உலகப் பொருள்களால் சிநேகிதரை சம்பாதியுங்கள்

நான் என்னுடைய அலுவலக பணியினிமித்தம் கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்குச் செல்வது வழக்கம். பொதுவாக “இலங்கை விமான சேவை” மூலம் செல்வதுண்டு. கடந்த மாதம் வழக்கத்திற்கு மாறாக “இந்திய விமான சேவை” விமானம் மூலம் சென்றிருந்தேன். திரும்ப வரும்போது, மத்தியானவேளை கிளம்பும் விமானம் மூலம் வர வேண்டியதாயிருந்தது.
நான் விமான நிலையத்தை அடைந்தபோது, அநேகர் அந்த விமானத்திற்காக காத்திருப்பதைக் கண்டேன். அதில் அநேகர் என்னைக் கண்டவுடன் புன்முறுவல் பூத்தனர். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் அவர்களாகவே வந்து, என்னுடைய தொழில், குடும்பம் பற்றி விசாரித்தனர். இவைகளெல்லாம் எனக்கு புதுமையாகவே இருந்தது.


ஒரு பெண் தன்னுடைய கணவருடன் வந்திருந்தாள். தான் கொழும்பு நகரிலே, சிகை அலங்கார மையம் வைத்திருப்பதாகவும், அதற்குத் தேவையான பொருட்களை வாங்க சென்னை செல்வதாகவும் கூறினாள். மேலும் அவள் வாரம் ஒருமுறை சென்னைக்கும், மும்பைக்கும் சென்று, சிகை அலங்கார பொருட்களையும், திருமண உடை அலங்கார பொருட்களையும் வாங்கி தன்னடைய வாடிக்கையாளருக்கு கொடுப்பதாக நான் கேட்காமல் அவளாகவே கூறிக்கொண்டிருந்தாள்.
மேலும் அவள் என்னிடம் மெதுவாக, இலங்கையில் சிறந்த மதுபானங்கள் குறைந்த விலையில், விமான நிலையத்தில், வரியில்லாமல் கிடைக்குமே, நீங்கள் வாங்கவில்லையா? எனக் கேட்டாள்.
நான் அவளிடம், நான் விற்பனைத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் ஓட்டல்களில் தங்குகிறேன். மேலும் அந்நாட்களில் என்னுடைய அலுவலக வாடிக்கையாளர்களுடன் இரவு விருந்து அருந்துவது வழக்கம். ஆனால் ஒருமுறைக்கூட மதுபான கிண்ணத்தைத் தொட்டதுக்கூட இல்லை எனக் கூறினேன். உடனே அவள் சிரித்துக்கொண்டு, எழுந்து வேறு ஒரு குடும்பத்தாருடன் பேசும்படி சென்றுவிட்டாள்.
அவள் அந்தக் குடும்பத்தாருடன் பேசி, அவர்களை சம்மதிக்கச் செய்து, சில மதுபான பாட்டில்களை வாங்கிக்கொண்டு வந்து, அவர்களிடம் கொடுத்து, சென்னை வரை எடுத்து வரச் செய்துவிட்டாள்.
நான் இதைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, மேலும் சிலர் இவ்வாறாக, குறைந்த சாமான்களுடன் பயணிப்பவர்களை சந்தித்து, தங்களுடைய இரண்டு “மதுபான பாட்டில்களை” எடுத்துவர கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தனர். இவர்களில் சிலர், “இரண்டு பாட்டில்கள்” கொண்டு வந்தால் ரூ.500/- கொடுப்பதாகவும் கூறி இனிமையாகப் பேசி பலரை வசப்படுத்தி வந்தனர்.


எனக்கு இவைகளெல்லாம் புதுமையாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. நான் இதைக் கவனித்தபோது, சாதாரண, சிறிய அநித்திய உலக சம்பாத்தியத்திற்கு, இந்த மனிதர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளை யோசித்துப் பார்த்தேன்… தங்களுடைய முயற்சி வெற்றி பெற, முன்பின் அறியா அந்நியருக்கு வந்தனம் சொல்லுகிறார்கள். இனிமையாகப் பேசுகிறார்கள். திண்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்துகிறார்கள். பணத்தைக் கொடுத்தாகிலும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள்.
உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும், ஈடில்லா, முடிவில்லா நித்திய வாழ்வினை அனைவருக்கும் காண்பிக்க அழைக்கப்பட்ட நாமோ, உலகிற்கு வெளிச்சம் கொடுக்க மறந்து, சோர்ந்துபோய் தூங்கி விடுகிறோம். சிலருக்கு தங்கள் விளக்கு அணைந்து போனது கூடத் தெரிவதில்லை.
அழிந்துபோகும் உலகப் பொருட்கள், தாலந்துகள், திறமைகள் அனைத்தையும் ஆண்டவருக்காக செலவு செய்வோம். நித்திய வீட்டிலே, திரள் கூட்டமான ஆத்துமாக்களுடன் பரமனை சந்திப்போம்!! மாரநாதா, இயேசு சீக்கிரம் வருகிறார்.


“நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (லூக்.16:9)



Author

You May Also Like…

Share This