கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் மனிதர்களை தன் சேவையில் பயன்படுத்த விரும்புகிறார். தேவன் பயன்படுத்தக் கூடாதபடிக்கு இந்நாட்களில் பல விஷயங்களில் தேவ ஊழியர்களும் விசுவாசிகளும் கட்டப்பட்டிருக்கின்றனர். உலக சிநேகம், ஆடம்பரம், அசுத்த பேச்சு, அவிசுவாசம், நிர்விசாரம் தூக்கம் மேலும் கொடுக்கவேண்டிய கிரயத்தைச் செலுத்த விருப்பம் இல்லாத நிலை. சாத்தான் பலவிதங்களில் மனிதரை கட்டி வைத்துள்ளான். நீங்கள் செய்ய வேண்டியது என்ன? முழு இருதயத்தோடும், முழு கவனம் செலுத்தி, அவருடைய சித்தத்திற்கு அர்ப்பணித்து வாழவேண்டும். தேவனை பிரியப்படுத்த எந்தக் கிரயமும் செலுத்த தயாராக இருக்க வேண்டும்.
பெரிய தீர்க்கத்தரிசியான ஏசாயாவை தேவன் பயன்படுத்த முடியவில்லை. காரணம், ஒரு குறைதான். அவன் உசியா ராஜாவின் அரண்மனைக்குச் செல்வது அவன் உறவில் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். ராஜாவின் தோழன், எனவே செல்வாக்கு, அந்தஸ்து இவற்றில் மயங்கி காணப்பட்டான். தன்னைக் காண நேரம் எடுக்கவில்லை. தேவ சமூகத்தில் அமர்ந்து அதிக நேரம் தன்னை ஆராய்ந்துபார்க்க முடியவில்லை. உசியா ராஜா மரித்தபின்பு தேவாலயத்தில் சென்று ஜெபிக்கும்போது ஒரு பரம தரிசனத்தைக் கண்டான். அதில் பரலோக தேவன் உயரமும், உன்னதமுமான சிங்காசனத்தில் பரிசுத்த தூதர்கள் அவரை ஆராதிப்பதைக் கண்டான். அவருடைய மகிமையால் பூமியனைத்தும் நிறைந்திருப்பதைக் கண்டான். பரிசுத்த தூதர்களின் சத்தத்தால், தேவாலய வாசல்களின் நிலைகள் அனைத்தும் புகையினால் நிறைந்தது. அந்த மகிமையின் காட்சியில் தன் குறைபாடுகளைக்கூட உணர்ந்தான். “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்;” (ஏசாயா 6:1-8)
சூழ்நிலைகள் நம் பேச்சை மாற்ற இடம் கொடுக்கக்கூடாது. சூழ்நிலைகளினால் உன் பேச்சு உலகத்தாரைப்போல மாறிப்போகக் கூடாது. மற்ற உலகத்தாரோடு ஐக்கியம் பாராட்டும்போது தீட்டுப்படுகிறோம். மேலும் எபே.5:14ஆம் வசனத்தில், “ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” விழித்து எழும்பி, விழிப்புள்ள கிறிஸ்தவ வாழ்க்கை செய்ய அர்ப்பணிக்க வேண்டும். வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும். ஏசாயா தீர்க்கத்தரிசியை தேவன் பயன்படுத்த தடை என்ன? என்று கண்டுபிடித்தான். அசுத்த உதடுகளினால் வரும் தீமைகளைப் பார்ப்போம்.
1) பொய் பேசும் வாய்:
சங்.5:9ஆம் வசனத்தில், “அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்” வெளியே பரிசுத்தம், உள்ளே மாய்மாலம். ஒன்றும் இல்லை. பொய் பேசித்தான் பிழைக்க முடியும் என்று சாக்குபோக்குச் சொல்லி தன்னையே தேற்றிக்கொள்வது, ரோமர் 8:4ஆம் வசனத்தில், “மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்…” மாம்ச சிந்தை மரணம்.
இச்சகமான வார்த்தைகளை பேசக்கூடாது, முகஸ்துதி செய்யக்கூடாது. இல்லாததை இருப்பதுபோல் சொல்லாதே. இயேசு முகஸ்துதி பேசவில்லை.
2) பெருமைகளை பேசும் வாய்!
சங்.12:3ஆம் வசனத்தில், “இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.” சர்வாதிகாரிகள் பெருமையானவைகளைப் பேசுகிறார்கள். உலகை பிசாசு பெருமையினால் ஆட்டிப் படைக்கிறான். தற்கொலை, தூஷணமான பேச்சு, அடித்துக் கொலை செய்தல், துன்பப்படுத்துதல் போன்ற காரியங்களை சாத்தான் செய்யத் தூண்டுகிறான். வெளி.13:5ல் “பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது;” சாத்தான் பெருமையையும், தூஷணத்தையும் பேசுகிறான்.
3) புறம்கூறும் நாவு:
நிந்தையான பேச்சு சங்.15:3ஆம் வசனத்தில், கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுகிறவன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும் தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும், தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். புறங்கூறும்போதும், நிந்தையான பேச்சை எடுக்கும்போதும் கண்ணியம் பாதிக்கப்படும்.
4) கபட்டு வசனிப்பு:
சங்.34:13ஆம் வசனத்தில், “உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்” மேலும், சங்.52:4ஆம் வசனத்தில், “கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.”
அ) தேவன் சிம்சோனை பயன்படுத்த முடியவில்லை, ஏன்?
மாம்ச இச்சை இருந்ததால் பயன்படுத்த முடியவில்லை. தூணை அசைக்கவும், நரியை பிடிக்கவும், கதவுகளை தூக்கிச் செல்லவும் அவனை அபிஷேகிக்கவில்லை, தெரிந்துகொள்ள வில்லை. அவனை தெரிந்துகொண்டது இஸ்ரவேலை மீட்கும்படியாக, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன். பெலிஸ்தியருக்கே அடிமையாகிறான். ஏன்? மாம்ச இச்சை, இரகசியங்களை வேசிக்கு வெளிப்படுத்தியதால், பிரதிஷ்டை உடைக்கப்படும்போது அழிவு, உபவாசித்து ஜெபித்து, பிரதிஷ்டையை புதுப்பித்துக்கொள்.
ஆ) சவுலை ஏன் பயன்படுத்தவில்லை?
அவன் ஆடம்பர பிரியன், அமலேக்கியரை முறியடிக்கவில்லை. கீழ்ப்படிதல் இல்லை, சுயத்துக்கு தன் இஷ்டம்போல செய்தான்.
இ) ஏசாயா: அசுத்த உதடுகள், பெருமை, அசுத்த உதடுகள் உள்ள மக்கள் மத்தியில் வாசம்பண்ணினான்.
ஈ) தாவீது: தேவனால் பயன்படுத்தப்பட்டதன் காரணம் தாவீது உதடுக்கு காவல் வைத்தான்.
5) சற்பனையைப் பிணைக்கும் நாவு:
சங்.50:19ஆம் வசனத்தில், “உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது”
6) கசப்பான வார்த்தைகள்:
சங்.64:4ஆம் வசனத்தில், “மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.” போகுமிடம் எல்லாம் கசப்பான வார்த்தைகளை பேசித் திரிகிறார்கள்.
7) குற்றம் சாட்டும் உதடுகள்:
வெளி.12:10ஆம் வசனத்தில், “…இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்”
அன்பு நண்பரே! தேவன் நம்மை பயன்படுத்தும்படி நம் வாழ்க்கையில் உள்ள சீர்கேடுகளை நம்மைவிட்டு அகற்றுவோம்! கிறிஸ்து நம்மை பிரகாசிப்பிப்பார். – அல்லேலூயா!