தேவ பிள்ளைகள் விசேஷமானவர்கள். தேவன் அவர்களை உன்னதமான ஒரு இடத்தில் வைத்துள்ளார். அதனால் அவர்கள் தேவன் தங்களை வைத்திருக்கும் இடத்தைவிட்டு விழுந்துபோகக் கூடாது. இடம் மாறிவிடக் கூடாது. தேவன் நம்மை வைத்திருக்கும் இடத்தில் உறுதியாக இருக்க வேண்டும். தரக்குறைவாக நடக்கக்கூடாது. தேவன் வைத்த இடத்தில் நிலைத்திருந்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொண்ட பல பக்தர்களை வேதத்தில் பார்க்கிறோம். தேவன் வைத்த இடத்திலிருந்து விழுந்துபோன சிலரையும் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளவில்லை. அவர்களைக் குறித்து இங்கு ஆராய்வோம்.
முதலாவதாக – பெருமையினால் தேவ சமூகத்திலிருந்து விழுந்துபோன தூதன்
பிரதான தூதனாக உன்னதமான இடத்திலிருந்தவன் பெருமையினால் தேவ சமூகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டான். தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார் என்று யூதா 6ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். தேவனை ஆராதிக்க வேண்டியவன், “உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று பெருமை கொண்டு பாதாளத்தில் தள்ளுண்டு போனான் (ஏசாயா 14:12-15). பெருமை ஒரு மனிதனை தேவன் வைத்த ஸ்தானத்திலிருந்து கீழே விழத் தள்ளுகிறது. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் (1பேதுரு 5:5). எனவே தாழ்மையை அணிந்துகொண்டு நமது ஆதி மேன்மையைக் காத்துக்கொள்வோமாக.
இரண்டாவதாக – தேவனுடைய சத்தத்திற்கு செவிகொடாமல் விழுந்துபோன ஆதாம் – ஏவாள்
ஆதாம் ஏவாளை தேவன் தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் உண்டாக்கினார் (ஆதி.1:26,27). அவர்களை சிங்காரவனமாகிய ஏதேன் தோட்டத்திலே வைத்தார். அங்கு அவர்கள் சகல வசதிகளோடும் வாழ்ந்தார்கள். ஆனால் ஒருநாள் அவர்கள் வஞ்சக பிசாசின் சத்தத்திற்கு செவிகொடுத்து தேவன் கொடுத்த கட்டளையை மீறி பாவம் செய்தார்கள். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபடியால் தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்தைவிட்டுப் புறம்பே தள்ளினார் (ஆதி.3:23,24). ஆதாமும் ஏவாளும் அந்நிய சத்தத்திற்கு செவிகொடுத்து தங்களை தேவன் வைத்த ஆதி மேன்மையிலிருந்து விழுந்துபோனார்கள். தேவன் விலக்கிய காரியங்களுக்கு விலகாமல் இருப்பது விழுகைக்கு காரணமாகிறது. தேவன் விலக்கியவை நமக்கு அருவருப்பாக இருக்க வேண்டும். மேய்ப்பனுடைய சத்தத்திற்கு செவிகொடுத்து அவருக்குப் பின்செல்லும் ஆடுகளாக நாம் இருக்க வேண்டும் (யோவான் 10:4).
மூன்றாவதாக – தேவனுக்குப் பிரியமான பலியைக் கொண்டுவராமல் விழுந்துபோன காயீன்
காயீன் ஆதாம் ஏவாளின் தலைமகன். குடும்பத்தின் வாரிசு. உன்னதமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தான். சுய இஷ்டமான காணிக்கையை செலுத்தினபடியால் தேவன் அவன் காணிக்கையை அங்கீகரிக்க வில்லை (ஆதி.4:5). தேவன் விரும்பும் காணிக்கையை அவருக்குக் கொண்டுவர வேண்டும். பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக நம்மை ஒப்புக்கொடுத்து ஆராதிப்பதையே தேவன் விரும்புகிறார் (ரோமர் 12:1). காயீன் தேவன் விரும்பிய பலியைக் கொண்டுவந்து ஆபேலைப் பகைத்து அவனைக் கொலை செய்தான் (ஆதி.4:8). காயீன் எரிச்சலுள்ளவனாகக் காணப்பட்டான் (ஆதி.4:6). நமது இருதயத்தில் கசப்பு, எரிச்சல், பகை இருக்கும்போது தேவனுக்குப் பிரியமான பலியைக் கொண்டுவர முடியாது. ஆவியின் கனிகள் நம்மிடம் காணப்படும்போது தேவன் நமது பலியில் பிரியப்படுவார்.
நான்காவதாக தவறான தெரிந்து கொள்ளுதலினால் விழுந்துபோன லோத்து
லோத்து சோதோமைத் தெரிந்துகொண்டான். சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் மகா பாவிகளுமாயிருந்தார்கள் (ஆதி.13:13). உலகத்தால் வரும் மேன்மையை லோத்து தெரிந்துகொண்டான். தேவ மனிதனாகிய ஆபிரகாமின் ஐக்கியத்திலிருந்து தன்னை பிரித்துக்கொண்டான். தெரிந்துகொள்ளுதலில் லோத்து தவறுசெய்தபடியால் அவன் பிள்ளைகளின் வாழ்வு சீர்கெட்டது; அவன் மனைவி உப்புத் தூணானாள். நமது வாழ்க்கையில் தெரிந்துகொள்ளுதல் முக்கியமானது. பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சங்கீதக்காரன் முதலாம் சங்கீதத்தில் கூறியதுபோல துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும், பகலும் அவருடைய வேதத்தைத் தியானித்து நமது ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாக சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்டதினால் விழுந்துபோன ஏசா
ஏசா தனது சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்டபடியால் ஆதி மேன்மையை இழந்தான். ஒருவேளை போஜனத்திற்காக தன் மேன்மையான பங்கை விற்றுப்போட்டு சீர்கெட்டவனானான் (எபி.12:16). ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் ஏசாவின் தேவனும் என அழைக்கப்பட முடியாமல் யாக்கோபின் தேவன் என அழைக்கப்பட வேண்டியதாயிற்று. ஒரு சரித்திரமே மாற்றி எழுதப்பட்டது. மேன்மையான பங்கை அலட்சியம் பண்ணினபடியால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை ஏசாவால் சுதந்தரிக்க முடியாமற் போயிற்று. அற்ப சந்தோஷத்திற்காக தேவன் தரும் மேன்மையான பங்குகளை இழந்துபோகக் கூடாது.
ஆறாவதாக கீழ்ப்படியாமையினால் விழுந்துபோன சவுல்
சவுல் இஸ்ரவேலின் முதல் ராஜா. சிறிய தாழ்மையான கோத்திரத்திலிருந்து இராஜாவானான். ஆனால் அவன் தேவன் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அமலேக்கியரை முழுமையாக சங்கரிக்கவில்லை. கர்த்தருடைய வார்த்தையை சவுல் புறக்கணித்தபடியால் கர்த்தரும் அவனை இராஜாவாய் இராதபடி புறக்கணித்தார் (1சாமு.15:23). தமது இருதயத்திற்கு ஏற்ற தாவீதை ராஜாவாய் அபிஷேகம் பண்ணினார். அதனால் சவுல் தாவீதைப் பிராண பகையாய் பகைத்தான். சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்ற வார்த்தைகள் சவுலை வீழ்த்தியது. பொறாமையினால் நிறைந்தவனானான். தேவனுக்குக் கீழ்ப்படியாமையும் பொறாமையும் அவனை ஆதி மேன்மையிலிருந்து விழத்தள்ளிற்று. பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும் ஆட்டுக் கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் (1சாமு.15:22) என்ற வசனத்தை மனதிற்கொண்டு நமது ஆதி மேன்மையைக் காத்துக்கொள்வோமாக.
ஏழாவதாக பொருளாசையினால் விழுந்துபோன யூதாஸ்
யூதாஸ் இயேசுவின் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவன். இயேசுவோடு மூன்றரை வருடங்கள் இருந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவரால் செய்யப்பட்ட அற்புத அடையாளங்களைக் கண்டவன். பன்னிரெண்டு கோத்திரங்களை நியாயந்தீர்க்கிறவனாக ஆட்டுக்குட்டியானவரோடு வீற்றிருக்க வேண்டியவன். பொருளாசையினால் விழுந்துபோனான். அவன் நாட்டம் இயேசுவின்மேல் இருக்கவில்லை; பணப் பையின் மேலேயே இருந்தது. பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது (1தீமோ.6:9,10). பொருளாசையினால் யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான் (மத்.27:4,5). பண ஆசை ஒரு மனிதனை தேவனைவிட்டுப் பிரிக்கிறது. பொருளாசை இல்லாதவர்களாய், நமக்கிருக்கிறவைகள் போதுமென்கிற எண்ணமுடையவர்களாய் நடந்துகொண்டு நமது ஆதி மேன்மையைக் காத்துக்கொள்வோமாக.
“தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.
துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்” (சங்.19:12,13) என்று சங்கீதக்காரன் பாடுவதுபோல நமது பிழைகளையும், குற்றங்களையும், பாவங்களையும், பெரும் பாதகத்தையும் அறிக்கையிட்டு நமது ஆதி மேன்மையைக் காத்துக்கொள்வோமாக. தேவன் மேலுள்ள நமது ஆதி அன்பை புதுப்பித்துக்கொள்வோமாக.