நாங்கள் மன்னிக்கிறது போல எங்களுக்கு மன்னியும்

பெரிய வெள்ளி தினத்தில், உலகமெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள், இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், மரணத்தையும், சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகளை தியானித்து தற்பரிசோதனை செய்திருப்பார்கள். பிதாவே! இவர்களுக்கு மன்னியும் என்று இயேசு சிலுவையில் கூறிய வார்த்தையும், “நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்களுக்கு மன்னியும்” என ஜெபிக்க கற்றுக்கொடுத்தது, “கிறிஸ்தவர் மட்டுமல்ல, சகல மனுக்குலமும் போற்றும் பொன் மொழிகள்”.


என்னுடைய வாடிக்கையாளரில் ஒருவர் ஜெய்பூரில் வசித்து வருகிறார். அவர் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர். பெரும் செல்வந்தர், அநேக நல்ல பண்புகளுக்குச் சொந்தக்காரர்.என்னுடைய அலுவலக வியாபார விஷயமாக, நான் அவரைச் சந்திக்க விரும்பும் நேரமெல்லாம், அவர் என்னிடம் “சார் நீங்கள் ஜெய்பூர் வரை வந்து அலைய வேண்டாம்”. நானே வருகிறேன் என்று சொல்லி… அவரே சென்னை வரை வந்து என்னைப் பார்த்துச் செல்வதும் வழக்கம். இதற்காக அவர், அதிகாலையிலேயே புறப்பட்டு, 2 விமானங்களில் பயணித்து, சென்னையை அடைந்து மீண்டும் 2 விமானங்களில் பயணித்து ஜெய்பூர் சென்றடைய வேண்டும்.


ஒருமுறை இருவரும் சந்திக்க வேண்டிய நாளிலே, நான் அவசரமான வேலை காரணமாக, மதுரைக்குச் சென்றுவிட்டேன். அவர் என்னைக் காணும்படி, தன்னுடைய உறவினருடன் மதுரைக்கே வந்துவிட்டார். அன்றையத் தினம் “செப்டம்பர் மாதம்” முதல் தேதியாக இருந்தது.நான் அவரிடம், சில காரியங்களை வியாபார அபிவிருத்தி குறித்து பேசிவிட்டு, அதற்கான தொடர் நடவடிக்கைகளை, இரண்டு நாட்களுக்குள் முடித்து, எனக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
அவர் என்னிடம் 2 நாட்கள் அதிகமாகத் தரும்படி கேட்டார். அவர் பொதுவாக “எள் என்றால் எண்ணெய்” என பாயக் கூடியவர். எனவே நான் அவரிடம், எதற்காக அதிக நாட்கள் கேட்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.அவர் என்னிடம் “ஜீ, நான் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவன். எங்கள் குரு மகாவீர் அறிவுரையின்படி நடப்பவன். அவர் எங்களிடம் “வருடத்தில் 2 நாட்கள்” அனைவரிடமும் சென்று நாங்கள் கடந்த வருடத்தில் தவறுகள் ஏதாவது செய்திருந்தால், தயவாய் மன்னிக்கும்படி, நேரடியாகச் சென்றோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ கேட்பது வழக்கம்”. எனவே, நான் அந்த இரண்டு நாட்களுக்குப் பின்பு நீங்கள் கேட்ட காரியங்களைச் செய்கிறேன் என்றார்.


எனக்கு ஒருபுறம் ஆச்சரியமாகவும் மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது. இயேசுவின் பொன் மொழிகளை, மகாவீர் சொல்ல, பல்லாயிரம்பேர் இந்த தேசத்தில் பின்பற்றும்போது, இயேசுவின் அடியவரோ “மன்னிக்கவும் முடியாமல் பரலோகம் கிடையாமற்போனாலும் பரவாயில்லை” என இறுமாப்பாய் வாழ்வதும், “நாங்கள் மன்னிக்கிறதுபோல… எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என பலமுறை அறிக்கை செய்து… மன்னிக்கப்படாத பாவியாய் வாழ்வதும் பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
பிறர் குற்றங்களை மன்னிப்போம், பிறரிடம் மன்னிப்பு கேட்போம், கிறிஸ்துவின் சமாதானம் நம்மில் பெருகட்டும், நம் மூலம் இந்த தேசம் ஆசீர்வாதத்தினால் நிரம்பட்டும்.


“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” மத்.6:12



Author

You May Also Like…

Share This