கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் உலகத்தோடும், மாம்சத்தோடும், பிசாசோடும் போராட வேண்டிய போராட்டங்கள் உண்டு. இயேசு எல்லா போராட்டங்களையும் போராடி ஜெயித்தார். “எல்லாம் முடிந்தது” என்றார். நாம் உலகத்திற்குரியவர்கள் அல்ல, நாம் இந்த உலகத்தில் தேவனுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க அழைக்கப்பட்டவர்கள். பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து ஜனங்களை தேவனுக்காக விடுவிக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். எனவே மாம்சத்தோடும், இரத்தத்தோடும் மட்டுமல்ல, வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகளின் சேனையோடும் நமக்கு எப்பொழுதும் போராட்டம் உண்டு. தீங்குநாளில் நாம் தேவனுடைய கூடாரத்தில் மறைந்திருந்து, ஆவியில் பெலப்படவேண்டும். தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை பிடித்துக்கொண்டு ஆவியானவரின் உதவியுடன் பிசாசின் சேனையுடன் போராடி ஜெயம் பெற வேண்டும். இந்த யுத்தம் கர்த்தருடையது. யுத்தத்தில் கடைசியில் வெற்றி, தேவனுடைய பிள்ளைகளுக்குத்தான். இந்த நிச்சயத்தோடு நாம் பிசாசின் தந்திரங்களை எதிர்த்துப் போராட வேண்டும். ஜெயம் கொள்ளுகிறவர்களை தேவன் கனப்படுத்தி, மகிமைப்படுத்துவார். 2தீமோ.4:7 வசனத்தில், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.” என்று பவுல் அப்போஸ்தலன் கூறியுள்ளார். தேவ வைராக்கியத்துடன் உலகத்தில் பிசாசின் தந்திரங்களோடு போராடி மேற்கொள்ள வேண்டும். நாம் எவ்விதமான போராட்டங்களை போராடி ஜெயிக்க வேண்டும்? என்று ஒன்பது தலைப்புகளில் ஆராய்ந்து தியானிப்போம்.
முதலாவது – பாவ பிரமாணத்தோடு உள்ள போராட்டம்:
ரோமர் 7:23 வசனத்தில், “ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப் பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.” பவுல் மேலும் இவ்வாறு கூறுகிறார், நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே பாவப் பிரமாணத்துக்கும், ஊழியம் செய்கிறேன் என்கிறார். பாவ பிரமாணம் இரட்சிக்கப்பட்ட துவக்கத்தில், இந்தப் பாவப்பிரமாணம் போராடியிருக்கிறது. சிலர் பாவ போராட்டத்தை மேற்கொண்டு வெற்றிபெற மாம்ச சரீரத்தை ஒடுக்கி (உபவாசித்து) பார்க்கின்றனர். அமைதியாய் மௌன உபவாசத்தில் இருக்கிறார்கள். இது வெற்றியைத் தராது. மாம்சத்தில் முயற்சி செய்து நல்ல பலனை பெறமுடியாது. ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து வாழ்ந்தால் வெற்றி கிடைக்கும். ரோமர் 8:1 வசனத்தில், “…கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” பவுலுக்கு வெற்றி தந்தது பரிசுத்த ஆவியானவர். இயேசுவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். வெள்ளம் போல சத்துரு வரும்போது பரிசுத்த ஆவியானவர் தாமே கொடியேற்றுவார். இராணுவ வீரன் மற்றவர்களைப் போல சாதாரண உடை அணிய முடியாது, போடக்கூடாது. மாம்சத்தின்படி போராடி ஜெயிக்க முடியாது. ஆவியானவர் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு நபர், அவரே சக்தியைக் கொடுக்கிறார். பாவத்தை மேற்கொள்ளும்படி பெலன் கொடுக்கிறார்.
இரண்டாவதாக – ஆவியின் போராட்டம்:
லூக்கா 13:24 வசனத்தில், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்கிறார். விசாலமான வழியில் செல்லுபவர்கள் தான் அநேகர். விசுவாசிகள் தாங்கள் எந்தப் பாதையில் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். எப்படியும் ஜீவிக்கலாம், எதையும் பேசலாம் என்று எண்ணாதே, நீ எந்தப் பாதையில் தேவனை பிரியப்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டும். மாம்சம் ஆவிக்கு விரோதமாக போராடும். இடுக்கமான வழியில் செல்ல போராட்டங்கள் உண்டு. அகலப் பாதையில் எதிர்ப்பும் இல்லை, சண்டையும் இல்லை, பிசாசின் ஒத்துழைப்பு அதில் உண்டு. இடுக்கமான வழியில் நடப்பவரின் யுத்தங்களை தேவனே நடத்துகிறார். ஏசாயா 41:10-13, “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள். உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” என்கிறார்.
மூன்றாவதாக – பாவத்துக்கு விரோதமாய்ப் போராடுதல்
எபிரெயர் 12:4 வசனத்தில், “பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.” அநேகர் விசுவாசத்துக்காக தேவன் பேரில் வைத்த அன்பின் நிமித்தம் பாவம் செய்யக்கூடாது என்பதற்காக இரத்தம் சிந்தி உள்ளனர் காயப்பட்டுள்ளனர். தங்கள் உயிரையே தியாகம் செய்து, இரத்தசாட்சியாக மரித்துள்ளனர். பரிசுத்த வாழ்க்கையை காத்துக்கொள்ளுவதற்கு இரத்தம் சிந்தி, காயம் பட்டால்தான் சரியான யுத்தம்.
நீ இருக்கும் இடத்தில் பாவத்திற்கு விரோதமாகப் போராடு. கோலியாத்தை கொன்றுபோடு. பயப்படாதே சிறுவன் என்று எண்ணக்கூடாது. பெரியவர் உனக்குள் இருக்கிறார். தேவ பெலத்தால் உலகத்தையும், சமுதாயத்தையும் மாற்றியமைக்க பிரயாசப்படு. இயேசுவை உன் வாழ்க்கையில் உயர்த்திக் காண்பி. பாவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து வாழ். உன் வாழ்க்கையில் இருக்கும் வறுமை தீரும். சமுதாயமும், குடும்பமும் செழிக்கும். பாவத்துக்கு காரணம் பிசாசு, அதைக் கட்டி ஜெபி, பிசாசை கட்டி மேற்கொண்டு பின்பு ஊழியம் செய்.
நான்காவது – துஷ்ட மிருகத்தோடு போராட்டம்:
துர்உபதேசக்காரரோடு உள்ள போராட்டம். சிலர் உயிர்த்தெழுதல் இல்லை என்கின்றனர். தனியாகவும், கூட்டமாகவும் எதிர்த்து நிற்க வேண்டும். வேத வசனமாகிய உறை கல்லில் உரசிப்பார், காணாததுபோல இருக்க கூடாது. துஷ்ட மிருகங்களின் நகம், பல் வலிமையுடையதாக இருக்கும். அதுபோல துர்உபதேசமும் வலிமையானதுதான். 1கொரி.15:32 வசனத்தில், “நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்;…” என்கிறார் பவுல். இன்னும் பலர் துர் உபதேசக்காரர்களாய் இருக்கின்றனர். (கெத்சமனேயில் பாலஸ்தீனா நாடு சென்று ஜெபிக்கின்றனர், கடிதத்தை எருசலேமுக்கு அனுப்பி ஜெபித்தல், இஸ்ரவேலிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய் வாங்கி விற்பனை செய்கின்றனர். யோர்தானில் போய் ஞானஸ்நானம் எடுக்கச் சொல்லுதல், பரிசுத்தாவியைப் பற்றி தவறாகப் பேசுதல், குழந்தையிலேயே ஞானஸ்நானம்) போன்ற துர்உபதேசங்களும். பொருளாதார செழுமை, பாதி வயதில் மரணமில்லை, வியாதியில்லை போன்ற உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கு முதலிடம் கொடுக்கின்றனர். இளம் வயதில் எத்தனையோபேர் மிஷனெரி பணித்தளங்களில் வியாதியில் இரத்த சாட்சியாக மரித்துள்ளனர். சிந்திக்க வேண்டும். இயேசுவைப் போல மாறவேண்டும். (கூடி நெ டமைந துநளரள) அதுதான் பிதாவின் சித்தம். இயேசுவின் சாயலாக மாறி தேவனோடு சேர பாடுகள் உண்டு. அதிக கஷ்டங்கள், சோதனைகள் உண்டு. நம்மை உலகப் பிரகாரமாக ஐசுவரியவானாக்குவது தேவனுடைய சித்தம் அல்ல. தேவனுடைய இராஜ்ஜியத்துக்குரியவைகளையே நாட வேண்டும். இந்த நாட்களில் பொருளாதார ஆசீர்வாதத்துக்கு முதலிடம் கொடுக்கும் துர்உபதேசங்கள் தான் அதிகம் உள்ளது.
ஐந்தாவதாக – விசுவாசத்திற்காக நல்ல போராட்டம் போராடு
1தீமோ.6:12 வசனத்தில், “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.” 1பேதுரு 1:7 வசனத்தில் “அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” மேலும் 2தீமோ.1:5 வசனத்தில், அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். உனக்குள் இருக்கும் விசுவாசம் உன் பிள்ளைகளை பற்றிப் பிடிக்க வேண்டும். வசனத்தை சிந்திக்க வேண்டும், தியானிக்க வேண்டும், விசுவாசத்துக்காக உன் ஜீவனைக் கொடு. தேவனுக்காக கற்புள்ள கன்னிகையாயிரு. ஒரு (ளபைn) கையெழுத்துதானே, சிலைக்குமுன் ஒரு கும்பிடுதானே, ஒரே ஒரு பொய் தானே என்று சொல்லி உலகத்தோடு இசைந்து வாழக்கூடாது. விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஆறாவதாக – மனிதர்களோடு உள்ள போராட்டம்
பிலிப்பியர் 1:27 “நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, (ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள்” மேலும் யூதா 3ஆம் வசனத்தில் “…பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது)” என்கிறார். கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு பாத்திரராக நடந்து போராட்டங்களை சந்திக்க வேண்டும்.
ஏழாவது – பொல்லாத ஆவிகளோடு போராட்டம்:
எபே.6:12 வசனத்தில், “…மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” உண்மையான எதிரி பிசாசுதான். உபா.7:22 “அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.” ஒவ்வொருவிதமான பிரச்சனைகளையும் தேவ பெலத்தால் மேற்கொள்ள வேண்டும்.
எட்டாவது – ஆத்தும ஆதாயப் போராட்டம்:
கொலோ.1:28,29 வசனங்களில், “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.” பவுலின் போராட்டம் ஆத்தும ஆதாய போராட்டம்தான், எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்த பிரயாசப்பட்டார். மேலும் மாம்சத்தின்படி அவருடைய இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவை விட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புகிறேன் என்கிறார். இஸ்ரவேலருடைய இரட்சிப்புக்காக அவருக்கு இடைவிடாத மன வேதனையும், மிகுந்த துக்கமும் இருந்தது.
ஒன்பதாவது – ஜெபத்தில் போராட்டம்:
ரோம.15:32 வசனத்தில், “நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராட வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” என்கிறார். போராட்ட ஜெபம் ஒரு யுத்தகளம். எப்பாப்பிராத்து, தீமோத்தேயு இந்த ஜெபத்தை கற்றுக்கொண்டு ஆத்துமாக்களுக்காக போராடி ஜெபித்தனர். சபைகளில் உள்ள ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியில் வளர வேண்டும் என்று உறுதியாய் கடைசிவரை கறைதிரையற்ற மணவாட்டியாய் காக்கப்பட வேண்டும் என்று ஜெபித்தனர். சத்துருவாகிய பிசாசு சிங்கம்போல எவனை விழுங்கலாம் என்று வகை தேடி சுற்றித் திரிகிறான். எனவே ஒரு ஆத்துமாவும் வழிதப்பி போகக் கூடாது என்று போராடி ஜெபித்தனர்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் நமக்கு நியமித்த ஓட்டத்தில் பொறுமையோடு ஓட வேண்டும். நல்ல போராட்டத்தை போராடி, பவுலைப்போல ஓட்டத்தை முடித்து, விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். நீதியின் தேவன் அழியாத மாசற்ற கிரீடத்தை நமக்குத் தருவார். ஆமென்!




