குடும்பநலக் கோர்ட்டில் வக்கீலாகப் பணியாற்றும் நடுத்தர வயதைக் கடந்த பெரியவரோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொல்லும்போது, வயது 21 இருக்கும். அழகிய உடை, பகட்டான நகை, கைகளில் வளையலோடு கலகலப்பாய், சிங்காரப் பெண்ணாய் என் அலுவலகத்திற்கு வந்திருந்தாள். ஏதோ ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க என்னை அழைக்க வந்திருப்பாள் என்றெண்ணி “வாம்மா” என்றேன்.
என் பெயரைச் சொல்லி நீங்க தானே அந்த வக்கீல் என்றாள். “ஆமாம்” என்றேன். அங்கிள் எனக்கு என் கணவரிடமிருந்து விவாகரத்து வேணும், எந்த காரணத்தைச் சொல்லி கோர்ட்டில் கேஸ் போட்டால் விவாகரத்து உடனே கிடைக்குமோ அதைச் சொல்லி வாங்கிக் கொடுங்கள் என்று வெகுளியாய் கேட்டாள். என் மகளை விட மிகக்குறைந்த வயதுடைய அவள் பேசுவதைக் கேட்டு, என் கண்களில் கண்ணீர் வந்தது.
சுதாரித்துக்கொண்டு, “அம்மா, உனக்கு என்ன பிரச்சினை? உம் புருஷன் கொடுமைப்படுத்துறானா” என்றதற்கு, அதெல்லாம் ஒன்னுமில்ல அங்கிள் எனக்கும் என் ழரளயெனே-க்கும் எதிலேயும் ஒத்துப்போக மாட்டேங்குது, சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணிதான் இங்க வந்திருக்கேன். கல்யாணம் முடிஞ்சி எவ்வளவு வருஷம் ஆச்சி என்றதற்கு மூன்று மாதம் என்றாள். எனக்குத் தலையே சுற்றிவிட்டது என்றார்.
குறைந்தபட்சம் ஆயிரம் கிலோமீட்டர் ஓடினால்தானே புதிய பைக்கின் என்ஜின் கூட செட்டாகிறது. அப்படியிருக்க வேறுபட்ட சூழ்நிலையில் பிறந்து, வளர்ந்த இரு மனங்கள் செட்டாகி இணைவதற்கு சில ஆண்டுகள் எடுப்பதில் தவறென்ன!
மத்திய கிழக்கு நாடுகளில் இருவர் உடன்படிக்கை செய்யும்போது ஒரு மிருகத்தை இரண்டாகப் பிளந்து, அந்த சடலத்தின் நடுவே இருவரும் கடந்துசெல்வார்களாம்! அதாவது கொலைசெய்யப்பட்ட அந்த மிருகத்தின் இரத்தத்தின் முன்னிலையில் உடன்படிக்கை செய்திருக்கிறோம். இருவரும் அதை மீறக்கூடாது என்பதாய் அர்த்தம்.
உண்மையில் திருமணப் பந்தத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இயேசு கிறிஸ்துவின் (இரத்தத்தின்) முன்னிலையில் உடன்படிக்கை செய்து இணைகிறார்கள். ஆம்! தேவனே அந்தத் திருமணத்திற்கு சாட்சி! எனவே, வாழ்க்கைத் துணையைத் தேடும்போதே, தேவனே உம்முடைய சித்தத்தின்படி, நீர் விரும்புகிற வரனைத் தாரும் என்று தேவனுடைய பாதத்தில் விழுந்துகிடந்து, துணையைக் கண்டடையும்போது தேவனே அந்தத் திருமண உறவை உறுதிப் படுத்திவிடுவார்.
ஆம்! இப்போது கணவன், மனைவியோடு தேவனும் அந்தக் குடும்பத்தில் ஐக்கியமாகிவிடுவதால், முப்புரி நூல் அறுந்துபோகாதல்லவோ! “கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே” (மல்கியா 2:14)