கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்று அநேக தேவ பிள்ளைகள் தேவன் தங்களுக்குக் கொடுத்த மேன்மையான ஸ்தானத்தை இழந்து வேதனையையும், துன்பத்தையும் அனுபவிக்கின்றனர். தேவ பிள்ளைகள் தங்கள் வாழ்வில் பின்மாற்றத்திற்கு இடம் கொடுத்து தேவன் தங்களுக்குக் கொடுத்த ஆவிக்குரிய வாழ்க்கையை நஷ்டப்படுத்தி பலவித கண்ணிகளில் மாட்டித் தவிக்கின்றனர். தேவன் தனது திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் தன்னுடன் ஒத்துழைக்காத நபரை பயன்படுத்துவது இல்லை. தேவன் வேறு ஒரு நபரை அவரது இடத்தில் எழுப்பி தன் பணியை நிறைவேற்றுவார். ராஜாவின் வேலை ராஜரீகமாக எந்தத் தடையுமின்றி நடைபெறும். ஆம், பிரியமானவர்களே, நீங்கள் தேவன் உங்களுக்குக் கொடுத்த மேன்மையான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை இழந்துவிடாதீர்கள்! தேவன் உங்களுக்கு கொடுத்ததைப் பற்றிக்கொண்டிருங்கள். முடிவு பரியந்தம் தேவன் அழைத்த அழைப்பில் நிலைத்திருக்க ஜாக்கிரதையாயிருங்கள்.
இன்று நாம் வேதத்திலிருந்து தங்கள் ஆதி மேன்மையை காத்துக்கொள்ளாத சிலரைப் பற்றி ஆராயலாம். தேவன் அவர்களை நமக்கு முன்பாக எச்சரிக்கும் ஸ்தாபங்களாக (தூண்களாக) நிறுத்தி வைத்துள்ளார்.
முதலாவதாக
யூதா 6ஆம் வசனத்தில் “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்”. பரலோகத்தில் மேன்மையான நிலையில் வைக்கப்பட்டிருந்த கேரூப்-லூசிபர் தன்னுடைய பெருமையினால் பாதாளத்தில் தள்ளுண்டு போனான். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி வானத்திலிருந்து விழுந்தது (ஏசாயா 14:12). உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று இருதயத்தில் சொன்னதால் அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டு போனான்.
பெருமையினால் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் முதல் அரசன் நேபுகாத்நேசார் தன் சிங்காசனத்தை இழந்து மாடு போல புல்லை மேய்ந்தான். அவனது பெருமை உயர்ந்த நிலையிலிருந்து அவனை கீழே விழத் தள்ளியது. நாமும் பெருமைக்கு இடம் கொடுத்து தேவனின் கிருபைகளை நஷ்டப் படுத்தாது இருப்போமாக!
இரண்டாவதாக
ஆதியாகமம் 3:3 வசனத்தில் ஆதாம் ஏவாளிடம் தேவன் தோட்டத்தின் நடுவில் உள்ள கனியைக் குறித்து எச்சரித்தார். “நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம்…” என்றார். தேவன் முதல் மனிதனுக்குக் கொடுத்த இடம் நேர்த்தியானது. ஆனால் அவன் பிசாசுக்கு செவி கொடுத்ததால் தன்னுடைய கீழ்ப்படியாமையினால் ஏதேனின் வாழ்வை இழந்தான். ஆதி.3:24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டார். ஆதாமும் ஏவாளும் தங்களுக்குக் கிடைத்த மேன்மையான தேவனுடைய ஐக்கியத்தையும், பாதுகாப்பான இடத்தையும் இழந்தனர். இன்றும் அநேகர் பிசாசுக்கு இடம்கொடுத்து தேவனுடைய தோட்டமாகிய சபையை விட்டு விலகி, தேவனுடைய ஐக்கியத்தையும் அன்பையும் வழிநடத்துதலையும் இழந்து நஷ்டப்பட்டு காணப்படுகின்றனர். சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுவது போல நீங்களும் விட்டுவிடாதீர்கள்.
மூன்றாவதாக
ஆதியாகமம் 4:6ல் கர்த்தர் காயீனை நோக்கி “உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?” என்றார். காயீனுக்கு தன் சகோதரன் ஆபேல் தேவனால் அங்கீகரிக்கப்பட்டதைக் கண்டு எரிச்சல், கோபம் வந்தது. பொறாமையால் தன் சகோதரனை கொலை செய்தான். தேவனுக்குப் பிரியமான பலியை செலுத்தாமல் தன் சுய இஷ்டமான ஆராதனைக்குத் தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்தான். தன்னுடைய பாவத்திற்காக பலியாக ஆட்டை செலுத்துவதற்கு பதிலாக – வயல் வெளிகளில் விளைந்த கனிகளை படைத்தான். தேவன் அவனை அங்கீகரிக்கவில்லை. ரோமர் 12:1 வசனத்தில், “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும்…” என்கிறார் பவுல். தேவனுக்குப் பிரியமான புத்தியுள்ள ஆராதனை செய்யாமல் தன் இஷ்டப்படி ஆடம்பரங்களுக்கும், வெளிப்படையான அலங்காரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவரை தேவன் அங்கீகரிப்பது இல்லை.
ஆதியாகமம் 4:26 வசனத்தில் ‘சேத்துக்கு குமாரன் பிறந்தபோது மனுஷர் கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொண்டார்கள்’ என்று பார்க்கிறோம். ஆதி.5:4ல் பார்க்கும்போது, ‘தேவன் காயீனுக்குப் பதிலாக சேத்தைத் தெரிந்துகொண்டார்’. தேவன் தெரிந்துகொண்ட வம்ச வழியில் (இயேசு உலகிற்கு வர தேவன் தெரிந்து எடுத்த வம்சத் தலைவனாக) காயீன் இடம்பெற முடியாமல் தன் ஆதி மேன்மையை தன் பொறாமையாலும், தன் சகோதரனை கொலை செய்ததாலும் இழந்தான். நாமும் தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்பவர்களாகவும், சகோதர சிநேகத்தில் நிலைத்திருப்பவர்களாகவும் காணப்படுவோம்.
நான்காவதாக
ஆதியாகமம் 13:12, 13ல் பார்க்கும்போது ஆபிரகாமோடு கானான் தேசத்தை சுதந்தரிக்க லோத்துவும் ஊர் என்ற கல்தேயரின் பட்டணத்தைவிட்டுப் பிரிந்து புறப்பட்டு வந்தான். ஆனால் வழியில் மந்தை மேய்ப்பவர்களுக்கு இடையே பிரச்சனை வரவே, தேவ தரிசனம் பெற்று அழைக்கப்பட்டு வந்த ஆபிரகாமைவிட்டுப் பிரிந்து சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான். சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும், கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள். உலகத்தார் மத்தியில் தேவனுடைய பிள்ளைகளின் தொடர்பு ஐக்கியம் இல்லாமல் வாழ்ந்தால் லோத்தைப் போல நிலைமை பரிதாபமாக முடிவடையும். லோத்து மாம்ச சிந்தைக்கு இடம் கொடுத்து ஆபிரகாமை விட்டுப் பிரிந்து அவன் தெரிந்தெடுத்த இடம் – தேவ கோபாக்கினைக்கு என்று தேவனால் நியமிக்கப்பட்ட பட்டணம். அந்த சோதோமுக்கு வரும் தேவ கோபாக்கினையை அறியாமல் அந்தப் பட்டணத்திலே ஆஸ்திகளையும், தன் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளைகளையும் தேடினான். பட்டணத்து வாசலில் மூப்பருடன் உட்கார்ந்து நியாயங்களைப் பேசி மதிப்புள்ள மனிதனாக தன்னை மாற்றிக்கொண்டான். ஆனால் பிரியமானவர்களே! லோத்தின் நிலை பரிதாபம். உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை.
தேவமனிதனான ஆபிரகாமின் பரிந்துபேசும் ஜெபத்தால், லோத்து கோபாக்கினையிலிருந்து தப்ப, தேவ தூதர்கள் அனுப்பப்பட்டனர். தேவ தூதர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், எச்சரித்தும் லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆனாள். தேவ எச்சரிப்பைப் பெற்று மலைக்கு ஓடிப்போகாமல் சோவாருக்குப் போய் – லோத்து சாப சந்ததியைப் பெற்றான். பத்து தலைமுறைகள் அவன் சந்ததி தேவாலயத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை. லோத்து வாதிக்கப்பட்ட நீதிமானாக அக்கினிக்குத் தப்புவிக்கப்பட்ட கொள்ளிக்கட்டை போல காணப்பட்டான். ஏன் இந்த நிலைமை? தேவனோடும், தேவனால் அழைக்கப்பட்ட தேவ மனிதனிடம் உள்ள ஐக்கியத்தை துண்டித்துக்கொண்டு உலகப்பிரகாரமான காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் கானானின் பங்கு அவனுக்கு கிடைக்கவில்லை.
ஐந்தாவதாக
1சாமு.31:4 வசனத்தில் “…சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்”. தேவனால் இஸ்ரவேலின் முதல் அரசனாக அபிஷேகம் பண்ணப்பட்டும், ஏன் இப்படிப்பட்ட தற்கொலை மரணம்? தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீதின் மேல் சவுல் பொறாமை கொண்டு அவனைக் கொலைசெய்ய வகை தேடினான். தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு அபிஷேகம் பண்ணப்பட்டவனை பகைத்தால் பரிதாபமான முடிவு ஏற்படும். நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். “Touch not the anointed person”. சவுல் தன் ஆதிமேன்மையை இழந்து ஒரு புறஜாதி மனிதனைப் போல பரிதாபமாக செத்தான்.
ஆறாவதாக
ஆதியாகமம் 25:28,33,34 வசனங்களில் ஏசாவைப் பற்றி பார்க்கிறோம். ‘ஏசா தன் சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியம் பண்ணினான்’. ஈசாக்கின் மூத்தக் குமாரனாக பிறப்பின்படி வாக்குத்தத்தமுள்ள தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததியின் தலைவனாக இருந்தான். தன் அலட்சியத்தாலும், ஒருவேளை கூழ் சாப்பாட்டிற்காக பெரிய பாக்கியத்தை உதாசீனப்படுத்தி விட்டான். ஏசா தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்டதால், அவன் தம்பி யாக்கோபு வம்சத்தில் இயேசு தோன்றினார். அற்பமான உலக வாழ்க்கைக்காக இயேசுவை இழந்துவிடக் கூடாது. மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டுவிடக் கூடாது. தேவன் நமக்கென்று ஆயத்தம் பண்ணும் பரம இராஜ்ஜியத்தை நிலையற்ற அற்பமான உலகத்தின் செல்வத்திற்காக ஏசாவைப் போல இழந்துவிடாதேயுங்கள். ஒருமுறை தேவன் தந்த இரட்சிப்பை நஷ்டப்படுத்தினால் திரும்ப பெறுவது கூடாத காரியம்.
ஏழாவதாக
மாற்கு 14:44,45 வசனங்களில் யூதாஸ்காரியோத்து இயேசுவினால் அப்போஸ்தலனாக அழைக்கப்பட்டிருந்தும் பொருளாசையாலும், தவறான நட்பாலும் தன் எஜமானனையே காட்டிக்கொடுத்தான். தன் அப்போஸ்தல பட்டத்தை இழந்தான். அவன் இயேசுவைக் காட்டிக்கொடுக்க, தாம் பெற்ற 30 வெள்ளிக் காசையும் தேவாலயத்தில் எறிந்துவிட்டு சமாதானத்தை இழந்தவனாய் நான்றுகொண்டு குடல் சரிந்து செத்தான். பொருளாசையால் சம்பாதித்த பணத்தை அனுபவிக்க முடியவில்லை. சிலர் பொருளாசையால் பணத்தை சேர்த்து குவித்து வைக்கிறார்கள். யார் அதை வாரிக்கொள்வார் என்று அறியாமல் உள்ளனர்? பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்க ஆயுளைப் பெறுவான். யூதாஸ் தன் ஆதி மேன்மையை இழந்து நஷ்டப்பட்டான். மத்தியாஸ் அவன் ஸ்தானத்தில் அப்போஸ்தலனாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேவனுக்கு உத்தம சாட்சியாக வாழ்ந்து மரித்தார்.
இதை வாசிக்கும் தேவனுடைய பிள்ளைகளே தேவன் தங்களுக்குக் கொடுத்த மேன்மையான ஸ்தானத்தையும் அழைப்பையும் இழந்து அதை காத்துக்கொள்ளாமல் நஷ்டப்பட்ட சிலரைக் குறித்து நாம் பார்த்தோம். தேவன் உனக்குக்கொடுத்த மேன்மையான அழைப்பை எந்த காரியத்துக்காகவும் நஷ்டப்படுத்தாதே! ‘உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு, கொஞ்சத்தில் நீ உண்மையாக காணப்பட்டால் உன்னை பரலோகத்தில் தூதர்களுக்கு முன்பாக மேன்மைப்படுத்துவார்’. தேவன் தாமே உங்களை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி அழைத்த அழைப்பில் நிலைநிறுத்துவாராக!
ஆமென்! அல்லேலூயா!