பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! எல்லா மதங்களும் தேவனை உயர்ந்த இடத்திலும் மனிதனை தாழ்ந்த இடத்திலும் வைத்து சித்தரிக்கின்றன. ஆனால் நாம் வானத்தையும், பூமியையும் படைத்த நம் தேவனுக்குப் பங்காளிகளாயிருக்கிறோம் என்பது எத்தனை ஆச்சரியமான செய்தி. நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவு, அது தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவு, அது இரு சிநேகிதருக்கிடையேயுள்ள உறவு. பங்காளிகள் என்றால் உத்தரவாதிகள் என்று பொருள்படும். தேவன் தமது பரலோக ராஜ்ஜியத்தின் சுதந்தரவாளியாக நம்மை மாற்றுகிறார். நாம் அவருக்குப் பங்காளிகளாக இருப்பதால் அவரது ஆளுகையையும் சுதந்தரத்தையும் நமக்குத் தர விரும்புகிறார்.
நாம் எவற்றுக்குப் பங்குள்ளவர்களாயிருக்கிறோம் என்பதை இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக நாம் பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாயிருக்கிறோம் (எபி.3:1)
தேவன் நமக்குக் கொடுத்த அழைப்பு பரம அழைப்பு. பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்று பவுல் கூறுகிறார் (பிலி.3:14).
தேவன் தான் முன்குறித்தோரை அழைத்திருக்கிறார் (ரோமர் 8:30). நம்மைப் பரிசுத்தவான்களாகும்படி அழைத்திருக்கிறார் (1கொரி.1:2) சமாதானமாயிருக்கும்படி அழைத்திருக்கிறார் (1கொரி.7:15). இந்த உலகத்தில் வாழ்ந்தபோது லாசரு உலகத்தால் வெறுக்கப்பட்டு, தனித்து விடப்பட்டவனாயிருந்தான். நாய்கள்தான் அவனது தோழர்கள். ஆனால் லாசரு பரம அழைப்பைப் பெற்றவனாயிருந்தபடியால் அவன் மரித்தபோது ஆபிரகாமின் மடியில் உட்கார்ந்தான். ஐசுவரியவானுக்கோ உலகின் பல அழைப்புகள் இருந்தாலும் தேவனின் பரம அழைப்பு இல்லாததால் நரகத்துக்குப் போய் சேர்ந்தான். தேவன் நம்மைப் பரம அழைப்புக்கு பங்காளியாக அழைக்கிறார். உலக அழைப்புகளைத் தள்ளிவிட்டு அவரது பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாவோமாக.
இரண்டாவதாக – தேவ கிருபைக்குப் பங்குள்ளவர்களாயிருக்கிறோம் (பிலி.1:7)
நமது தேவன் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர். தகுதியில்லாத மனிதனுக்கு தேவனால் அளிக்கப்படும் ஒரு பெரிய பரிசுதான் “கிருபை” ஆகும். தகுதியில்லாத நம்மேல் தேவகிருபை ஊற்றப்படுகிறது. தேவகிருபை இல்லாவிட்டால் மகிமை நம்மைவிட்டு எடுபடும். இரக்கம் பெற, மனித தயவு பெற தேவ கிருபையே தேவை.
நம்மைத் தாழ்த்தும்போது தேவ கிருபை நம்மீது ஊற்றப்படுகிறது. மாயையைப் பற்றிக்கொள்ளும்போது தேவ கிருபையை இழந்துபோகிறோம். கிருபை இல்லாவிட்டால் நாம் உட்கொள்ளும் ஆகாரமும் பயனற்றதாகவே இருக்கும். பரம அழைப்புக்கு மட்டுமல்ல, தேவ கிருபைக்கும் நாம் பங்குள்ளவர்களாக மாறவேண்டும்.
கர்த்தரை நம்புகிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும் (சங்.32:10) என்றும் ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது என்றும் தாவீது பாடுகிறான் (சங்.63:3).
மூன்றாவதாக – தேவ வாக்குத்தத்தங்களுக்கு உடன் பங்காளிகளாயிருக்கிறோம் (எபே.3:3)
தேவனுடைய அழைப்புக்கு பங்காளிகளாகிறபோது, தேவன் வாக்குத்தத்தங்களை நமக்குத் தந்து அவைகளை நாம் அனுபவிக்க பங்காளிகளாக்குகிறார். தேவன் நமக்கு அநேக வாக்குத்தத்தங்களை தந்திருக்கிறார். அவற்றை நிறைவேற்ற வல்லமையுள்ளவராயிருக்கிறார். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் தலைமுறை தலைமுறையாக ஒழிந்துபோவதில்லை (சங்.77:8). தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லமையுள்ளவராயிருக்கிறார் (ரோமர் 4:21) தேவனுடைய வாக்குத்தத்தங்க ளெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறது (2கொரி.1:20). தேவன் நமக்கு நித்திய ஜீவனை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் (தீத்து 1:3). வாக்குத்தத்தம் பண்ணினதில் உண்மையுள்ளவர். தமது வாக்குத்தத்தங்களுக்கு உடன் பங்காளிகளாகும்படி நம்மை அழைக்கிறார்.
நான்காவதாக – ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் பங்குள்ளவர்களாயிருக்கிறோம் (ரோமர் 11:17)
மாமரங்களை ஒட்டவைக்கும்போது ஒட்ட வைத்த மரம் நல்ல மரமாக இருப்பதால் ஒட்டவைத்தக் கிளை புளிப்புள்ளதாக இருந்தாலும் மரம் நல்ல கனிகளைக் கொடுக்கிறது. நாம் பாவிகளாக இருந்தாலும் ஒலிவ மரமாகிய கிறிஸ்துவோடு ஒட்டவைக்கப்படும்போது அவருடைய சாரத்துக்கும் வேருக்கும் பங்குள்ளவர்களாக மாறுகிறோம். திராட்சைச் செடியாகிய அவரில் நாம் வளரும்போது நல்ல கனிகளைக் கொடுக்க முடியும். வேர் பரிசுத்தமுள்ளதாயிருந்தால் கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும் (ரோமர் 11:16). பரிசுத்த வேராகிய அவருடைய சாரத்தில் வளரும் நாமும் பரிசுத்தவான்களாக மாறுகிறோம்.
ஐந்தாவதாக – நாம் அவருடைய திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாயிருக்கிறோம் (2பேதுரு 1:4)
நாம் கிறிஸ்துவைப்போல் மாறவேண்டும். அவரது அன்பு, பொறுமை, தாழ்மை, சாந்தம் இவைகளைப் பெற வேண்டும் என்ற வாஞ்சை நமக்கு வேண்டும். தேவ சாயலை அடைய வேண்டும் என்பதே தேவன் நம்மை அழைத்ததன் நோக்கமாகும் (ரோமர் 8:29). அவருடைய திவ்விய சுபாவத்தைப் பெற வேண்டுமானால் இச்சைகளுக்குத் தப்ப வேண்டும். இச்சை மிக மோசமானது. யோசேப்பு இச்சைகளுக்கு விலகி ஓடினான். தானியேலும் அவனது தோழர்களும் இராஜாவின் போஜனத்தால் கறைபடாதபடி அவற்றுக்கு விலகினார்கள். ஏவாள், இச்சித்து மோசம் போனாள். இச்சைகளுக்கு விலகி அவருடைய திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாக வேண்டும்.
ஆறாவதாக – நாம் அவருடைய பாடுகளுக்கு பங்காளிகளாயிருக்கிறோம் (1பேதுரு 4:13)
தேவனுடைய பாடுகளிலும் நாம் பங்குபெற வேண்டும். தேவனுடைய கட்டுகளில், துன்பங்களில், அடிகளில், பாடுகளில் நமக்குப் பங்குண்டு. அவரோடுகூட பாடுகளை சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் உண்டு. அவருடைய மகிமைக்குப் பங்காளியாக வேண்டுமானால் அவருடைய பாடுகளிலும் பங்குபெற வேண்டும் (ரோமர் 8:17). நாம் பாடுபடுகிறதினாலே சீர்படுகிறோம். கிறிஸ்து பாடுகளை பார்க்கவில்லை. தமக்கு முன் வைக்கப்பட்ட மகிமையையும், தான் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்காருவதையும் பார்த்தார். பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள முடிகிறது (எபி.5:8). பாடுபட்டுச் சகிக்கிறதினால் இரட்சிப்பு பலன் செய்கிறது (2கொரி.1:6). கிறிஸ்துவும் நமக்காக பாடுபட்டு நாம் அவருடைய அடிச்சுவடுகளை தொடர்ந்து வரும்படி மாதிரியை பின்வைத்துப் போனார் (1பேதுரு 2:21). கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற நம்மை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலைநிறுத்த அவர் வல்லமை உள்ளவராக இருக்கிறார்.
ஏழாவதாக – நாம் அவருடைய பரிசுத்தத்திற்கு பங்குள்ளவர்களாயிருக்கிறோம் (எபி.12:10)
நம்முடைய தேவன் பரிசுத்தமும் நீதியும் உள்ளவராக இருக்கிறார் (அப்.3:14). தேவன் தமது சத்தியத்தினாலே நம்மை பரிசுத்தமுள்ளவர்களாக்குகிறார். பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள் என்று ரோமர் நிருபக்காரன் எழுதுகிறார் (ரோமர் 6:19). பரிசுத்தமும் பிழையற்றதுமான சபையாக மாறும்படி நம்மை அழைக்கிறார் (எபே.5:27). நாம் பரிசுத்தமுள்ளவர்களாக மாறவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தெச.4:3). பரிசுத்த ஜீவியத்திற்கு வர நாம் மறுக்கும்போதே தேவன் நம்மை சிட்சிக்கிறார். தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல, பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். எனவே நாம் வேசியின் பிள்ளைகளாக போய்விடாதபடி நம்மை உணர்த்தி, சிட்சித்து பரிசுத்தமாக்குகிறார்.
பிரியமானவர்களே! அவருக்கு பங்காளிகளாக விரும்பும் நாம் அவரது பரம அழைப்புக்கும், தேவ கிருபைக்கும், அவரது வாக்குத்தத்தங்களுக்கும், அவரது வேருக்கும், சாரத்திற்கும், அவரது திவ்விய சுபாவத்திற்கும், பரிசுத்தத்திற்கும் பங்குள்ளவர்களாயிருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறந்துபோகக் கூடாது.
மாயையான நிழல்கள் ஒருபோதும் நமக்கு பாதுகாப்பைத் தராது. மாயையான நிழல்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டுஅவரது செட்டைகளின் நிழலிலே மறைந்து கொள்வோமாக.
நீங்கள் தேவனுக்குப் பங்காளிகள்
கிறிஸ்துவுக்குள்பிரியமானதேவப்பிள்ளைகளே! எல்லா மதங்களும் தேவனை உயர்ந்த இடத்திலும் மனிதனை தாழ்ந்த இடத்திலும் வைத்து...