) அவர்கள் திரளான பாவங்களை மூடுகிறார்கள் (3) மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்”
தானி.12:3 வசனத்தில், “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்”
ஆத்தும ஆதாயம் செய்பவர்களை வேதம் ஞானவான்கள் என்றும், என்றென்றைக்கும் சதாகாலங்களிலும் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று நிலைத்திருப்பவர்கள் என்றும் கூறுகிறது.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! ஆத்தும ஆதாயப் பணிக்கு நம்மை அர்ப்பணிப்போம்! பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்போம்! உனக்காக மரித்த இயேசுவுக்காக சிநேகிதரைச் சம்பாதிக்க எழுந்து செல்லுங்கள். முழு நேர ஊழியத்துக்குச் செல்ல இயலாவிட்டாலும் பகுதிநேர ஊழியத்துக்காவது உன்னை அர்ப்பணித்து செயல்படு. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தைப் பிரசங்கி. ‘வா’ என்று அழைத்து இளைப்பாறுதலை தந்தார். இப்பொழுது புறப்பட்டு போங்கள் என்று பணித்தார். போனோமா? தேவனின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற உன்னை அர்ப்பணிப்பாயா?




