1984ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஹாலிவுட்டின் (Hollywood) தாயகமான லாஸ்ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரத்தில் நடைபெற்றது. ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் பிரமிக்கத்தக்க வகையில் தத்ரூபமாக ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பினார்கள் ஒலிம்பிக் கமிட்டியினர். அமெரிக்க நாட்டின் சின்னமும், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் சின்னமும் அந்த ஆண்டு ஒன்றாக அமைந்தது. அது அமெரிக்க தேசத்து கழுகின் சின்னம் ஆகும்.
அதற்காக ஒரு அமெரிக்க கழுகை தேர்வுசெய்து, அதை ஆரம்ப நாளன்று விளையாட்டு மைதானத்தைச் சுற்றி ஒருமுறை வலம் வந்து பின் சற்று இறங்கி நேராக 5 ஒலிம்பிக் வளையங்கள் மீது உட்கார பயிற்றுவிக்க விரும்பினார்கள். ஆனால் அமெரிக்கக் கழுகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. அமெரிக்காவில் மிருக வதைச் சட்டங்கள் மிகக் கடுமையாக இருந்தது.
பல இடங்களில் தேடி கடைசியாக கூட்டில் பல வருடங்கள் அடைக்கப்பட்டிருந்த ஒரு அமெரிக்கக் கழுகைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் அதைப் பார்த்தபோது அதன் நிலை மிகப் பரிதாபமாக இருந்தது. அது ஒரு அமெரிக்கக் கழுகைப் போலல்லாது ஒரு வான்கோழியைப் போல காட்சியளித்தது. பல நாட்கள் கூட்டில் அடைபட்டிருந்த படியால் அதனால் பறக்க முடியாதபடி மிகவும் பருமனாக இருந்தது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற பல மாதங்கள் இருந்தபடியால், அந்தக் கழுகின் பயிற்சியாளர் அதை நன்றாக பயிற்றுவிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். அவர் அந்தக் கழுகிற்கு தேவையான ஆகாரம் கொடுத்து உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தார். அந்தக் கழுகோடு விளையாடி, சாப்பிட்டு, தூங்கவும் செய்தார். உடற்பயிற்சியின்போது அந்தக் கழுகு சில வேளைகளில் கீழே விழுந்தது. ஆனாலும் அதன் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
அந்தோ பரிதாபம்! திடீரென ஒருநாள் அந்தக் கழுகு மரித்துப்போனது. மாரடைப்பால் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் அறிவித்தனர். அதற்கு அளிக்கப்பட்ட பறப்பதற்கான பயிற்சியை அந்தக் கழுகால் தாக்குப்பிடிக்க முடியாமல் போனதே அதன் மரணத்திற்கு காரணமாகும்.
அந்த அமெரிக்க கழுகு பறக்கமுடியாமல் பல வருடங்கள் கூட்டில் அடைக்கப் பட்டிருந்தபடியால் பறக்கவேண்டிய நாள் வந்தபோது அதனால் பறக்க முடியவில்லை. இதுபோல நாமும் ஆவிக்குரிய ஜீவியத்தின் உன்னத அனுபவங்களில் ஜீவிக்கா விட்டால் ஆண்டவரோடு ஒருநாள் மத்திய வானில் பறக்க வேண்டிய நாள் வரும் போது பறக்க முடியாமல் போய்விடும். எனவே, நம்முடைய மணவாளனாகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வர காத்திருக்கிற நாம் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய் நம்மைக் காத்துக்கொள்வோம்!
ஏசாயா 40:31 “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.”