1998ஆம் ஆண்டிலே, நான் தரக் கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிக்காக அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்குச் சென்றிருந்தேன்.அது என்னுடைய முதல் அமெரிக்க பயணம். அங்கே சென்று பார்த்தால் எல்லாமே ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது.
என்னுடைய பயிற்சி நாட்களில் பயன்படுத்த, ஒரு “காரை” வாடகைக்கு எடுத்து, நானே அதை ஓட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். எனக்கு அனுபவம் இல்லாதிருந்த காரணத்தால் என்னுடைய மேலதிகாரி ஒருவர் என்னை தினமும் அலுவலகத்திற்குத் தானே கூட்டிச்சென்று, மீண்டும் ஓட்டலில் வந்து விடுவதாக வாக்கு கொடுத்தார்.
முதல் நாள் செல்லும்போது, அவர் எனக்கு ஒரு அடையாள அட்டையைக் கொடுத்தார். அந்த “மின்னணு அடையாள அட்டையைக்” காட்டினால் மட்டுமே அந்த அலுவலகத்தின் கதவுகள் திறக்கும். மேலும் அந்த அட்டை பயிற்சி காலத்தில் மட்டுமே பயன்படும். இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. நானும் அதைத் தினந்தோறும் பயன்படுத்தி வந்தேன்.
பயிற்சியின் நாட்கள் முடிவடையும் சமயம்… கடைசி நாள் பயிற்சியின், மதிய உணவு வேளையிலே, நான் என்னுடைய அடையாள அட்டையைத் தொலைத்துவிட்டேன்… அந்த அட்டையில்லாமல் என்னால் தொழிற்சாலையை விட்டே வெளியேப் போக முடியாது. என்னை ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டியவர்… “கார்கள் நிறுத்துமிடத்தில் காத்திருப்பார்” அவரைச் சந்திக்கவும் முடியாது. அந்த நாட்களில் என்னிடம் அலைபேசியும் இல்லாதிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், நான் பலவிதமாகக் கலங்கி, என்னுடைய அமெரிக்க நண்பர் ஒருவரைத் தேடிச் சென்றேன். அவர் அதற்கு முன்பாக இந்தியா வந்திருந்தார். எனவே அவரை எனக்குத் தெரியும். நான் அவரைத் தேடி, அவருடைய வேலையிடத்திற்குச் சென்றபோது, அவர் அங்கே இல்லை. வேறொரு நபர் அங்கு வேலை செய்துக்கொண்டிருந்தார். நான் அவரிடம் “ராண்டி ஜார்வீஸ்” எங்கே? என வினவினேன். அவர் அதற்கு, எதற்காக பார்க்க வேண்டும் எனக் கேட்டார்? நான் பயந்து, தயங்கி, அவரிடம் “யாரிடமும் சொல்ல வேண்டாம்… நான் என்னுடைய அடையாள அட்டையை தொலைத்து விட்டேன்” எனக் கூறினேன். உடனே அவர் தன்னுடைய அருகிலிருந்த ஒலிபெருக்கியை எடுத்து முழுத் தொழிற்சாலையும் கேட்கும்படியாக ஒரு அறிவிப்புக் கொடுத்தார். அவர் அதிலே “ராண்டி ஜார்வீஸ், உடனடியாக வரவும்… உன்னுடைய இந்திய நண்பர், தன்னுடைய அடையாள அட்டையைத் தொலைத்துவிட்டார் என முழு விஷயத்தையும் மறைக்காமல் சொல்லிவிட்டார்” எனக்கு நடுக்கம் வர ஆரம்பித்துவிட்டது.
சற்று நேரத்தில் அந்த தொழிற்சாலையின், அதிகாரியான ராண்டி ஜார்வீஸ், மிகவும் தடித்த, உயரமான தோற்றமுடைய அவர், நான் இருந்த அந்த இடத்திற்கு வந்தார். என்னைப் பார்த்து, மிகவும் கனத்தக் குரலில், இம்மானுவேல் நீ என்ன உன் அடையாள அட்டையைத் தொலைத்து விட்டாயா? எனக் கேட்டார். நான் மிகவும் நடுங்கிப்போய் விட்டேன். மேலும் பயந்து, நடுங்கி “ஆம்” என பதிலளித்தேன்.
உடனே அவர் என்னை பாதுகாப்பு அதிகாரியிடம் அழைத்துச் சென்றார். நான் “என்ன நடக்குமோ” என்ன செய்வார்களோ என பயந்து பயந்து, அவர் பின் சென்றேன். நான் அந்த பாதுகாப்பு அதிகாரியைக் கண்டவுடன், மிகவும் பயந்து விட்டேன். ஏனெனில் அவருடையத் தோற்றம், ஒரு கோலியாத்தைப் போல இருந்தது. அவர் என்னிடம் “அடையாள அட்டையை” தொலைத்துவிட்டாயா? எனக் கேட்டுவிட்டு, நான் பதிலளிப்பதற்கு முன்னதாகவே, “கவலைப்படாதே நான் உனக்கு ஒரு புதிய அடையாள அட்டைத் தருகிறேன்” எனக் கூறினார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் என்னிடம் “ஏன் தொலைத்தாய்? எப்படித் தொலைத்தாய்?” என்று ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை. அவர் என்னுடையத் தவறை முழுமையாக மன்னித்திருந்தார். நிம்மதியாக வீடு திரும்ப உதவினார்.
நாம் சில வேளைகளில், மற்றவர்கள் தவறை மன்னிக்க முடியாமல், தேவையற்றக் கேள்விகள் கேட்டு அவர் பயத்தில் வாழும்படி செய்து, எல்லோருடைய நிம்மதியையும் கெடுக்கிறோம். தப்பிதங்களை மன்னிக்க தவறிப்போகிறோம். இதை நமது ஆண்டவர் இவ்வாறாக விளக்குகிறார்… “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்” மத்.18:35.
மற்றவர் தவறுகளை மன்னிப்போம், நமது ஆண்டவர் நம்மை தனது பிள்ளையென மெச்சிக் கொள்வார்.