அமெரிக்காவிலுள்ள ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் முதல்வரைப் பார்ப்பதற்காக சாயந்தீர்ந்த உடையணிந்த ஒரு பெண்மணியும், மிகவும் பழமையான உடையணிந்த அவளது கணவரும் முன் அனுமதியின்றி முதல்வரது அறைக்குள் நுழைய முயன்றனர். அந்த அலுவலகத்தின் காரியதரிசி முகத்தை சுளித்தவாறு கடுங்கோபத்துடன் “எங்கள் முதல்வர் எப்பொழுதும் அலுவலாயிருப்பார்” என்று கடிந்துரைத்தார். அந்தத் தம்பதியினரோ அமைதலோடு, “நாங்கள் அவருக்காக காத்திருக்கிறோம்” என்றனர்.
காரியதரிசி அவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள் என்று நினைத்து பல மணி நேரம் காக்க வைத்தான். ஆனால் அவர்களோ திரும்பிப் போகாமல் பொறுமையோடு காத்திருந்தனர். இறுதியில் காரியதரிசி அவர்களை முதல்வரைப் பார்க்க அனுமதித்தான். கந்தைக் கோலத்திலிருந்தவர்களைப் பார்த்த முதல்வர் வியப்பிலாழ்ந்தார். அந்தப் பெண்மணி தன் பேச்சை ஆரம்பித்தாள், “என்னுடைய மகன் இந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு வருடத்திற்கு முன்பு, ஒரு விபத்தில் மரித்துப்போனான். அவன் கல்லூரி நாட்களில் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தான். அதனால் நானும் எனது கணவரும் அவனது நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை கல்லூரி வளாகத்தில் வைக்க விரும்புகிறோம்” என்றாள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதல்வர், இங்கு படித்து மரித்துப்போன ஒவ்வொரு மாணவனுக்கும் நினைவுச்சின்னம் அமைப்போமானால், இக்கல்லூரி வளாகம் கல்லறைத் தோட்டத்தைப் போலக் காட்சியளிக்குமே! என்றார். முதல்வரின் வார்த்தைகளை இடைமறித்த அப்பெண், “இல்லை! இல்லை! நான் எங்கள் மகனின் நினைவாக ஒரு கட்டிடம் கட்டித்தரலாம் என நினைக்கிறோம்” என்றாள்.
ஒரு கட்டிடமா! என வியப்பிலாழ்ந்த முதல்வர், கந்தைக் கோலத்திலிருந்த அவர்களைப் பார்த்துவிட்டு, ஒரு கட்டிடம் கட்டுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (50 கோடி ரூபாய்) ஆகுமே என்றார். அப்பெண் அமைதியானாள். அவர்களை விரட்டிவிட நல்ல வாய்ப்பு என முதல்வர் கருதினார்.அந்தப் பெண் தன் கணவனைப் பார்த்து, “ஒரு கட்டிடம் கட்ட இவ்வளவுதான் செலவாகும் என்பதனால் நாமே ஏன் ஒரு கல்லூரியை ஆரம்பிக்கக் கூடாது” என்றாள். அவளது கணவரும் சரியென தலையசைத்தார்.
அந்தத் தம்பதியினர் தான் லேலாண்ட் ஸ்டான்போர்ட் தம்பதியினர். இவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று கலிபோர்னியா சென்றடைந்து நிறுவிய கல்லூரியே இன்றைய உலகப் புகழ்பெற்ற ஸ்டன்போர்டு பல்கலைக்கழகம்.
“மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” (1சாமு.16:7)
பிரியமான தேவப் பிள்ளைகளே உங்களைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களைச் செய்ய வல்லவர்.