உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்

Written by Pr Thomas Walker

February 4, 2022

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவப் பிள்ளைகளே!    

புதிய ஆண்டில் பிரவேசித்துள்ள உங்களை ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன்.

“…உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்” என்று தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்குக் கொடுப்பதை யாத்.34:24ல் பார்க்கிறோம். தேவன் நமது எல்லைகள் விஸ்தாரமாக்கப்படுவதை விரும்புகிறார். தேவ வார்த்தைகள் எல்லாம் ஆம் என்றும், ஆமென் என்றும் உள்ளது. நாம் தேவனுடைய வார்த்தைகளை விசுவாசிக்கும்போது அவர் நமது எல்லைகளை விஸ்தாரமாக்குகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் நெருக்கத்திலி ருந்தார்கள். தேவன் அவர்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கி அவர்களுக்கு பாலும் தேனும் ஓடுகிற தேசத்தைக் கொடுத்தார். ஊழியப் பாதையிலும் கால் மிதிக்கும் தேசத்தை நமக்குக் கொடுத்து நமது எல்லைகளை விஸ்தாரமாக்க தேவன் போதுமானவராக இருக்கிறார்.

தேவன் இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் “உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்”. தேவன் விஸ்தாரமாக்கும் எல்லைகளை ஆராய்ந்து பார்ப்போம்.

முதலாவதாக நமது ஜெபத்தின் எல்லைகள் விஸ்தாரமாக வேண்டும்

நம்மில் அநேகர் நமக்காகவும், நமது குடும்ப நன்மைகளுக்காகவும் மட்டுமே ஜெபிக்கிறவர்களாக இருக்கிறோம். ஆனால், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பம் பண்ணவேண்டியது நமது கடமையாயிருக்கிறது (1தீமோ.2:1,2). இராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஜெபிக்க வேண்டும். தேசத்தின் ஷேமத்திற்காக மன்றாட வேண்டும். அறியாமை இருளில் இருக்கும் ஜனங்கள் மெய்யான ஒளியைக் கண்டுகொள்ள ஜெபிக்க வேண்டும். ஜெபத்தில் போராடி ஜெபிக்க வேண்டும். அழுது ஜெபிக்க வேண்டும். நம்மைத் துன்பப்படுத்து கிறவர்களுக்காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும் (மத்.5:44). இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும் (1தெச.5:17). எந்த சமயத்திலும் ஜெபம் பண்ண வேண்டும் (எபே.6:18). விழித்திருந்து ஜெபிக்க வேண்டும் (மத்.26:41). ஜெபத்திற்கென்று நமது நேரத்தில் தசமபாகம் எடுக்க வேண்டும். இந்த புதிய ஆண்டில் நமது ஜெபத்தின் எல்லைகள் விஸ்தாரமாகட்டும்.

இரண்டாவதாகவிசுவாசத்தின் எல்லை விஸ்தாரமாக வேண்டும்

தேவனுடைய வார்த்தையை விசுவாசித்த ஆபிரகாம் போகும் இடம் இன்னதென்று அறியாமல், தான் இருந்த தேசத்தைவிட்டு புறப்பட்டுச் சென்றான். அதனால் அவன் ஆசீர்வதிக்கப்பட்டான் (எபி.11:8). ஆபிரகாமும் அவனது மனைவியாகிய சாராளும் தேவனை விசுவாசித்த படியால் நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும் வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றார்கள் (எபி.11:11). தகனபலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தான் (எபி.11:11). இதனால் ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டான். எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில் விசுவாச வீரர்களின் பட்டியலைப் பார்க்கிறோம். அவர்களது விசுவாசத்தை முன்வைத்து நமக்கு நியமிக்கப்பட்ட விசுவாச பாதையில் பொறுமையோடு ஓடுவோமாக! தேவனே நமது பரிகாரி; அவரே நமது இரட்சகர்; அவரே நம்மை போஷிக்கிறவர்; அவரே நம்மை உடுத்துவிக்கிறவர்; அவரே நமது தேவைகள் அனைத்தையும் சந்திப்பவர் என்று விசுவாசிக்க வேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும். இந்த புதிய ஆண்டில் நாமும் நமது விசுவாசத்தின் எல்லையை பெரிதாக்குவோமாக.

மூன்றாவதாகஅன்பின் எல்லை விஸ்தாரமாக வேண்டும்

தேவனிடத்தில் அன்புகூருவதில் நமது எல்லைகள் விஸ்தாரமாக வேண்டும். பிறரை நேசிப்பதிலும் நமது எல்லைகள் விஸ்தாரமாக வேண்டும். நமது குடும்பத் தாரையும், இனஜன பந்துக்களையும், நமது ஜாதிக்காரரையும் மட்டுமல்லாது, நம்மை துன்பப்படுத்துகிறவர்க ளையும், நமது சத்துருக் களையும், நம்மை சபிக்கிறவர்களையும், நம்மைப் பகைக்கிறவர்களையும் நேசிக்க வேண்டும் (மத்.5:44). நாம் பாவிகளாயிருக்கையில், இயேசு நம்மேல் அன்பு கூர்ந்தாரே. இந்தப் புதிய ஆண்டில் நமது அன்பின் எல்லைகள் விரிவாகட்டும்.

நான்காவதாகபொறுமையின் எல்லை விஸ்தாரமாக வேண்டும்

ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுக்கப்பட்டபோது அவனது வயது எழுபத்தி ஐந்து. வாக்குத்தத்தத்தை அடைய இருபத் தைந்து ஆண்டுகள் பொறுமையோடு காத்திருந்தான். நூறாவது வயதில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கைப் பெற்றான். யோபு பொறுமையோடு காத்திருந்த படியால் திரும்பப் பெற்றுக்கொண்டான். தேவ சமூகத்தில் பொறுத்திருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களே நிலையானவை. பொறுமை இழந்த சாராள் ஆகாரின் மூலம் பெற்ற குமாரனை தன் மடியில் வைத்து வளர்த்தாலும், அந்த இன்பம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இஸ்மவேல் சாராளுக்கு வேதனையாக மாறினான். பொறுமையின்றி குறுக்கு வழியில் பெறும் ஆசீர்வாதங்கள் நிலைத்து நிற்காது. யோசேப்பு பொறுமையா யிருந்தபடியால் உயர்த்தப்பட்டான். இந்த புதிய ஆண்டில் நமது பொறுமையின் எல்லை விஸ்தாரமாகட்டும்.

ஐந்தாவதாகநற்கிரியைகளின் எல்லை விஸ்தாரமாக வேண்டும்

நற்கிரியைகள் செய்யவே நாம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம் (எபே.2:10). மனுஷர் நமது நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்தின் தேவனை மகிமைப் படுத்தும்படி நமது நற்கிரியைகளின் எல்லை விஸ்தாரமாகட்டும் (மத்.5:16). நமது பாரத தேசத்தில் வந்த மிஷனரிகள் ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடங்கள் அமைத்து அவர்களுக்கு கல்வி அறிவை ஊட்டுதல், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, அவர்களுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொடுத்தல், மருத்து வமனைகள் நிறுவி மக்களுக்கு சேவை செய்தல், நாகரீகமாக வாழ கற்றுக்கொடுத்தல் போன்ற பல நற்கிரி யைகளைச் செய்தனர். நமது நற்கிரியைகள் தேவராஜ்யம் பரவுவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும். தொற்காளின் வாழ்க்கையில் அவளது நற்கிரியைகளே தேவ மகிமை வெளிப்பட காரணமாயிருந்தது. இந்தப் புதிய ஆண்டில் நமது நற்கிரியைகளின் எல்லை விஸ்தாரமாகட்டும்.

ஆறாவதாககீழ்ப்படிதலின் எல்லை விஸ்தாரமாக வேண்டும்

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் என்று 1சாமு.15:22ல் பார்க்கிறோம். ஆவியானவர் நம்மோடு இடைபடும்போது நாம் அவருடைய சத்தத்துக்கு கீழ்ப்படிய வேண்டும். எவ்வளவாய் கீழ்ப்படிகிறோமோ அவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட முடியும். ஜெபம் பண்ண அதிகாலையில் எழும்ப முடியாத பகுதிகள், ஆவியானவரின் சத்தத்துக்கு கீழ்ப்படிய முடியாத பகுதிகளில் நாம் ஜெயம்பெற வேண்டும். கீழ்ப்படியாதவர்களிடமே ஆகாயத்து அதிகாரப் பிரபு கிரியை செய்கிறான். எனவே இந்தப் புதிய ஆண்டில் நமது கீழ்ப்படிதலின் எல்லை விஸ்தாரமாகட்டும்.

ஏழாவதாககூடாரத்தின் (ஊழியத்தின்) எல்லை விஸ்தாரமாக வேண்டும்

“உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; ….நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்” என்று ஏசாயா 54:2,3 வசனங்களில் பார்க்கிறோம். இந்த வருடத்தில் நமது ஊழியத்தின் எல்லைகள் விஸ்தாரமாக வேண்டும். ஊழியம் கொள்ளுகிறவர்களாய் அல்ல, ஊழியம் செய்கிறவர்களாய் மாற வேண்டும்.

ஆண்டவருக்காக பெரிய காரியங்களை செய்ய முற்படுவோம். ஆண்டவர் புதிய காரியங்களைச் செய்து நமது ஊழிய எல்லைகளை விஸ்தாரமாக்குவாராக.

தேவன் தாமே இந்தப் புதிய ஆண்டில் உங்களை ஆசீர்வதித்து உங்கள் ஆவிக்குரிய மற்றும் சரீரப் பிரகார மான எல்லைகளை விஸ்தாரமாக்கி நம்மைக்கொண்டு தமது இராஜ்யத்தை விரைந்து கட்டுவாராக.






Author

You May Also Like…

Share This