கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
விசுவாசிகளாகிய நாம் சபை வளர்ச்சியடைய வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் சபைக்குள் வருவோரிடம் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது முக்கியம். லூக்கா 15ம் அதிகாரத்தில் காணாமல் போன ஆடு, காணாமல் போன வெள்ளிக் காசு, காணாமல் போன மனிதன் ஆகிய மூன்று உவமைகளையும் அதன் விளக்கங்களையும் இயேசு விவரிக்கிறார். தேவனுக்கு இரு வகையான குமாரர்கள் உண்டு. முதல் வகையான குமாரர்கள் மூத்த குமாரர்கள். இவர்கள் சபைக்குள் இருப்பவர்கள். மற்றொரு வகைக் குமாரர்கள் இளைய குமாரர்கள். இவர்கள் சபைக்கு வெளியே இருப்பவர்கள்; தேவனை விட்டு தூரம் போய் பாவத்தில் ஜீவிப்பவர்கள்; உலகத்தின் பிரதிநிதிகள். தேவனால் கொடுக்கப்பட்ட பரம ஈவுகளை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்.
இயேசு கூறிய உவமையில் நூறு ஆடுகளில் ஒரு ஆடுதான் காணாமல் போய்விட்டது. ஆனால் இன்று சபைக்குள் ஒரு ஆடும், வெளியே தொண்ணூற் றொன்பது ஆடுகளும் காணப்படுகின்றன. ஒரு காணாமல்போன ஆட்டை தேவன் இவ்வளவு கவலை கொண்டு தேடி கண்டுபிடிப்பாரானால், இன்று சபைக்கு வெளியே உள்ள தொண்ணூற்றொன்பது ஆடுகளை எவ்வளவு கவலையாய்த் தேடவேண்டிய அவசியமுள்ளது. நம் தேவன் தொலைந்துபோன ஆட்டை “கண்டு பிடிக்குமளவும்” தேடும் தேவன்.
பரிசேய ஆவி நமக்குக் கூடாது. காணாமற்போன ஆடுகளை மனமுவந்து வரவேற்க வேண்டும். அவர்களை சபைக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும். காணாமல் போன இளைய குமாரனை வீட்டிற்குள் வர தடையாக இருந்த மூத்த குமாரன் போல காணாமற்போன, தேவனைவிட்டுத் தூரம் போன அவருடைய மந்தை சபைக்குள் வர நாம் தடையாக இருக்கக் கூடாது.
யார் இந்த மூத்த குமாரர்? அவர்கள் உழைக்கிற, பாடுபடுகிற, பணிவிடை செய்கிற, கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற, கீழ்ப்படிதலுள்ள, தகப்பனுடன் ஐக்கியமாக தகப்பனுடன் வாழ்ந்த மூத்த குமாரன். ஆனால் அவனுக்கு, தகப்பனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது பாவிகளோடு தன் ஆஸ்திகளை அழித்துப்போட்ட இளைய குமாரனைக் கண்டபோது கோபம் வந்தது; வீட்டிற்குள் நுழையவே எரிச்சல் வந்தது. தகப்பனை வெளியே அழைத்தான்; தகப்பனோடு நியாயம் பேசி வாதாடினான். மன்னிக்கும் சுபாவம் அவனுக்கு இல்லாதிருந்தது. இன்று நாம் தேவனோடு சரியாக இருக்க விரும்புகிறோம். ஆனால் சகோதரனுடன் சரியாக இருக்கக் கூடாமலிருந்தது. உண்மையான சந்தோஷம் காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்துக் கொண்டுவரும்போது தான் வருகிறது (லூக்.15:6). இளைய குமாரர்கள் பாவமாகிய முட்களுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களைத் தேடி கண்டுபிடித்து பரிசுத்தப்படுத்தி மந்தைக்குள் கொண்டுவர வேண்டியது நமது முக்கிய கடமையாக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட மூத்த சகோதரர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை நாம் இங்கு ஆராயலாம்.
1) மூத்த சகோதரர்கள் – காவல் காக்கிறவர்கள்
மூத்த சகோதரர்களாகிய நாம் சபைக்குள் வரும் புதிய சகோதரர்களைக் காக்க வேண்டியது அவசியம். நம் தேவன் உறங்காமல் தூங்காமல் நம்மைக் காக்கும் தேவன். பார்வோனின் கைக்குத் தப்ப நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியில் விடப்பட்ட மோசேயை அவன் மூத்த சகோதரியாகிய மிரியாம் காவல் காத்தாள் (யாத்.2:3,4). சத்துருவின் கையில் விழாதபடி நம்மு டைய சகோதரர்களைக் காவல் காப்பது மூத்த சகோதரர் களாகிய நம் ஒவ்வொருவர் மேலும் விழுந்த கடமை.
2) மூத்த சகோதரர்கள் – விட்டுக்கொடுப்பவர்கள்
ஆபிரகாமின் மேய்ப்பருக்கும் லோத்துவின் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வந்தபோது செழிப்பான இடத்தை ஆபிரகாம் லோத்துவிற்கு விட்டுக்கொடுத்தான் (ஆதி.13:8,9,10). அதனால் தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்தார். நாம் நமது சகோதரர்களை மந்தைக்குள் சேர்க்க அவர்களுக்காக நமது நேரத்தை, நமது குல கோத்திரப் பெருமைகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.
3) மூத்த சகோதரர்கள் – சிறை மீட்கிறவர்கள்
லோத்தும் அவனது குடும்பமும் அவனது ஆஸ்திகளோடு கூட சிறைபிடித்துக் கொண்டுபோகப் பட்டனர். ஆபிரகாம் அவர்களை சிறை மீட்டான். பாவ சிறைகளில் அடைபட்டவர்களை மூத்த சகோதரர்களாகிய நாம் மீட்க வேண்டும். கடனுக்கோ, குடிப்பழக்க வழக்கத்துக்கோ, போதை வஸ்துகளுக்கோ அடிமையானவர்களை நாம் சிறை மீட்க வேண்டும்.
4) மூத்த சகோதரர்கள் – திறப்பின் வாசலில் நிற்பவர்கள்
சோதோம் கொமோராவை தேவன் அழிக்க சித்தங்கொண்டபோது, ஆபிரகாம் தன் சகோதரனா கிய லோத்துவின் பாதுகாப்பிற்காக திறப்பில் நின்று மன்றாடினான். அதுபோல நரக ஆக்கினைக்குத் தப்பும்படி காணாமற்போன, பாவத்தில் ஜீவிக்கும் நம் ஒவ்வொரு சகோதரனுக் காகவும் மன்றாடுவது அவசியம். நம்முடைய தேசம் தேவனை அறிகிற அறிவினால் நிரப்பப்பட நாம் மன்றாட வேண்டியது நம்மேல் விழுந்த கடமை. உயிரோடிருக்கிறவர்களுக்கும் செத்தவர் களுக்கும் நடுவே நின்று மன்றாடிய மோசேயைப் போல நாம் திறப்பில் நின்று மன்றாட வேண்டும்.
5) மூத்த சகோதரர்கள் – ஏற்ற வேளையில் தகுந்த ஆலோசனை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் (ஆதி.37:21,22)
சமயத்திற்கு ஏற்ற தகுதியான ஆலோசனை கொடுப்ப வர்களே மூத்த சகோதரர்கள். மூத்த சகோதரனாகிய ரூபன் தன் சகோதரனாகிய யோசேப்பை தப்புவிக்கும் நோக்கத் துடன் தன் மற்ற சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்கினான். இன்று கஷ்டத்தாலும், கண்ணீரிலும், கடனிலும் பலவிதமான பிரச்சனைகளிலும் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருப்பவர்களை மீட்க ஆலோசனை கொடுத்து அவர்களை நேர் வழியில் நடக்கச்செய்வது நமது கடமை.
6) மூத்த சகோதரர்கள் – மற்றவர்களுக்கு பிணையாளியாக நிற்பவர்கள் (ஆதி.44:33,34)
யூதா தன் சகோதரனுக்குப் பிணையாளியாக சிறையில் அடைக்கப்பட தயாராக இருந்தான். மற்றவர்கள் கஷ்டங்களை உணர்ந்து அந்த இடத்தில் தன்னை வைத்து பார்ப்பவர்களே மூத்த சகோதரர்கள். இவர்கள் மற்றவர்களுக்காக பிணைபடுவதால் உண்டாகும் கஷ்டங்களை தாங்கும் வலிமை கொண்டவர்கள்.
7) மூத்த சகோதரர்கள் – சகோதரர்களுக்காக பொங்கும் இருதயம் கொண்டவர்கள்
மனதுருக்கம், மற்றவர்களுக்காக பரிதவிக்கும் சுபாவம் கொண்டவர்களே மூத்த சகோதரர்கள். மத்.9:36ல் “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்” என்று பார்க்கிறோம்.
நமது மூத்த சகோதரனாகிய இயேசு கிறிஸ்துவும் மனதுருக்கமுள்ளவராயிருந்து அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி பிதாவிடம் பரிந்து பேசுகிறார். (மத்.9:36,37)
இன்றும் நாம் நம்முடைய தேசத்திற்காய் பரிந்து பேசுகி றவர்களாய் இருக்க வேண்டும். தேசத்தின் எழுப்புத லுக்காய் கண்ணீர் வடிக்கிறவர்களாய் இருக்க வேண்டும். காணாமல் போய் திசைகெட்டு அலையும் ஆடுகளை திசை திருப்பவும் மூத்த சகோதரர்களை தேவன் எதிர்பார்க்கிறார். இவர்கள் மூலமாகவே நம் இந்திய திருச்சபைகள், வளர்ச்சியடைய முடியும். நம் பாரத தேசம் தேவனை அறிகிற அறிவில் வளர முடியும்.