இந்த வருடம் மார்ச் மாதம் நாங்கள் குடும்பமாக, அஸ்ஸாம் மாநிலத்திற்கு, பணித்தளங்களை பார்வையிடவும், மருத்துவப் பணி மூலம் ஆண்டவரின் நாமத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளவும், நமது ஊழியர்களை உற்சாகப்படுத்தவும் சென்றிருந்தோம்.
அது ஒரு “10 நாட்கள் பயணம்” தினந்தோறும் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பல்வேறு பணித்தளங்களைப் பார்வையிட வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அஸ்ஸாம் மாநிலத்தில் தேஜ்பூர் என்ற இடத்திற்கு சென்றிருந்தோம். அந்தப் பகுதி, ஊரின் ஒரு ஒதுக்குப் புறத்தில் உள்ள துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் பகுதி. நமது மிஷனரி “ரூடல் பாஸ்ஃபோர்” அங்கு ஊழியம் செய்துவருகிறார். நாங்கள் முதலாவதாக, அங்கு ஒரு “மருத்துவ முகாம்” நடத்தி பின்பு தேவ வார்த்தைகளை அங்கு கூடிவரும் சபைக்கு அறிவிக்கும்படி சென்றிருந்தோம்.
மருத்துவ முகாம் நடத்திய இடத்தில் நூற்றுக்கணக்கான பன்றிகள், துர்நாற்றத்தின் கொடுமைகள், சுகாதாரம் என்றால் முற்றும் தெரியாத மக்கள் கூட்டம். இவர்களில் பலருக்கு பலவித வியாதிகள், ஆனால் மருத்துவ வசதிகளோ, அல்லது மருத்துவரை அணுகத் தேவையான வசதிகளோ துளியும் இல்லாத ஏழை மக்கள். நாம் நடத்திய மருத்துவ முகாமில், ஏறக்குறைய நூறு மக்கள் பயன் பெற்றனர்.
பின்பு அங்கிருந்த ஒரு வீட்டில், மாலை ஆராதனை நடந்தது. வந்திருந்த அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த போஜ்புரி மக்கள், மிகவும் இனிமையாக அவர்கள் மொழியில் பாடல்களைப் பாடி ஆண்டவரை ஆராதித்தார்கள். இவர்கள் அனைவரும் கடந்த “2 ஆண்டுகளுக்குள்ளாக” ஆண்டவரின் அன்பிற்குள் வந்தவர்கள். இவர்கள் போதகரே சில வருடங்கள் முன்பாக இயேசுவை ஏற்றுக்கொண்டவர் தான்.
மாலை ஆராதனையில், நான் அவர்களுக்கு தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொண்டேன். அவர்கள் மிகவும் ஏழைகள், வறுமையின் மத்தியில், புதிதாக இயேசுவின் அன்பை அறிந்து, அவருடைய அன்பில் அகமகிழ்பவர்கள்.
அந்த ஆராதனை ஒரு வீட்டில் வைத்து நடைபெற்றது. வீட்டில் குடியிருப்பவர். புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்டவர். இரண்டு சிறு குழந்தைகளுடன், அவர் அங்கு வசிக்கிறார். மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில், ஆராதனைக்காக, தன்னுடைய இல்லத்தை திறந்தும் கொடுத்திருக்கிறார்.
நான் அங்கு கேள்விப்பட்ட காட்சி என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்துவிட்டது….
“நாங்கள் கூட்டம் நடத்திய அதே வீட்டில், ஒரு வருடம் முன்பாக 12 மந்திரவாதிகள் வசித்து வந்தார்களாம். அவர்கள் பில்லிசூனியம் செய்து, அங்கிருந்த ஏழை மக்களையெல்லாம் கெடுத்து வந்தனராம். கடந்த வருடத்தில் அந்த மந்திரவாதிகள், ஒருவர் பின் ஒருவராக, அந்த வீட்டின் மத்தியிலிருந்த உத்திரத்தில், தூக்கு போட்டு மரித்துவிட்டனராம்.
பின்பாக அந்த வீட்டிற்குள் எவரும் போகத் துணியவில்லையாம். காரிருளாகக் காணப்பட்டதாம். அந்த வீட்டிற்குள் எட்டிப் பார்த்தவர்கள் கூட பைத்தியம் பிடித்து அலைந்தனராம். வீடு பூட்டப்பட்ட நிலையில் ஒரு வருடமாக கிடந்ததாம்.
இதற்கிடையில் நமது மிஷனரி ரூடல் பாஸ்ஃபோர் அவர்கள் ஊழியத்தில் “ஒரு இளம் தம்பதியினர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர்” அவர்களுக்கு இரண்டு சிறிய மகள்கள் அவர்கள் உள்ளத்தில் பேரானந்தம் பொங்கியது. நம்பிக்கை பிறந்தது. தைரியம் வந்தது.
ஊரிலே பூட்டப்பட்டுக் கிடந்த, மந்திரவாதிகள் வசித்து, தற்கொலை செய்து, மரித்த வீட்டின், உரிமையாளரிடம் சென்றனர். “ஐயா, உங்கள் வீட்டை எங்களுக்குத் தாருங்கள்” ….நாங்கள் அங்கு வசிக்க விரும்புகிறோம் என்று கேட்டனர்.
வீட்டின் உரிமையாளர் பயந்தார். இரு சிறுக்குழந்தைகள் இருக்கின்றனரே… என்ன ஆகும். இதற்கு முன்பு, வீட்டினுள் எட்டிப்பார்த்தவர் கூட பைத்தியம் ஆகிவிட்டனரே… நீங்கள் எப்படி அதில் வசிக்க முடியும் என்று கேட்டார்.
இந்தப் புது விசுவாசத் தம்பதிகள் “எங்கள் இயேசு எளியவர், மந்திரவாதிகள், பேயின் சக்திகளைத் தகர்க்க வல்லவர் என வீரமாக பறைசாற்றி, வீட்டின் சாவியை அவரிடம் வாங்கி, அங்கு குடியேறியும் விட்டனர்.” அந்த வீட்டில் அவர்களும், அவர்கள் பிள்ளைகளும், மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அங்கு கூடி வரும் சபையும் வளர்ந்து வருகிறது.
இயேசு ஜீவிக்கிறார் என்பதற்கு இதைப் பார்க்கிலும் மேலான சாட்சி வேண்டியதில்லை. இவர்கள் அந்த வீட்டில் வாழ்வதே, ஆண்டவரின் வல்லமையை அயலார் அனைவருக்கும் பறைசாற்றி வருகிறது. இயேசுவிடம் அவர்களையும் ஈர்க்கிறது.
நம்மில் பலர் பிசாசுகளைக் கண்டு நடுங்குவது மட்டுமல்லாது, பல முதிர்ந்த விசுவாசிகளையே பயங்கொள்ளச் செய்துவிடுகிறோம். போதாக்குறைக்கு “இயேசு ஜீவிக்கிறார்” என்ற உண்மையை மறக்கச் செய்தும் விடுகிறோம். நம்மைக் கண்டு எப்படி மற்ற ஜனங்கள் ஆண்டவரின் வல்லமையை உணர்ந்துகொள்ள முடியும்? நமது வார்த்தைகளும், வாழ்க்கையும், “நமது ஆண்டவர் பெரியவர்” என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தப்படும் பரலோகம் நம்மில் மகிழட்டும்.
“கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” நீதி.18:10