பிரான்சிஸ் சேவியர்

“நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து பத்து ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் சுவிசேஷ தீபத்தை ஏற்றினார். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை இயேசுவிடம் வழிநடத்தினார். “இந்தியாவின் அப்போஸ்தலர்” என்று அழைக்கப்படுகிறார். இவரை கீழ் திசை நாடுகளின் திருத்தூதர் என்றும் அழைக்கப் படுகிறார். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசுவின் அப்போஸ்தலர்களின் காலத் திற்கு பின் சுவிசேஷப் பணியை நெடு தூரம் பயணம் செய்து அறிவித்தவர் இவரே. ஜப்பான் நாட்டில் முதன் முதலில் சுவிசேஷம் அறிவித்தவர் இவரே.

இளமை பருவம்:

பிரான்சிஸ் சேவியர் ஸ்பெயின் நாட்டில் “நவார்” மாகாணத்தில் “சேவியர்” அரண்மனையில் 1506ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். தனது 18ஆம் வயதில் கல்வி கற்க “பாரிஸ்” நகருக்குச் சென்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் புனித லயோலா என்ற தேவ மனிதனை சந்தித்தார். அவர் பாரீஸ் நகருக்கு வந்து பிரான்சிஸ் சேவியர் தங்கியிருந்த புனித பார்பரம்பான் கல்லூரியில் தங்கினார். கல்லூரியில் படிக்கும் நாட்களில் ஆடம்பரமாக ஒரு செல்வந் தனைப் போல வாழ்ந்தார். அவர் சட்ட கலையில் முனைவர் (Phd) பட்டம் பெற்றவர். உலகத்தின் மேன்மை, பேர், புகழ், கீர்த்தியை நாடிக் கொண்டிருந்தார். புனித லயோ லாவுடன் நட்பு கிடைத்தபின் முற்றிலும் மனம் மாறி அவருடைய சீடரானார்.

இயேசு சபையின் ஆரம்பம்:

பிரான்சிஸ் சேவியர் 1536ஆம் ஆண்டில் புனித லயோலாவுடனும் அவருடைய தோழர்களோடும் வெனிஸ் நகருக்குச் சென்று போப்பாண்டவரை சந்தித்தனர். இயேசு சபையை ஆரம்பிக்க அனுமதி பெற்று, பின்னர் 1537ஆம் ஆண்டில் இவர் குரு பட்டம் பெற்றார். இயேசு சபையின் முதல் உறுப்பினரான இவர்கள் போப்பாண்ட வரது பிரதிநிதி முன்னிலையில் முதல் வார்த்தை பாடுகளைக் கொடுத்தார்கள். இயேசு சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு பிரான்சிஸ் சேவியர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு மிஷனெரியாக அனுப்பப்பட்டார். அங்கு 5 ஆண்டுகள் (1537-1541) ஊழியம் செய்த பின்பு இந்தியாவுக்கு மிஷனெரியாக வந்தார்.

இந்தியாவில் பிரான்சிஸ் சேவியரின் ஊழியம்:

கி.பி.1541ல் இந்தியா வந்து கோவா பட்டணத்தில் ஊழியத்தை ஆரம்பித்தார். கோவா பட்டணத்தை, தமது உழைப்பாலும், ஜெபத்தாலும், தவத்தாலும் முற்றிலும் சீர்படுத்தினார். கோவா நகரில் அநேகர் மனந்திரும்பினார்கள். தெருக்கள் வழியாக ஒரு சிறு மணியை அடித்துக்கொண்டு போவார். எல்லா இடங்களிலும் சென்று சிறுவர் களைத் தம்மிடம் அழைப்பார். அவர்கள் வந்து அவரைச் சூழ்ந்துகொள்வார்கள். அவர்களுக்கு வேதப் புத்தகத்தை வைத்து அநேக கதைகள், பாடல்களை புரியக் கூடிய வகையில் தெளிவாக சத்திய வசனத்தை போதித்தார். ஜெபங்கள், பாட்டுகள், விசுவாச பிரமாணம், பரமண்டலங்களின் பிதாவே என்று இயேசு சீடர்களுக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்தை கற்றுக்கொடுத்தார். சிறுபிள்ளைகளின் வீட்டிற்கும் போய் அவர்கள் பெற்றோரையும் தேவனண்டை வழிநடத்தினார். பெற்றோர்களும் அவரை நாடி வந்தனர். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பி, ஆலயத்துக்கு வந்தனர்.

புனித சேவியர் ஊழியம் செய்த இடங்கள்:

தென் இந்தியா, இலங்கை, மொலாக்காய், ஜப்பான் முதலிய நாடுகளில் வேதம் போதித்தார்.

அவரின் தரிசனம்:

“கடவுளை மக்கள் அறியாத ஓர் இடம் பூமியில் இருக்கிறது என்று நான் அறிவேனானால் நான் ஒருபோதும் இளைப்பாற முடியாது” என்று இவர் அடிக்கடி சொல்வார்.

ஜப்பான் ஊழியம்:

ஜப்பான் நாட்டில் முதன் முதலாக நற்செய்தி பணியைச் செய்தவர் இவரே. கிறிஸ்து விடம் ஆழமான பற்றும், பாசமுடையவராக காணப்பட்டார். தனிமை பலமுறை அவரை வாட்டியெடுத்தபோதும் கிறிஸ்துவின் ஐக்கியத்தில் நிலைத்திருந்தார். எவ்வித துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவராக காணப்பட்டார்.

இந்தியாவில் கோவாவிலும், தென் தமிழ்நாட்டிலும் அரிய பெரிய மிஷனெரிப் பணிகளை செய்துள்ளார். தற்கால கல்விமுறையை இந்தியாவில் புகுத்தினார். திருவிதாங்கூரில் 45 ஜெபக் குழுக்களை ஏற்படுத்தினார். இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபைகள் அநேக இடங்களில் செழித்தோங்க காரணமானார். இவர் மரித்தார், ஆனால் இவர் உடல் 470 வருடங்களாக உடல் அழியாமல் இன்னும் கோவாவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இறுதி காலம்:

ஜப்பானில் வேதத்தை போதித்தபின் சீனாவுக்குப் போக வேண்டும். அங்கு மக்களை இயேசுவண்டை திருப்பிய பின்பு, ஐரோப்பாவுக்கு போய் அங்குள்ள மக்களை மனந்திருப்ப வேண்டும் என்று திட்டமிட்டார். இலட்சம் மைல் தூரம் வெறுங் காலுடன் நடந்து சென்று ஏறக்குறைய நூறு ஊர்களிலும், தீவுகளிலும் வேதத்தை போதித்தார். அநேக இலட்சம் (10 லட்சத்துக்கும்) மேற்பட்ட மக்களை மெய்யான தேவனிடம் கொண்டுவந்தார். சீனாவுக்கு புறப்பட்டுப் போகும்போது சான்சியன் தீவில் 2.12.1552ல் உயிர் துறந்தார். இவருடன் அருகில் சில வெள்ளையர்கள் இருந்தனர். வேலைக்காரரில் ஒருவன் இவரைக் கைவிட்டான். தம் எஜமான் இயேசுவைப் போல எல்லாராலும் கைவிடப் பட்டவராய் உயிர் நீத்தார். தனது 46ஆவது வயதில் தேவனண்டை சேர்ந்தார்.

அன்பு நண்பரே! ஆத்தும பாரமும், தியாக சிந்தையும் அர்ப்பணிப்பும் நிறைந்த பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார். “தங்களது சிறுசிறு குறிக்கோளை விட்டு கிழக்கு நோக்கி கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்திட உங்கள் மாணவர்களுக்குச் சொல்லுங்கள்” என்றார் புனித சேவியர். கிறிஸ்துவின் நற்செய்தியைக் கூற எத்தனை இடங்களுக்குச் சென்றிருக்கிறீர்கள். “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் நற்செய்தியை எல்லாருக்கும் சொல்ல ஜாக்கிரதையாயிருப்போம்” – மாரநாதா!



Author

You May Also Like…

Share This